

மழையில் நனைந்தால் சளி பிடிக்குமா, டிங்கு?
- என். ஹரிகிருஷ்ணன், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
மழை நீரில் நனைவதால் சளிபிடிக்கும் என்பது தவறானது. ஜலதோஷம் வைரஸ் என்கிற நச்சுக் கிருமியால் உண்டாகிறது. இது ஒரு தொற்றுநோய். எளிதில் அடுத்தவர்களுக்குப் பரவிவிடும். இந்த வைரஸ் கிருமி சுவாசப்பைகளில் ஏற்கெனவே இருக்கும்.
குளிரான காலநிலையில் ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன, அப்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் வைரஸ் கிருமி நோயை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்கிறார்கள், ஹரிகிருஷ்ணன்.
பரிசுப் பொருள்களைப் பத்திரமாக வைத்திருக்கும் வழக்கம் உண்டா, டிங்கு?
- வி. ஸ்வீட்டி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி.
பரிசாகக் கிடைக்கும் பொருள்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள நினைத்தாலும் உடைந்தோ தொலைந்தோ போவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் நான் பொருள்களைவிட அந்தந்த நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத்தான் பொக்கிஷமாக, நினைவில் சேமித்துக்கொள்வேன். எப்போது வேண்டுமானாலும் அந்த நிகழ்வை நினைத்தால் போதும், உடனே மகிழ்ச்சி பொங்கிவிடும், ஸ்வீட்டி.