

மரத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த குருவி, பேச்சுக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தது.
இரண்டு புறாக்களில் ஒன்று, “நாளை நாம் சொர்க்க பூமிக்குச் செல்லப் போகிறோம்” என்றது.
“சொர்க்க பூமியா?”
“ஆமா, பேருக்கு ஏற்ற மாதிரி சொர்க்கமா இருக்கும். அடர்ந்த காடு. வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் பாடல்னு சூழல் இனிமையா இருக்குமாம்! பழங்கள், தானியங்கள் எல்லாம் சாப்பிட ஆள் இல்லாமல் தரையில் விழுந்து கிடக்குமாம்!”
“ஆ... அந்தச் சொர்க்கம் எங்கே இருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டது குருவி.
“எனக்குத் தெரியாது. நாளை என் நண்பன் வந்து அழைத்துச் செல்வான். நீயும் எங்களுடன் வா” என்று அன்போடு அழைத்தது புறா.
குருவியால் மறுநாள் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை. “இனி, ஒரு நொடி தாமதிக்க மாட்டேன். உங்களைச் சொர்க்கத்தில் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
வழியில் ஒரு மனிதரிடம் வழி கேட்டது. அவர் குருவியின் இறகு ஒன்றைத் தந்தால் வழி சொல்வதாகச் சொன்னார். யோசிக்காமல் ஓர் இறகைக் கொடுத்தது குருவி.
மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த குருவி வழியில் முயல், மான், பன்றி, காட்டெருமை, குரங்கு என்று பலவற்றிடம் வழி கேட்டது. அவையும் ஆளுக்கு ஓர் இறகை வாங்கிக்கொண்டு வழிகாட்டின.
இப்போது குருவியின் உடலில் இறகுகளே இல்லை. இன்னும் சில நிமிடங்கள் பறந்தால் சொர்க்க பூமியை அடைந்துவிடலாம். ஆனால், பறக்க முடியவில்லை.
‘ஐயோ... யோசிக்காமல் இறகுகளைக் கொடுத்துவிட்டேன்... புறாக்களுடன் வந்திருக்கலாம். இறகுகள் முளைக்கும் வரை காத்திருக்கணுமே’ என்று வருத்தப்பட்டது குருவி.
உதவி
குளத்தின் கரையில் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தான் நகுலன். அங்கு வந்த முதலை, “என் கால் வேரில் சிக்கிக்கொண்டது. அதை எடுத்துவிட்டால் நன்றியோடு இருப்பேன்” என்று கண்ணீர் விட்டது.
“ஆ... உன் கண்ணீரை நம்ப முடியாது. நீ என்னைக் கொன்றுவிடுவாய்.”
“உதவி செய்தவரைக் கொல்லும் அளவுக்கு நான் நன்றி இல்லாதவன் இல்லை” என்று சொல்லிவிட்டு ஒரு குடம் கண்ணீரைச் சிந்தியது முதலை.
பாவப்பட்ட நகுலன், வேரிலிருந்து காலை விடுவித்தான். உடனே முதலை அவனைக் கவ்விக்கொண்டது.
“உன்னை நம்பி உதவியதற்கு நீ காட்டும் நன்றியா?”
“எனக்குப் பசி. அதனால், உன்னை இப்படி வரவழைத்தேன். நீ புத்திசாலியாக இருந்திருந்தால் எனக்கு உதவி செய்திருக்கக் கூடாது. இந்த வழியே கடந்து செல்லும் மூன்று பேரிடம் நியாயம் கேட்போம்” என்றது முதலை.
அந்தப் பக்கமாக வந்த கழுதையிடம் நடந்ததைச் சொல்லி நகுலன் நியாயம் கேட்டான். “என் உரிமையாளர் எனக்கு இரக்கம் காட்டுவதில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றது கழுதை.
அடுத்து வந்த குதிரையிடம் நியாயம் கேட்டான் நகுலன். “என் உரிமையாளர் ஓய்வே கொடுப்பதில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றது குதிரை.
மூன்றாவதாக முயல் வந்தது. அதனிடமும் நியாயம் கேட்டான் நகுலன். “நான் முதலையின் கருத்தையும் கேட்க வேண்டும்” என்றது முயல்.
தயங்கியது முதலை. “நீ பேசலைனா இவனுக்குச் சாதகமா சொல்லிடுவேன்” என்றது முயல். உடனே நகுலனை விட்டுவிட்டு, பேச ஆரம்பித்தது முதலை. வேகமாகக் கரையேறினான் நகுலன்.
“முயலே, உன் உதவிக்கு நன்றி.”
“யாருக்கு உதவுகிறோம் என்பதும் முக்கியம்” என்று சொல்லிவிட்டு, முயல் ஓடிவிட்டது.
முயற்சி
துறைமுகத்தில் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் நின்றது. மேல்தளத்தில் உணவுப் பொருள்கள் சிதறிக் கிடந்தன. பசியோடு அந்த வழியே வந்த காகம், மகிழ்ச்சியாகக் கப்பலில் கிடந்த உணவைச் சாப்பிட்டது. இன்னும் சில நாள்களுக்கு உணவு தேடி எங்கும் செல்ல வேண்டாம் என்று நினைத்து உறங்கியது.
திடீரென்று காகம் கண்விழித்தபோது எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. நட்சத்திரங்கள் அங்கும் இங்குமாக மின்னிக்கொண்டிருந்தன. எங்கே இருக்கிறோம், கரைக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று எதுவும் தெரியாததால் வருத்தத்தில் அமர்ந்துவிட்டது காகம்.
காலை சூரிய வெளிச்சத்தில் கரை தெரிகிறதா என்று பார்த்தது. கடல்நீரைத் தவிர எதுவும் புலப்படவில்லை. இனிமேலும் காத்திருந்தால் நல்லதல்ல என்று நினைத்த காகம், பறக்க ஆரம்பித்தது.
நீண்ட தூரம் பறந்தும் கரை தெரியவில்லை. ‘நான் கடல் பறவை அல்ல. என்னால் ஓய்வெடுக்காமல் நீண்ட நேரம் பறக்க முடியாது. உணவுக்கு ஆசைப்பட்டு, இப்படிச் சிக்கிக்கொண்டேனே... முடிந்த வரை பறந்து பார்க்கணும்’ என்று சொல்லிக்கொண்டே பறந்தது காகம்.
சற்று நேரத்தில் ஒரு பாய்மரக் கப்பல் தெரிந்தது. நம்பிக்கையோடு பறந்து சென்று, அதில் அமர்ந்தது காகம். சில மணி நேரத்தில் பாய்மரக் கப்பல் கரையை அடைந்தது. ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் மகிழ்ச்சியாகப் பறந்து சென்றது காகம்.
- தங்க. சங்கரபாண்டியன்