கதை: ஒரு புன்னகையின் கதை

கதை: ஒரு புன்னகையின் கதை
Updated on
2 min read

மசூசி சத்தம் போடாமல் அந்த வீட்டை நெருங்கினாள். அவள் கை பட்டதும் வீட்டின் பெரிய இரும்புக் கதவு ‘கிறீச்’ என்று சத்தம் எழுப்பியபடி தானாகவே திறந்துகொண்டது. ஒரு பூனையைப் போல் அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் மசூசி. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம், 12.05 என்றது.

மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. மசூசி இரண்டாவது அறையை நெருங்கினாள். மங்கிய ஒளியில் ஒரு சிறுமியின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. மசூசி தன் வேலையை மறந்துவிட்டாள். உறக்கத்திலும்கூட இந்தச் சிறுமி எதற்கோ புன்னகைத்துக் கொண்டிருப்பது ஏன்? கனவு காண்கிறாளா?

பொதுவாக ஓரிரு விநாடிகளில் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவதுதான் மசூசியின் வழக்கம். ஆனால், முதல் முறை தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள். வைத்த கண் வாங்காமல் அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘என்னால் ஒருபோதும் இப்படி உறங்கவே முடியாது. கனவு காணும் வாய்ப்பு எனக்கு ஏற்படவே போவதில்லை. இவளாவது நிம்மதியாக உறங்கட்டும்.’

மசூசி அந்த அறையைவிட்டு வெளியேறினாள். வரவேற்பறையின் விளக்கு திடீரென்று உயிர் பெற்றது. மசூசியை யாரோ பார்த்துவிட்டார்கள்.

“ஐயோ... பேய், பேய், பேய்...”

மசூசி ஓடியபடியே திரும்பிப் பார்த்தாள். அந்தச் சிறுமி மசூசியை நோக்கி கையை அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இன்னமும் அதே புன்னகை!

இரும்புக் கதவைத் தாண்டி வந்து நின்றாள் மசூசி. என்ன அழகான ஒரு புன்னகை! அதுவும் என்னைப் பார்த்துப் பயப்படாமல் முதல் முறையாக ஒரு சிறுமி புன்னகை செய்திருக்கிறாள்! மறக்க முடியுமா இந்த இரவை? மறக்க முடியுமா இந்த அனுபவத்தை?

ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டாள் மசூசி. அப்போது பாகூ அவளிடம் ஓடிவந்தாள்.

“என்ன மசூசி, போன வேலை முடிந்ததா? அந்தச் சிறுமியை பயமுறுத்திவிட்டாயா?”

“இல்லை பாகூ.”

“நான் இதுவரை நான்கு குழந்தைகளின் உறக்கத்தைக் கலைத்துவிட்டேன். ஒவ்வொன்றும் வீல், வீலென்று கத்தின. ஹாஹா...”

இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

“இன்று என்னை அரசர் பாராட்டப் போகிறார். சரி, அடுத்து நீ எந்த வீட்டுக்குச் செல்லப் போகிறாய்?” என்றாள் பாகூ.

“நான் எங்கும் போகப் போவதில்லை.”

“ஏன், என்ன ஆச்சு?”

“பாகூ, நீ ஆர்வமாகத்தான் இந்த வேலையைச் செய்கிறாயா?”

“ஆமாம், அதுதானே நம் வழக்கம்?”

“இன்று முதல் முறையாக ஒரு குழந்தை என்னைப் பார்த்துப் புன்னகை செய்தது.”

“வாய்ப்பே இல்லை. நம்மைப் போன்ற பேய்களைக் கண்டு பயப்படுவதுதான் மனிதர்களின் வழக்கம்.”

“இல்லை, அந்தக் குழந்தை என்னைப் பார்த்தது. என்ன அழகாக அது உறங்கியது தெரியுமா? அதற்குக் கனவுகள் எல்லாம் வரும் என்று நினைக்கிறேன்.”

“உனக்கு ஏன் இந்த ஆராய்ச்சி? போனோமா, பயமுறுத்தினோமா, வந்தோமா என்று இருக்கணும். அரசருக்கு என்ன பதில் சொல்வாய்?”

“இல்லை பாகூ. எந்தக் குழந்தையின் உறக்கத்தையும் இனி நான் கலைக்கப் போவ தில்லை. நானும் அந்தக் குழந்தையைப் போல் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்க வேண்டும். நள்ளிரவுக்கு மேல் அல்ல, பகலிலேயே சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டும்.”

மசூசிக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்த பாகூ, அங்கிருந்து கிளம்பினாள்.

மசூசி யோசனையுடன் நடக்கத் தொடங்கினாள். தினம் தினம் தான் செய்த மாயங்களையும் அவற்றைக் கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயந்து அலறியதையும் நினைத்துப் பார்த்துக்கொண்டாள். கருங்கல் கோட்டையில் உள்ள அரசனையும் நினைத்துக்கொண்டாள். தினமும் குறைந்தது பத்துக் குழந்தைகளின் உறக்கத்தையாவது கலைத்தால்தான் அவர் திருப்தியடைவார். பதினைந்து என்றால் பரிசு கொடுப்பார்!

போதும். இதுவரை செய்த தவறுகள் போதும். எனக்கும் இரு கைகள், இரு கால்கள், இரு கண்கள், உதடுகள் எல்லாம் இருக்கின்றன. என்னாலும்கூடப் புன்னகை செய்ய முடியும் அல்லவா? எதற்காக இப்படி இருளோடு இருளாகத் திரிய வேண்டும்?

மீண்டும் அந்தச் சிறுமியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அந்த வீட்டை நெருங்கினாள் மசூசி. இப்போது விளக்குகள் அணைந்திருந்தன.

மசூசி அதிர்ச்சியடைந்தாள். அந்தச் சிறுமி வாசல்படியில் அமர்ந்திருந்தாள். எனக்காகவே இவள் காத்திருக்கிறாளா?

“நீ ஏன் எதுவுமே பேசாமல் ஓடிவிட்டாய்? இதற்கு முன் உன்னைப் பார்த்ததே இல்லையே. உன் பெயர் என்ன?”

“மசூசி.”

“என் பெயர் ரூபி. உன்னைப் பேய் என்று என் அப்பா நினைத்துவிட்டார்.”

“ஓ...”

“எனக்குத் தூக்கம் வரவில்லை. உனக்கு?”

“நான் தூங்குவதே இல்லை.”

“ஆச்சரியம்தான். அப்படியானால் உனக்கு கனவே வராதா?”

மசூசி தலையசைத்தாள்.

ரூபி தன் கையை நீட்டினாள். மசூசி நடுக்கத்துடன் அந்தக் கையைத் தொட்டாள்.

“இனி நாம் நண்பர்கள். தினமும் சந்திப்போம். ஆனால், இவ்வளவு நேரம் கழித்து வராதே, காலையிலேயே வந்துவிடு.”

துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கினாள் மசூசி. பாகூவிடம் இதைச் சொல்ல வேண்டும். அவளையும் எப்படியாவது மாற்ற வேண்டும். இன்று நிச்சயம் உறக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றியது. உறங்கினால் நிச்சயம் கனவும் வரும் இல்லையா?

- marudhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in