Published : 25 May 2023 02:15 PM
Last Updated : 25 May 2023 02:15 PM

மக்களின் மனங்களை வென்ற மிஸ்டர் பீன்

இவர் ஒன்றும் அறியாத அப்பாவியா அல்லது எல்லாம் அறிந்த புத்திசாலியா என்று பார்வையாளர்களை எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்துபவர் மிஸ்டர் பீன். மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளை, வித்தியாசமான உடல்மொழியில் செய்ததுதான் அவரைப் புகழின் உச்சிக்குச் சென்று சேர்த்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மிஸ்டர் பீன், இங்கிலாந்தில் பிறந்தவர். ரோவன் செபாஸ்டியன் அட்கின்சன் என்பது இவரது இயற்பெயர். மற்ற குழந்தைகளைப் போல் ரோவனால் சரளமாகப் பேச இயலாது. அவருக்குப் பேச்சுக் குறைபாடு இருந்தது. தோற்றத்தாலும் பேச்சாலும் சிறுவயதிலிருந்து பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். இதனால் எதையும் துணிச்சலாகச் செய்ய அவரால் இயலவில்லை. எல்லாவற்றிலும் தயக்கம் இருந்தது. நண்பர்களும் கிடையாது. நிராகரிப்புகளும் தனிமையும் ரோவனை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளின. ஒருகட்டத்தில் தன்னை மீட்டெடுத்த ரோவன், ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார். அப்போதுதான் நடிப்பின் மீது ரோவனுக்கு ஆர்வம் வந்தது.

ஒரு நகைச்சுவைக் குழுவில் சேர்ந்து, நடிக்க விரும்பினார். ரோவனின் பேச்சுக் குறைபாடு அங்கும் அவருக்கு இடையூறாக இருந்தது. நிராகரிப்புகள் தொடர்ந்தாலும் ரோவன் மனம் தளரவில்லை. தானே நகைச்சுவை கதைகளை எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய கதாபாத்திரங்களில் நடித்தும் பார்த்தார். அவருக்குப் பிடித்த சில கதாபாத்திரங்களில் நடித்தபோது, பேச்சு சரளமாக வந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். இனி தன் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அமைந்தது. அப்பாவியான தோற்றமும் நகைச்சுவையும் ரோவனுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிஸ்டர் பீனைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று ரோவனின் பயணம் வளர்ந்துகொண்டே சென்றது. மிஸ்டர் பீன் காமிக் புத்தகங்களும் வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்தன. 68 வயதிலும் நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர் போன்ற பணிகளில் உத்வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ரோவன். எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துவிட்டாலும் ரோவனை இன்னும் மிஸ்டர் பீனாகவே மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

- ஸ்ருதி பாலசுப்ரமணியன், பயிற்சி இதழாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x