

குளக்கரையில் அம்மா வாத்தும் மூன்று குஞ்சுகளும் வாழ்ந்து வந்தன. குஞ்சுகளில் ஒன்று கறுப்பாக இருந்தது.
தன்னுடன் பிறந்த இருவரும் வெள்ளையாக இருக்க, தான் மட்டும் கறுப்பாக இருக்கிறோமே என்று அந்த வாத்துக்குஞ்சு வருத்தப்பட்டது. தான் எப்படியாவது நிறத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது.
அம்மா வாத்து இரை தேடச் சென்றதும் வீட்டைவிட்டு வெளியேறியது. சிறிது தொலைவு சென்றதும் ஒரு பச்சைக்கிளியைப் பார்த்தது.
“கிளியக்கா, உன் பச்சை நிறத்தைக் கொஞ்சம் தருவாயா? நானும் அழகாக மாறிவிடுவேன்” என்று ஆர்வத்துடன் கேட்டது வாத்துக்குஞ்சு.
“எனக்குப் பசிக்கிறது. கொய்யாப்பழம் கொண்டுவந்து கொடு. உனக்கு என் நிறத்தில் கொஞ்சம் தருகிறேன்” என்றது பச்சைக்கிளி.
கிளிக்கு நன்றி சொல்லிவிட்டு, கொய்யா மரத்திடம் சென்றது வாத்துக்குஞ்சு. “கொய்யா மரமே, என்னை அழகாக்க பச்சைக்கிளி தன் நிறத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறது. நீ ஒரு கொய்யாப்பழம் தந்தால் கிளி அக்காவின் பசி தீரும். எனக்கும் பச்சை வண்ணம் கிடைக்கும்” என்றது.
உடனே கொய்யா மரம், “எனக்குத் தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொண்டு வந்து கொடு. உனக்குப் பழம் தருகிறேன்” என்றது.
வாத்துக்குஞ்சு வேகமாக ஆற்றுக்குச் சென்றது. “அழகிய ஆறே, தண்ணீர் தந்தால் அதை நான் கொய்யாமரத்திடம் கொடுப்பேன். அது தரும் பழத்தைப் பச்சைக்கிளியிடம் கொடுப்பேன். அது எனக்குப் பச்சை நிறத்தைத் தரும். நானும் அழகாகி விடுவேன்” என்றது.
“என் கரையில் நிற்கிற கொக்கிடம் போய் முதலில் அனுமதி வாங்கி வா. நான் நீர் தருகிறேன்” என்று சொன்னது ஆறு.
“வெள்ளைக் கொக்கே, பச்சைக் கிளியின் பச்சை நிறம் எனக்கு வேண்டும். அதற்காகக் கிளிக்குக் கொய்யாப்பழமும், கொய்யா மரத்திற்கு நீரும் வேண்டும். நீர் எடுத்துக்கொள்ள நீ அனுமதித்தால் கொய்யா மரத்தின் தாகமும் பச்சைக்கிளியின் பசியும் தீரும். எனக்கும் பச்சை நிறம் கிடைத்துவிடும்” என்றது வாத்துக்குஞ்சு.
இதைக் கேட்ட கொக்கு, “ரொம்ப நேரமாக நானும் பசியோடு காத்திருக்கிறேன். மீன்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு இரண்டு மீன்கள் பிடித்துத் தா, நீ தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி தருகிறேன்” என்றது.
அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரிடம் சென்றது வாத்துக்குஞ்சு. “மீனவரே, நான் அழகாக மாற பச்சை நிறம் வேண்டும். கிளிக்குக் கொய்யாப்பழம் வேண்டும். கொய்யா மரத்துக்கு நீர் வேண்டும். கொக்குக்கு மீன் வேண்டும். எனக்காக இரண்டு மீன்களைத் தருவீர்களா?” என்று பணிவோடு கேட்டது.
“ஓ... அப்படியா! மண்புழுக்கள் இல்லாமல் என்னால் மீன் பிடிக்க முடியாது. மண்புழுக்களைத் தந்துவிட்டு, இரண்டு மீன்களைப் பெற்றுச் செல்” என்று மீனவர் சொன்னார்.
மண்புழு எடுக்க வயலுக்குச் சென்றது வாத்துக்குஞ்சு. அங்கே ஒரு விவசாயி நின்றிருந்தார். “ஊருக்கு உணவிடும் உத்தமரே, என்னை அழகாக்க எனக்கு மண்புழுக்களைத் தாருங்கள்” என்று கேட்டது.
உடனே மண்புழுக்களை எடுத்து வாத்துக்குஞ்சிடம் கொடுத்த விவசாயி, “உழைப்பின் நிறம் கறுப்பு. அதுவே நிறங்கள் அனைத்திலும் சிறப்பு” என்று சொன்னார்.
விவசாயி தந்த மண்புழுக்களை மீனவரிடம் கொடுத்தது வாத்துக்குஞ்சு. அவர் இரண்டு மீன்களைத் தந்தார். அந்த மீன்களைக் கொக்கிடம் கொடுத்தது. கொக்கு தண்ணீர் எடுக்க ஒப்புதல் தந்தது. தண்ணீரை எடுத்துச் சென்று கொய்யா மரத்திடம் கொடுத்தது. உடனே கொய்யா மரம் பழங்களைக் கொடுத்தது. கொய்யாப்பழங்களைக் கொண்டு சென்று பச்சைக்கிளியிடம் கொடுத்தது.
“என் பசியைப் போக்க பழங்கள் தந்த வாத்துக்குஞ்சே, நீதான் எங்கள் எல்லாரையும்விட அழகு” என்று சொல்லிவிட்டு, பச்சைகிளி தன் நிறத்தை கொடுக்க முயன்றது.
“அழகு என்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். நிறம் அழகல்ல, குணமே அழகு” என்று சொல்லிவிட்டு, தன் அம்மாவை நோக்கிச் சென்றது வாத்துக்குஞ்சு.
- பிரியசகி