Published : 20 Sep 2017 11:04 AM
Last Updated : 20 Sep 2017 11:04 AM

டிங்குவிடம் கேளுங்கள்: புகை மேல் நோக்கிச் செல்வது ஏன்?

புவி தன் ஈர்ப்பு விசையால் அனைத்துப் பொருட்களையும் ஈர்த்துக்கொள்கிறது என்றால், புகை மட்டும் எப்படி மேல் நோக்கிச் செல்கிறது டிங்கு?

– பி. ஜெனிபர், 10-ம் வகுப்பு, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

நல்ல கேள்வி ஜெனிபர். எங்கும் பரவியிருக்கும் காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும். இதனால் புகையைவிட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மேல் நோக்கிச் செல்லும். அதாவது புவி ஈர்ப்பு விசையால்தான் புகை மேலே செல்கிறது. இந்தப் புகையைப்போலதான் மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் செல்கிறது. அது மேகமாக மாறி, பின்னர் மழையாகப் பொழிகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் புகையோ, நீராவியோ மேல் நோக்கிச் செல்லாது.

கல்கியின் பார்த்திபன் கனவு படித்து வருகிறேன். பிரமாதமாக இருக்கிறது. கல்கி வேறு சரித்திர நாவல்கள் எழுதியிருக்கிறாரா?

– எம். ஐஸ்வர்யா, 9-ம் வகுப்பு, பெரம்பலூர்.

கல்கி 3 சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறார். மூன்றுமே மிகவும் புகழ்பெற்றவை. பார்த்திபன் கனவு நாவல்தான் முதலில் எழுதினார். ஆனால் இரண்டாவதாக எழுதிய சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சியாக பார்த்திபன் கனவு இருக்கும் என்பது ஆச்சரியமானது. மூன்றாவதாக எழுதி பொன்னியின் செல்வன் முதல் இரு நாவல்களை விட அதிகப் புகழ்பெற்றது. உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா படித்து ரசித்ததை, இன்று நீங்களும் ரசிக்கும் அளவுக்கு காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன கல்கியின் எழுத்துகள்.

20CHSUJ_TINKU மேரி க்யூரி மேரி க்யூரியின் குடும்பம்தான் இதுவரை அதிகமான நோபல் பரிசுகளை வென்றுள்ளது என்று படித்தேன். யாருக்கெல்லாம் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது டிங்கு?

–கே. பிரதீப் குமார், சேலம்.

1903-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மேரிக்கும் அவரது கணவர் பியரி க்யூரிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1911-ம் ஆண்டு வேதியலுக்காக இரண்டாவது நோபல் பரிசைப் பெற்றார் மேரி. இவரது மூத்த மகள் ஐரின் ஜோலியட்டும் அவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்டும் 1935-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேர் நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள். இதில் மேரி இரட்டை நோபல் பரிசுகளை வென்றவர். இவ்வளவு சிறப்பு மிக்க குடும்பம் இதுவரை வேறு இல்லை. பின்னர், தான் பெற்ற 2 நோபல் பரிசுகளையும் போரில் காயம் அடைந்த வீரர்களின் நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார் மேரி!

எங்கள் பள்ளியில் கொடுக்கும் புராஜக்ட்களை என் நண்பர்களின் பெற்றோர்கள்தான் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கோ என் பெற்றோரும் செய்து கொடுப்பதில்லை, என் அக்காவும் செய்து கொடுப்பதில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது டிங்கு.

–டி. ராமமூர்த்தி, திண்டிவனம்.

நீங்கள்தானே படிக்கிறீர்கள் ராமமூர்த்தி! நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே புராஜக்ட்களைக் கொடுக்கிறார்கள்! உங்கள் பெற்றோரோ, அக்காவோ செய்து கொடுப்பதால் என்ன பயன்? உங்கள் நண்பர்களின் பெற்றோர் செய்வதுதான் தவறு. உங்கள் வீட்டினர் உங்களையே செய்ய வைப்பதுதான் சரியானது. உங்களுக்கு ஏதாவது உதவி என்றால் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் முழு புராஜக்ட்டையும் அடுத்தவர்களே செய்துகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x