

“என்கூடப் பிறந்தவங்க எல்லாம் காக்காவுக்கும் கழுகுக்கும் பலி ஆயிட்டாங்க... கடைசியா எங்க அம்மாவுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்... தயவுசெய்து என்னை நீ விழுங்கிடாத..." என்று பாம்பிடம் கெஞ்சிக்கொண்டிருந்தது கோழிக்குஞ்சு.
"முடியாது... எனக்குப் பசிக்கிறது. நான் உன்னை விழுங்காமல் விட மாட்டேன்..." என்று மிரட்டலாகச் சொன்னது பாம்பு.
கோழிக்குஞ்சை நோக்கி மெதுவாக நகர்ந்தது பாம்பு. கோழிக்குஞ்சுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. கண்ணீர் எட்டிப் பார்த்தது. பயத்தில் ஓவென்று கத்த ஆரம்பித்தது.
சற்று தொலைவில் இரை தேடிக்கொண்டிருந்த தாய்க்கோழிக்குத் தன் குஞ்சின் அலறல் கேட்டது. பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தது.
பாம்பிடம் தன் குஞ்சு மாட்டிக்கொண்டதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தது.
‘காக்கையிடமும் கழுகிடமும் என் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டேன்... இருக்கும் ஒரே பிள்ளையையும் பாம்புக்கு இரையாக்க மாட்டேன். இனி நான் இழப்பதற்கு எதுவும் இல்லை. என்ன ஆனாலும் மோதிப் பார்த்துடறேன்’ என்று நினைத்த கோழி, பாம்பை விரட்டியடிக்கத் தயாரானது.
ஆக்ரோஷமாக வந்த தாய்க்கோழியைப் பார்த்த பாம்பு சிரித்தது.
"யோசனை இல்லாமல் என்னோடு சண்டை போட வர்றே… நான் எவ்வளவு வலிமையானவன்னு உனக்குத் தெரியாதா? என்னிடமே மோதுவதற்கு எங்கிருந்து உனக்குத் தைரியம் வந்தது?" என்று சீறியது பாம்பு.
"நீ எவ்வளவு பலசாலியாகவும் இருக்கலாம். என் குழந்தைக்கு ஒரு ஆபத்து வரும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே பாம்பின் உடலில் கொத்தியது தாய்க்கோழி.
பாம்புக்குக் கோபம் வந்து அதுவும் கொத்துவதற்காகத் தலையை முன்னோக்கி நீட்டியது.
“ஐயோ… யாராவது வாங்களேன்… எங்க அம்மாவைக் காப்பாத்துங்களேன்” என்று அலறியது கோழிக்குஞ்சு.
அக்கம்பக்கத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகளும் சேவல்களும் கூட்டமாக வந்தன.
தாய்க்கோழியின் பின்னே ஒரு படையே திரண்டு நின்றதைக் கண்ட பாம்பு சற்றுத் திகைத்துவிட்டது. சேவல்களுக்கும் கோழிகளுக்கும் இறைக்கைகள் சிலிர்த்து நின்றன.
"நீங்கள் புழுக்களைச் சாப்பிடுவதுபோல கோழிக்குஞ்சு என் இரை. அதற்கு ஏன் இவ்வளவு கோபம்?” என்று கேட்டது பாம்பு.
“உனக்கு இரை, எங்களுக்கு உயிர். பசிக்கான போராட்டத்தைவிட உயிருக்கான போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும்” என்றது தாய்க்கோழி.
"சரி, நான் கோழிக்குஞ்சை விட்டுடறேன். வழி விடுங்க. நான் கிளம்பணும்” என்று கோழிகளிடமும் சேவல்களிடமும் அமைதியாகச் சொன்னது பாம்பு.
"பலமில்லாதவங்களை சுலபமா வீழ்த்திடலாம்னு இனி நினைக்காதே. பலமில்லாதவங்க ஒன்னு சேர்ந்தால் பலமாகிடுவோம்னு இப்ப புரியுதா?” என்று சொல்லிக்கொண்டே தாய்க்கோழி பாம்புக்கு வழிவிட்டது.
பாம்பு அருகே உள்ள புதருக்குள் சரசரவென புகுந்து நொடிப் பொழுதில் மறைந்தது.
சேவல்களும் கோழிகளும் கோழிக்குஞ்சைக் காப்பாற்றி விட்டோம் என்று நிம்மதியடைந்தன.
"அப்பாடா... தப்பிச்சோம். நான் ரொம்ப பயந்துட்டேன்மா..." என்று சொல்லிக்கொண்டே தாயிடம் ஓடிவந்தது அந்தக் கடைசி கோழிக்குஞ்சு.
"நம்ம கண் முன்னாடி ஒருத்தரு ஆபத்துல சிக்கிட்டு இருக்கும்போது கண்டுக்காம போறது தப்பு. எதிரி எவ்ளோ வலிமையானவனா இருந்தாலும் நாம ஒற்றுமையா நின்னு குரல் கொடுத்தாலே போதும்... நமக்கான நியாயம் கண்டிப்பா கிடைக்கும்..." என்று சொன்னது தாய்க்கோழி.
"புரியுதும்மா... நானும் இனிமேல் ஆபத்துல இருக்கிறவங்களுக்கு ஆதரவா குரல் கொடுப்பேன். எனக்காக ஓடிவந்து நின்ற சேவல் மாமாக்களுக்கும் கோழி சித்திகளுக்கும் ரொம்ப நன்றி. உங்க உதவிய நான் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்" என்று கனிவாகச் சொன்னது கோழிக்குஞ்சு.
கோழிக்குஞ்சின் தலையை வருடிக்கொடுத்துவிட்டு, சேவல்களும் கோழிகளும் கலைந்து சென்றன.
- யுவராஜ் மாரிமுத்து