

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் பிரம்மாண்டமான டைனசோர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். ஆபத்தான விலங்குகளாகத் தெரிந்தாலும் அவற்றை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியிருக்கும். ஆனால், டைனசோர்கள் அழிந்து 6.5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது டைனசோர்களை உயிருடன் கொண்டுவர முடியுமா?
ஒவ்வோர் உயிரினத்துக்கும் டி.என்.ஏ. இருக்கிறது. இந்த டி.என்.ஏ.தான் அந்த உயிரினத்தின் உருவம், பண்பு, இனப்பெருக்கம் உள்ளிட்டவை எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வரைபடம். மறைந்துபோன உயிரினங்களின் டி.என்.ஏ. எச்சங்கள் படிவங்களில் (Fossil) இருக்கும். அந்த டி.என்.ஏ.வின் தகவலை எடுத்து குளோனிங் மூலம் அந்த விலங்கை உருவாக்கலாம். இதை விஞ்ஞானிகள் 1996இல் சாத்தியப்படுத்திவிட்டார்கள்.
அப்படி என்றால் டைனோசரை எளிதாக உருவாக்கிவிடலாமா? இல்லை. ஒரு விலங்கை குளோனிங் மூலம் உருவாக்க, அந்த விலங்கின் டி.என்.ஏ.வில் இடம்பெற்றுள்ள மரபணுத் தொகுதிகள் (Genome) அத்தனையும் வேண்டும். ஓர் உயிரினம் இறந்த உடனே அதன் டி.என்.ஏ.வும் சிதையத் தொடங்கிவிடுகிறது. ஒரு விலங்கின் மரபணுத் தகவல்கள் பாதியாக அழிவதற்கு 521 ஆண்டுகள் எடுக்கின்றன. பனிப்பாறைகளில் உறைந்த விலங்குகளின் டி.என்.ஏ. சிதைவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகலாம்.
டைனசோர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்பதால் அவற்றின் மரபணுத் தொகுதி எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதனால், அவற்றை மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்து, இறந்த விலங்குகளின் படிமங்களில் இருந்து அவற்றின் டி.என்.ஏ.க்களை ஓரளவு எடுக்க முடியும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, மறைந்த கம்பளி யானையை (Wolly Mammoth) உயிருடன் கொண்டுவரும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால், அதன் மரபணுத் தொகுதிகள் முழுமையாகக் கிடைக்காததால் குளோனிங்குக்குப் பதில் வேறு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அதாவது, அழிந்த விலங்குகளின் டி.என்.ஏ.க்களை எடுத்து அவற்றை உருவாக்குவதற்குப் பதில், இப்போது வாழ்ந்துவரும் விலங்குகளின் டி.என்.ஏ.க்களை மாற்றி உருவாக்க முனைகின்றனர். அழிந்த ஒரு விலங்குக்கு நெருக்கமான மரபணுத் தொடர்பு கொண்ட விலங்கு நிச்சயம் இருக்கும். அவற்றின் மரபணுக்களை எடுத்து, அழிந்த விலங்கின் மரபணுக்களை அதில் பொருத்த முயற்சி செய்கிறார்கள்.
கம்பளி யானை மீட்பில், ஆசிய யானைகளின் மரபணுத் தொகுதியை எடுத்து, அதில் கம்பளி யானைகளின் தனித்தன்மை வாய்ந்த மரபணுக்களை மாற்றி அமைக்கின்றனர். இப்போது இந்தக் கலப்பு மரபணுக்களை வாழும் ஆசிய யானையின் கருப்பைக்குள் வைத்து வளர்க்கும்போது, ஒரு கலப்பின கம்பளி யானை உருவாகிவிடும். இதன்மூலம் ஆசிய யானைக்கு கம்பளித் தோல், பிரம்மாண்ட தந்தம், குளிரைத் தாங்கும் உடல் போன்றவை இருக்கும்.
மரபணுக்களை மாற்றியமைக்க உதவும் கருவிகள் மூலம் டி.என்.ஏ.வின் லட்சக்கணக்கான இழைகளில், நமக்குத் தேவையான மரபணுத் தொகுதியைக் கண்டுபிடித்து மாற்றி அமைக்கின்றனர். இது அவ்வளவு சுலபம் அல்ல.
இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒரு சில கம்பளி யானைகளுக்கு உயிர்கொடுப்பதால் ஒட்டுமொத்த இனத்தையும் மீட்டுவிட்டோம் என்று சொல்லிவிட முடியாது. குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளில் குறைந்த அளவில்தான் மரபணு வேறுபாடுகள் (Genetic Diversity) இருக்கும்.
இதனால், ஒரு யானைக்கு நோய்த் தொற்றினால் மொத்தமாக அழிந்துவிடும். அவற்றுக்கு இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் இல்லாமல் போகலாம். எனவே ஆரோக்கியமான கம்பளி யானை இனத்தை உருவாக்க, அவற்றை ஆயிரக்கணக்கிலாவது உருவாக்க வேண்டும். இதற்கு ஏராளமான பணம் தேவைப்படும்.
அதேபோல அழிந்த உயிரினங்களைக் கொண்டுவர முடிந்தாலும், அந்த விலங்குகள் வாழ்ந்த புறச்சூழலை இப்போது கொண்டுவர முடியுமா? அரியலூரில் டைனசோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன. அங்கே டைனசோர்கள் வாழ்ந்தபோது இருந்த உணவு, அவற்றை உயிருடன் வைத்திருந்த நுண்ணுயிர்கள், தாவரங்கள் உள்ளிட்ட சூழலியல் தொகுதி (Eco System) இப்போது இல்லை. அதனால், அழிந்த உயிரினங்களை மீட்டுக்கொண்டு வருவது மிகவும் சிக்கலானது. சவாலானது. பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து என்ன செய்யலாம்?
ஏற்கெனவே அழிந்துபோன உயிர்களைக் கொண்டு வருவதற்குப் பதில், இப்போது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றலாம். பூமியில் உருவான ஓர் உயிரினம் பரிணாமம் காரணமாகக் காலப்போக்கில் அழிவது இயற்கைதான். ஆனால், மனிதர்களால் இன்றைய உயிரினங்கள் 10 ஆயிரம் மடங்கு வேகத்தில் அழிகின்றன. இந்த நூற்றாண்டின் முடிவில் 30 – 50 சதவீத உயிரினங்கள் அழிந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. இவற்றை நாம் தடுக்கலாம்.
சமீபத்தில் அழிந்த, அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அவற்றின் இடையே மரபணு மாறுபாடுகளும் அதிகரிக்கும்போது அந்த விலங்குகளும் ஆரோக்கியமானதாக மாறும். இப்படியாக நம் பூமியின் அழிந்துவரும் உயிரினங்களைக் காப்பாற்றலாம்.
(விடைகளைத் தேடுவோம்)
- tnmaran25@gmail.com