கதை: நாணயம் காய்க்கும் மரம்!

கதை: நாணயம் காய்க்கும் மரம்!
Updated on
2 min read

செங்குன்று நாட்டை சீவகராஜன் ஆண்டுவந்தார். ஒரு நாள் அவர் கனவில் சிம்மாசனத்தைக் கண்டார். அது அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது. அதில் அவர் ஏறி அமர்ந்ததும் பறக்க ஆரம்பித்தது. வான் வீதியில் நாட்டை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.

கனவு கலைந்து சட்டென்று கண்விழித்தார் மன்னர். ‘ஆஹா! என்ன அற்புதம்! இதுவே உண்மையாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!’
மறுநாள் அமைச்சர் தர்மசீலனை வரவழைத்தார் மன்னர். தான் கனவில் பார்த்ததைச் சொன்னார்.
“அமைச்சரே, அப்படி ஒரு பறக்கும் சிம்மாசனம் எனக்கு வேண்டும்.”
அதிர்ச்சி அடைந்த அமைச்சர், “மன்னா, கனவில் கண்டதை எல்லாம் நிஜமாக்குவது சாத்தியமா?” என்றார்.
“மந்திரங்கள் தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இதை உருவாக்கச் சொல்லுங்கள். பொன்னும் பொருளும் கொடுத்துவிடலாம்.”
மன்னரின் கட்டளைப்படி நாடு முழுவதும் செய்தி தெரிவிக்கப்பட்டது. நாள்கள் கடந்தன. ஒருவரும் பறக்கும் சிம்மாசனத்தை உருவாக்க முன்வரவில்லை.
“என் கனவை நிறைவேற்றும் அளவுக்கு இங்கு யாருக்குமே திறமை இல்லையா?” என்று கேட்டார் மன்னர்.
“மன்னா, இன்னும் இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள். பறக்கும் சிம்மாசனம் செய்பவரை அழைத்து வருகிறேன்” என்று அமைச்சர் சொன்னதும் மன்னர் தலையசைத்தார்.
மறுநாள் காலை மன்னரின் அரசவைக்கு முதியவர் ஒருவர் வந்தார்.


“மன்னா, தங்களிடம் நான் ஒரு திருட்டு வழக்கைப் பற்றிப் புகார் அளிக்க வந்துள்ளேன். நேற்று கனவில் என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு தங்க நாணய மரத்தைக் கண்டேன். அதில் நிறைய தங்க நாணயங்கள் காய்த்துத் தொங்கின. எங்கிருந்தோ வந்த திருடன் அந்த மரத்தைப் பிடுங்கித் தன் தோளில் சுமந்து சென்றான். என் நாணயம் காய்க்கும் மரத்தைத் தாங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்” என்று வருத்தத்துடன் கூறினார் முதியவர்.
“என்ன, நாணயம் காய்க்கும் மரமா? அதுவும் கனவில் கண்ட மரத்தை நான் தேடிக்கொடுக்க வேண்டுமா? உளறாமல் இங்கிருந்து கிளம்புங்கள்” என்று கோபப்பட்டார் மன்னர்.
முதியவர் சிரித்தார்.
“மன்னா, கனவில் வந்த பறக்கும் சிம்மாசனத்தை உருவாக்குவது சாத்தியம் என்றால், தங்க நாணயம் காய்க்கும் மரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சாத்தியம்தானே?”
சற்று யோசித்த மன்னர், “நீர் யார்? உண்மையைக் கூறும்” என்றார்.
“மன்னா, தங்களால் தேடித்தர இயலாது என்று சொன்னால், என்னைப் பற்றிச் சொல்கிறேன்.”
“அது சாத்தியம் இல்லாதது.”
முதியவர் தன் வேடத்தைக் கலைத்தார். மன்னர் வியந்தார்.
“அமைச்சரே, பறக்கும் அரியணை செய்ய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர். என் கனவை வைத்தே எனக்குப் புரிய வைத்துவிட்டீர்.”
“மன்னா, தாங்கள் பறக்கும் சிம்மாசனம் கேட்டதால், வேறு வழியின்றி இப்படி நடந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. என்னை மன்னிக்கவும்.”
“இதில் உம் தவறு ஏதுமில்லை. கனவில் கண்டதை நிறைவேற்ற நினைத்தது என் தவறுதான். அதை இப்போது உணர்ந்துவிட்டேன்” என்று மன்னர் சிரிக்கவும் அமைச்சர் நிம்மதியடைந்தார்.

- ஜி. சுந்தரராஜன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in