

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று துணைக்கோளான நிலா. அது பூமியில் உள்ள உயிர்களைக் கட்டுப்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா? பூமியில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் உயிரியல் கடிகாரங்கள் (Biological Clock) இருக்கின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் 24 மணி நேரம், சூரியனைச் சுற்றிவரும் 365 நாள்கள், பருவக்காலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப உயிரியல் கடிகாரங்கள் மாறுபடும். உயிரினங்களின் தூக்கம், பசி, வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம் உள்ளிட்டவை இந்த உயிரியல் கடிகாரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிரியல் கடிகாரங்களின் காரணிகளில் ஒன்றாக ‘நிலவு சுழற்சி’யும் (Lunar Cycle) இருக்கிறது. நிலவு சுழற்சி என்பது அமாவாசையில் இருந்து பவுர்ணமி வரையிலான 29.5 நாள்கள். இந்த நாள்களில் நிலவொளியில் ஏற்படும் மாற்றம் உயிரினங்களின் இனப்பெருக்கம், இரை தேடல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மாற்றி அமைக்கிறது.
உதாரணமாக, முழுநிலவு அன்று ஆப்பிரிக்கச் சிறுமான்களில் ஆண்கள் இடும் சத்தம், பெண் மான்களை ஈர்க்கிறது. மற்ற நாள்களில் அதே சத்தம் பெண் மான்களை ஈர்ப்பதில்லை. அதேபோல கடலில் வாழும் ஒருவகைப் புழுக்கள் (Marine Bristle Worms) அமாவாசையின்போது மட்டும் நீரின் மேற் பரப்பிற்கு வந்து கூடுகின்றன.
நிலவின் ஈர்ப்பு விசை பூமியில் எழும் கடல் அலைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஈர்ப்பு விசை பூமியின் எந்தப் பக்கத்தை நோக்கி அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் உள்ள கடலில் உயர் அலைகள் எழும். Grunion எனும் மீன்கள், உயர் அலைகள் எழும்போது கடற்கரையில் முட்டையிடுகின்றன.
இந்த முட்டைகள் மணலில் புதைந்து, பாதுகாப்பாகக் குஞ்சுகள் வளர்கின்றன. நிலவு சுழற்சியில் மீண்டும் உயர் அலைகள் எழும் காலத்தில், இந்த மீன் குஞ்சுகள் பொறிக்கப்பட்டுக் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. இதுபோல நிலாவுக்கும் உயிரினங்களுக்கும் இருக்கும் உறவைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நிலாவுக்கு உயிரினங்கள் ஏன் கட்டுப்படுகின்றன? - உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்தில் இருந்தே நிலாவும் இருக்கிறது. இதனால் அதன் தாக்கம் உயிர்களின் வாழ்நிலையில் ஒன்றாகக் கலந்துவிட்டது. உயிரினங்கள் தங்களுக் குள்ளேயே நிலவுக் கடிகாரத்தை வைத்துள்ளன. விஞ்ஞானிகள் கடல் புழுக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, அதில் ஒரு குழுவைத் தொடர்ச்சியாக வெளிச்சத்தின் கீழ் வளர்த்தனர்.
மற்றொரு குழுவை இருளில் வளர்த்தனர். நன்றாக வளர்ந்த பின்னும் அந்தப் புழுக்கள் இனப்பெருக்கம் செய்யவில்லை. பிறகு நிலவு சுழற்சி அட்டவணையின்படி அருகில் ஒரு விளக்கை அமைத்து, அதன்மூலம் ஒளியைப் பாய்ச்சினர். அதிசயமாக இப்போது புழுக்கள் இனப்பெருக்க நடனத்தைத் தொடங்கின.
இது ஏன் நடைபெறுகிறது என்று ஆராய்ந்தபோது, அந்தப் புழுக்களின் மூளையில் இருந்த சில நரம்பணுக்கள் நிலவொளிக்கு ஏற்றவாறு மாற்றம் அடைவது தெரியவந்தது. இதனால் பரிணாம வளர்ச்சியின்கீழ் மரபணுக்கள் வழியாகவே அவை நிலாவுக்குக் கட்டுப்படும் கட்டளைகளைப் பெற்றிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். பௌர்ணமி வெளிச்சம் விலங்குகள் வேட்டையாடு வதற்கு, பயணம் செய்வதற்கு உதவுகிறது.
ஆனால், இந்த வெளிச்சமே வேட்டையாடப்படும் விலங்குகளுக்கு ஆபத்தாகவும் முடியும் என்பதால், அவை தங்களைக் காத்துக்கொள்ள நிலவைச் சார்ந்தே நடவடிக்கைகளை மாற்றிக்கொள்கின்றன. பெரும்பாலான தவளைகள் பவுர்ணமி இரவில் சத்தமிடுவதில்லை. அதிக வெளிச்சம் காரணமாகத் தங்களது இருப்பிடத்தை எதிரிகள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கின்றன.
நிலாவின் ஒளி மத்தியத் தரைக்கடல் பகுதியில் வாழும் தாவரங்களைக் கண்ணீர் வடிக்க வைப்பதாகச் சொல்லப்படுவது உண்டு. Ephedra foeminea என்கிற செடிகள் பூப்பதில்லை. அதனால் அவை மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளையே நம்பியிருக்கின்றன. மலர்கள் இல்லாத அந்தச் செடிகளைப் பூச்சிகள் நெருங்குவதில்லை.
அதனால், ஒருவித மகரந்த திரவத்தைச் சுரக்கின்றன. (இதைத்தான் அந்தச் செடிகள் கண்ணீர் வடிப்பதாகச் சொல்லிவிட்டனர்.) அதாவது அந்தத் திரவம் நிலவு ஒளியில் மின்ன, அதனால் ஈர்க்கப்படும் பூச்சிகள் செடிகளை நோக்கி வருகின்றன. இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெற்று, சந்ததிகள் உருவாகின்றன.
இப்படி நிலாவை ஒட்டிப் பல அதிசயங்கள் நடக்கின்றன. ஆனால், அதிகரித்துவரும் செயற்கை ஒளியால், நிலவு ஒளியை நம்பி வாழும் உயிரினங்கள் பெரிதாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுத் தேடல், இனப்பெருக்கம் உள்ளிட்ட உயிரினச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்பட்டு அவை அழியும் நிலைக்கே செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மனிதர்களைப் பாதிக்குமா? - மனிதர்களுக்குப் பித்துப்பிடித்தலை ஆங்கி லத்தில் Lunacy என்பார்கள். இந்தச் சொல் Lunar என்கிற நிலாவைக் குறிக்கும் சொல்லில் இருந்துதான் வந்துள்ளது. முழு நிலவின் போது குழந்தைப் பிறப்பு, விபத்துகள் அதிகரிப்பதாக இன்றும் நம்பப்படுகிறது.
ஆனால், இவை எதற்கும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை.எது எப்படியோ, மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களை நிலா ஆட்டிப்படைப்பது உறுதியாகிவிட்டது. அதனால் அடுத்த முறை நிலாவைப் பார்க்கும்போது, கதைகளோடு அறிவியலையும் சேர்த்து யோசிப்பீர்கள்தானே!
(விடைகளைத் தேடுவோம்)
- tnmaran25@gmail.com