குழந்தை மேதைகள் 20: சிலை வைக்கப்பட்ட பயணி!

குழந்தை மேதைகள் 20: சிலை வைக்கப்பட்ட பயணி!

Published on

“நாம் எந்த அளவுக்கு முயல்கிறோமோ அதுதான் நம் பலம். அந்த வகையில் இந்தச் சிறுமி பிரம்மாண்ட பலம் பொருந்தியவர்” என்று சககோவியாவோடு சாகசப் பயணம் செய்த ஆய்வாளர்கள் அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

சககோவியா மேற்கொண்ட அசாதாரணப் பயணத்துக்காக இன்றைய அமெரிக்காவின் பிரதான பூங்காக்களுக்கு அவரது பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். நதி ஒன்று அவர் பெயரால் நினைவுகூரப்படுகிறது.

இவ்வளவு பெருமைக்கும் காரணமான சககோவியா மேற்கொண்ட சாகசப் பயணம்தான் என்ன‌?

அமெரிக்காவின் ஷொஷோனி பழங்குடியில் 1789ஆம் ஆண்டு சககோவியா (Sacagawea) பிறந்தாள். அமெரிக்க தேசமும் அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உதயமாகியிருந்தது.

சககோவியாவின் தந்தை ஷொஷோனி பழங்குடிக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். இவர்களுக்கு நிரந்தரமான தங்கும் இடம் கிடையாது. பருவகாலத்துக்கு ஏற்ப நகர்ந்துகொண்டே, நாடோடி வாழ்க்கை வாழ்ந்துவந்தனர்.

வேறு பழங்குடியினர் ஷொஷோனி மக்களைத் தாக்கிவிட்டு, 12 வயது சககோவியாவைத் தங்கள் கிராமத்துக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு அவளை பிரெஞ்சு வாழ் கனடியர் ஒருவருக்கு விற்றனர். 14 வயதில் சககோவியாவை அவர் திருமணம் செய்துகொண்டார்.

அன்றைய அமெரிக்காவில் 17 மாகாணங்கள்தாம் இருந்தன. குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெபர்சன், பிரெஞ்சு நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெருவாரியான நிலத்தை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கினார். ஆனால், அந்த நிலப்பகுதியை யாருமே பார்த்ததில்லை.

அந்தப் பகுதிகளுக்குக் களப்பணி மேற்கொண்டு, பூர்விகப் பழங்குடியினருடன் சுமுகமான வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஜெபர்சன் ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவுக்கு மெரிவதர் லூயிஸும் வில்லியம் கிளார்க்கும் தலைமை வகித்தனர். ஆனால், அவர்களுக்குப் பழங்குடியினர் பேசும் மொழி தெரியாது.

‘ஹிடாட்சா’, ‘ஷொஷோனி’ மொழி பேசுபவர்களுக்காக ஊர் ஊராகச் சுற்றி அலைந்தார்கள். சககோவியாவும் அவரின் கணவரும் உதவ ஒப்புக்கொண்டனர். லூயிஸ், க்ளார்க் பயணத்தில் வயிற்றில் குழந்தையுடன் சககோவியா இணைந்துகொண்டார்.

அந்தப் பயணத்தில் சககோவியா மட்டுமே பெண். அனைவருக்கும் சமைக்க வேண்டும். செல்லும் வழியில் இருக்கும் பழங்குடி மக்களிடம் பேச வேண்டும். சககோவியா பேசவில்லை என்றால், மொழி தெரியாத அந்த மக்கள் தங்களைத் தாக்க வருகிறார்கள் என்று எண்ணி, சண்டையிட ஆரம்பித்துவிடுவார்கள்.

அதனால் சககோவியா முதலில் சென்று, அந்த மக்களிடம் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதைத் தெரிவிப்பார். பின்னர் லூயிஸும் க்ளார்க்கும் வந்து தேவையான தகவல்களைச் சேகரிப்பார்கள். இப்படிக் காட்டிலும் மலையிலும் சககோவியா அவர்களுடன் பயணித்தார்.

பழங்குடியினர் ஷொஷோனி மொழியில் பேசுவதைத் தன் கணவருக்கு ஹிடாட்சா மொழியில் சொல்வார் சககோவியா. அவர் அதை பிரெஞ்சு மொழியில் வேறு ஒருவருக்குச் சொல்வார். அந்த நபர் அதை லூயிஸ், கிளார்க் ஆகியோருக்கு ஆங்கிலத்தில் சொல்வார்.

சககோவியாவுக்குப் பயணத்திலேயே குழந்தை பிறந்தது. ஆனால், ஓய்வெடுக்கவும் வீடு திரும்பவும் வழியில்லை. கைக்குழந்தையைத் துணியால் சுற்றி முதுகில் மாட்டிக்கொண்டு, கரடுமுரடான பாதைகளில் பயணித்தார்.

ஒருமுறை ஆற்றில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து, பயணிகள் தத்தளித்தனர். உணவுப் பொருள்களும் மருத்துகளும் அதுவரை சேகரித்து வைத்த ஆவணங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. சற்றும் தாமதிக்காமல் குழந்தையை ஒரு கையாலும் பொருள்கள், ஆவணங்கள், மனிதர்களை இன்னொரு கையாலும் பிடித்துக் கரையேற்றினார் சககோவியா. மொன்டானா மாகாணத்தில் உள்ள அந்த ஆற்றுக்குத்தான் சககோவியாவின் பெயர் பின்னர் சூட்டப்பட்டது.

பயணம் மிகவும் மோசமாக இருந்தது. உணவு இல்லாதபோது, காட்டிலும் மேட்டிலும் திரிந்து எல்லாருக்கும் பழங்களையும் கிழங்குகளையும் கொண்டுவந்து கொடுத்தார் சககோவியா.

ஓராண்டில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட பயணம் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. 18 வயதுக்குள் படகிலும் குதிரையிலும் நடையிலுமாக 3,218 கி.மீ. தொலைவு பயணம் செய்திருந்தார் சககோவியா.

இந்தப் பயணத்தில் பங்கேற்றதற்காக சககோவியாவின் கணவருக்குப் பணமும் நிலமும் பரிசாக வழங்கப்பட்டன. ஆனால், சககோவியாவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.

பயணத்தால் உண்டான உடல் நலப் பாதிப்பால், 23 வயதிலேயே சககோவியா இறந்துபோனார்.

‘காடுகள், பழங்குடி வாழ்க்கை பற்றி எங்களுக்குச் சொன்னதோடு மட்டுமல்லாமல், உணவும் அளித்து உயிரையும் காப்பாற்றியவர்’ என்று லூயிஸ், க்ளார்க் தாங்கள் எழுதிய நூலில் சககோவியா பற்றிச் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சககோவியாவுக்குப் பின்னர் சிலை எழுப்பப்பட்டது. இதுவே அமெரிக்கப் பூர்வகுடிகளுக்காக நிறுவப்பட்ட முதல் சிலை.

(நிறைவடைந்தது)

- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in