

விட்டக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. விடுமுறை என்பதால் மாணவர் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடற்கரையை ஒட்டி, அரைவட்ட வடிவில் கம்பீரமாகக் கட்டப்பட்டிருந்த அந்தப் பழங்காலத்துக் கோட்டை காண்போர் மனதைக் கவர்ந்தது. உயரமான கருங்கல் சுவருக்கு மேல் கண்காணிப்பு கோபுரங்கள் எழுப்பப்பட்டிருந்தன. கோட்டைக்குள் ஒரு சுரங்கப்பாதையும் இருந்தது. சுற்றுச்சுவருக்கு மேலே பழங்கால பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அமுதனும் அதிரனும் வந்து சேர்வதற்குள், ஆராய்ச்சியாளர் வளவன் கோட்டைச் சுவர் மீது நின்று கொண்டிருந்தார். அவர் அங்கு என்ன செய்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருவருக்கும் இருந்தது.
“அதிரா, பொதுமக்களுக்குக் கோட்டையைப் பத்தி விளக்கிச் சொல்றேன். நீ மேல போய் வளவன் மாமா என்ன பண்றாருன்னு பார்” என்றான் அமுதன்.
புது பீரங்கி ஒன்றை கோட்டை மதில் சுவரில் வைத்து, அதில் ஏதோ செய்துகொண்டிருந்தார் வளவன். அதிரன் படியேறி மேலே வந்தான். பீரங்கிகள் போர்க்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், இப்போது இந்தப் பீரங்கி எதற்கு என்று யோசித்தான்.
அப்போது கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு விசைப்படகு, பேரலையில் சிக்கி நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தார்கள். கரையிலிருந்த பொதுமக்கள் இந்தக் காட்சியைக் கண்டு கூச்சலிட்டனர்.
கோட்டை சுவருக்கு மேலே நின்றிருந்த அதிரன், அமுதனை அழைத்துப் பயணிகளைக் காப்பாற்றும்படிச் சொன்னான். உடனே அமுதன் தனது நண்பர்களுடன் மற்றொரு படகில் ஏறி கடலுக்குள் சென்றான்.
கடலில் நிகழ்ந்த விபத்தைக் கண்ட வளவன் துரிதமாகச் செயல்பட்டார். கூடியிருந்தவர்களை விலக்கிவிட்டுப் பீரங்கியை இயக்கினார்.
‘வீர்’ரென்ற சத்தத்துடன் பீரங்கியிலிருந்து புறப்பட்ட குண்டு, கடலில் கவிழ்ந்த விசைப்படகுக்கு அருகில் விழுந்தது. அங்கு இருந்தவர்கள், “ஐயோ, குண்டு வீசுறாங்களே... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...” என்று கத்தினார்கள்.
சட்டென்று விசைப்படகுக்கு அருகில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ‘டப்’பென்று வெடித்த குண்டிலிருந்து ஒரு ரப்பர் உருளை வெளிவந்தது. பலூன் போல் பெரிதானது. அதற்குள் மடங்கிக் கிடந்த ரப்பர் படகு முழுவடிவம் பெற்றது. கூடியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடலில் தத்தளித்த பயணிகள், ஒருவர் பின் ஒருவராக ரப்பர் படகில் ஏறினார்கள். அங்கு வந்து சேர்ந்த அமுதன் பயணிகளுக்கு உதவினான். அரை மணி நேரத்தில் பயணிகள் அனைவரும் கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
‘ஓ’ என்று கூச்சலிட்ட பொதுமக்கள், மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். வளவன் மாமாவைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.
“உயிர் பிழைத்தவர்கள் குடும்பத்தின் சார்பில், உங்களுக்கு ஒரு கோடி நன்றி சொன்னாலும் போதாது. நீங்கள் கண்டுபிடித்த பீரங்கியும் ரப்பர் படகும்தான் பயணிகளின் உயிர்காக்க உதவியது. ரொம்ப நன்றிங்க” என்றார் ஒரு பெரியவர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த அதிரனும் அமுதனும், “மாமா, இது அற்புதமான கண்டுபிடிப்பு! உலகில் எல்லாக் கடற்கரையிலும் இது போன்ற நவீன பீரங்கிகள், பொதுமக்கள் பாதுகாப்புக்காக வைக்கணும்” என்றபடி வளவன் மாமாவின் கைகளை ஆளுக்கு ஒன்றாகப் பிடித்துக் குலுக்கினார்கள்.