

உலகில் சுமார் 87 லட்சம் உயிரினங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவற்றில் மனிதர்கள் அஞ்சி நடுங்குவது விஷத்தன்மை கொண்ட உயிரினங்களுக்குதாம். பூமியில் உள்ள உயிரினங்களில் 15 சதவீதம் விஷத்தன்மை கொண்டவை. இவற்றில் ஒவ்வோர் உயிரினமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக விஷத்தைப் பயன்படுத்துகின்றன.
சில விலங்குகள் பாதுகாப்புக்கும், சில விலங்குகள் வேட்டையாடுவதற்கும், சில விலங்குகள் சண்டையிடுவதற்கும்கூட விஷத்தைப் பயன்படுத்துகின்றன. விஞ்ஞானிகள் விஷத்தை அளவிடுவதற்கு LD50 (lethal dose 50) என்கிற பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த LD50 எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விஷம் கடுமையானது.
முதலில் தோன்றிய விஷ உயிரினங்கள்: சில கடல்வாழ் உயிரினங்கள்தாம் தொடக்க கால விஷ உயிரினங்களாக அறியப்படுகின்றன. இவற்றின் காலம் 60 கோடி ஆண்டுகள். அதன்பின் சிலந்திகள், தேள்கள் உள்ளிட்டவை. இவற்றுடன் ஒப்பிடும்போது நாம் பார்த்து நடுங்கும் பாம்புகள் வெறும் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவைதாம். பூமியில் ஏராளமான விஷ உயிரினங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே மூதாதையரைக் கொண்டிருக்கவில்லை.
புறச்சூழல்களுக்கு ஏற்ப தேவைப்படும்போது மரபணுக்குள் மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு விலங்குகள், பல்வேறு இடங்களில் ஒன்றை இன்னொன்று சாராமல் விஷத்தன்மையைப் பெற்றிருக்கின்றன. இதனால்தான் தேளுக்கும் விஷம் இருக்கிறது. பாம்புக்கும் விஷம் இருக்கிறது. இதனை ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி (Convergent evolution) என்று அழைக்கிறார்கள்.
விஷம் எப்படி உருவாகிறது? - விஷம் என்பது புரதங்கள்தாம். புரதங்களை உருவாக்கும் சில மரபணுக்கள் பிரதியெடுக்கப்படும்போது, அவற்றில் ஏற்பட்ட மாற்றம் விஷத்தன்மையைப் பெற்றன. மரபணுக்கள் புதிய பண்புகளைப் பெறுவதைப் புதிய செயல்பாட்டுமயமாதல் (Neofunctionalization) என்கிறார்கள்.
சில வகைப் பாம்புகளின் உடலுக்குள் உற்பத்தியாகும் நொதி செரின் புரோட்டீஸ். இந்த நொதி பாம்புகளுக்குக் காயம் ஏற்படும்போது ரத்தம் கசிந்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, ரத்தத்தை உறைய வைக்கும் வேலையைச் செய்கிறது. இந்த நொதியை உருவாக்கும் மரபணு உடலில் பிரதியெடுக்கப்படும்போது புதிய பண்புகளைப் பெற்று விஷமாகிறது.
விஷத்தைக் கொண்டுள்ள பாம்புகள் எதிரிகளைத் தீண்டும்போது, அந்த நொதியும் எதிரிகளின் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையைப் பாதிக்கிறது. இதனால் எதிரிகளின் உடலில் ரத்தம் உறைந்தோ கசிந்தோ இறப்பு ஏற்படுகிறது.
உலகில் பல வகை நச்சுகள் இருக்கின்றன. சில நச்சுகள் ரத்தத்தை உறைய வைத்துக் கொல்பவை. சில நச்சுகள் மூளை நரம்புகளைப் பாதித்துச் செயலிழக்க வைப்பவை. தசைகளைப் பாதிப்படைய வைத்து கொல்லும் நச்சுகளும் உண்டு. இதனால்தான் பாம்பு கடித்தவுடன் எந்தப் பாம்பு நம்மைக் கடித்தது என்று தெரிந்துகொள்வது அவசியமாகிறது. விஷங்களுக்குப் பொதுப்பண்பு கிடையாது.
விஷ எதிர்ப்பு விலங்குகள்: சில விலங்குகளின் மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம் விஷ எதிர்ப்பைப் பெற்றுள்ளன. பாம்புகளால் யானையைக்கூட கொல்ல முடியும். ஆனால், கீரிகளைக் கொல்ல முடியாது. ஒப்போசம் விலங்கைக் கண்டால் பாம்புகளுக்கே படை நடுங்கும். ஒப்போசமின் உடல் எல்லா வகை பாம்பு விஷங்களையும் எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
மனிதர்கள் பாம்பு விஷத்தில் இருந்து தப்பிக்க விஷ எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளனர். விஷத்தைக் குதிரைக்குள் செலுத்தும்போது அதற்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு, எதிரணுவை (Anti Bodies) ரத்தத்தில் உற்பத்தி செய்து விஷத்தைச் செயலிழக்க வைக்கிறது. அந்தக் குதிரையின் ரத்தத்தில் இருந்து எதிரணுவை எடுத்து, விஷமுறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
எல்லாப் பாம்புகளுக்கும் ஏன் விஷம் இல்லை? - விஷம் என்பது விலைமதிப்பு மிக்கப் பொருள். விஷத்தை உருவாக்குவதற்கு ஏகப்பட்ட ஆற்றல் செலவாகிறது. அதனால் பாம்புகள் நிறைய உணவை உட்கொள்ள வேண்டும். எனவே விஷம் இல்லாமல் வேறு வகையில் உணவைப் பெறும் வழிகளைப் பாம்புகள் பெற்றவுடன், அவற்றின் விஷம் உருவாக்கும் தன்மை போய்விடுகிறது.
மலைப்பாம்புகள், அனகோண்டா ஆகியவை இரையின் உடலை இறுக்கி, கொன்று சாப்பிடுவதை வழக்கமாக்கிவிட்டன. அங்கே விஷத்தின் தேவை இல்லாதபோது இயற்கை தேர்வின் அடிப்படையில் விஷத்தை உருவாக்கும் தன்மையை அடுத்தடுத்த தலைமுறைகளில் இழந்துவிட்டன.
பாம்புகளும் மனிதர்களும்: மனிதர்களுக்குப் பாம்பு என்றால் பயம்தான். இதற்குக் காரணமும் பரிணாம வளர்ச்சியின்போது ஏற்பட்ட மாற்றம்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குரங்கில் இருந்து மனிதன் தோன்றும் வழியில் பாம்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், மனித மூளையால் ஒரு பாம்பைப் பார்ப்பதற்கு முன்பு அவை இருப்பதை உள்ளூர உணர முடிவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குரங்கினம் (Primates) என அறியப்படும் மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்டவற்றின் மூளையில் உள்ள சிறப்பு நரம்பணுக்கள் பாம்பின் பிம்பத்தைக் கண்டால் மட்டும் வினைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிறந்த குரங்குகள் பாம்பைப் பார்த்ததில்லை என்றாலும் பாம்பின் படத்தைக் காட்டும்போது பயம்கொள்கின்றன.
அடுத்த முறை பாரதிதாசன் எழுதிய ‘குரங்கின் அச்சம்’ பாடலைப் படிக்கும்போது, உச்சிக்கிளைக்குச் சென்று தன் வாலையே பாம்பு என நினைக்கிற குரங்கின் செயல் பரிணாம வளர்ச்சியால் விளைந்தது தான் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா!
(விடைகளைத் தேடுவோம்)
- tnmaran25@gmail.com