உலகப் புத்தக நாள் 2023 | விடுமுறையில் வாசிப்போம்!

உலகப் புத்தக நாள் 2023 | விடுமுறையில் வாசிப்போம்!
Updated on
3 min read

பீம்பேட்கா, l உதயசங்கர், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 9176549991: மத்திய இந்தியாவிலுள்ள விந்திய மலைத் தொடரில் அமைந்துள்ள குகைகளில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தக் குகைகள் சிலவற்றில் 8,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. இந்தப் பின்னணியில் இந்தியத் தொல்லியல், வரலாறு, ஆதி மனிதர்களைத் தேடி கேப்டன் பாலுவும் கீழடியின் ரகசியங்களை பாலுவுக்குக் கூறிய ஆதனும் பயணிக்கும் கதை.

அம்மாடி... அப்பாடி..., l ச. மாடசாமி, வாசல், தொடர்புக்கு: 9842102133: வகுப்பறைகள் எப்படிச் சுதந்திரமாக அமைய வேண்டும், குழந்தைகளை எப்படிப் பெரியவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது குறித்தெல்லாம் தொடர்ந்து பேசிவரும் பேராசிரியர் ச.மாடசாமி, குழந்தைகளிடம் உரையாடுவதன் அவசியத்தை இந்த நூலில் எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கே உரிய சிறிய கட்டுரைகள் வடிவில், நறுக்கென பல கருத்துகளை நம் மனதில் விதைத்துச் சென்றுவிடுகிறார்.

சின்னஞ்சிறு இளவரசன், l ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி, தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு, தொடர்புக்கு: 04652-278525: குட்டி இளவரசன் என்கிற பெயரில் ஏற்கெனவே தமிழில் பிரபலமாகியுள்ள நாவலின் புது மொழிபெயர்ப்பு. உலகப் புகழ்பெற்ற இந்த நூல் நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல கோடிப் பிரதிகள் விற்றுள்ளது. மனித குல அடிப்படைப் பண்புகளைச் சற்றே தத்துவார்த்தரீதியில் சொல்லும் இந்த நூலைக் குழந்தைகளால் நேரடியாகப் படிக்க முடியாவிட்டாலும், பெரியவர்கள் வாசித்துச் சொல்ல வேண்டிய ஒரு கதைதான்.

நெல் விளைந்த கதை, l லக் ஷ்மி பாலகிருஷ்ணன், இளையோர் இலக்கியம், தொடர்புக்கு: 044-24332924: பால் எப்படிக் கிடைக்கிறது என்று இன்றைக்கு ஒரு குழந்தையைக் கேட்டால், பாக்கெட்டில் வருகிறது என்றே கூறும். அதேபோல் நம் உடலை வளர்க்கும், உடல் இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் உணவுப்பொருள்கள் எப்படிக் கிடைக்கின்றன, யார் - எப்படி விளைவிக்கிறார்கள், எந்த அளவுக்கு உழைக்கிறார்கள் என்பது குறித்து இந்தக் கால நகரத்துக் குழந்தைகளுக்குப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. அதை எல்லாம் கதைப் போக்கில் விளக்குகிறது இந்த நூல்.

மாமல்லபுரம், l பிரேமா ரவிச்சந்திரன், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 9940446650: மாமல்லபுரம் ஒரு கலைச்சின்னம், வரலாற்று நகரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மாமல்லபுரத்தின் கலை அற்புதங்களின் சிறப்பையும் வரலாற்றுத் தகவல்களையும் ஒரு சுற்றுலா வழியே தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்! அந்த வகையில் ஒரு கதையைப் போல இந்த நூல் அமைந்திருக்கிறது.

குளோன்சியின் சாகசங்கள், lமோகன் சுந்தரராஜன், தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663: குளோனிங் முறை மூலம் குளோன்சி என்கிற சிம்பன்ஸி குரங்கு உருவாக்கப்படுகிறது. அந்த வாலில்லாக் குரங்கைக் கொண்டு சுவாரசியமான ஒரு கதையைக் கூறியுள்ளார் இதன் ஆசிரியர்.

குரங்கு என்றாலே சேட்டையும் சாகசங்களும் செய்யக்கூடியதாகத்தானே இருக்கும்! அதே நேரம் இந்தக் கதையின் ஊடாகப் பல்வேறு நவீன அறிவியல் தகவல்களையும் கோத்துத் தந்திருப்பது புதிய அனுபவத்தைத் தருகிறது.

குழந்தைகள் உலகம், l தேவி நாச்சியப்பன், மணிவாசகர் பதிப்பகம், தொடர்புக்கு: 9382999914: பள்ளி ஆசிரியரான இந்த நூலின் ஆசிரியர், ஓர் எழுத்தாளரும்கூட. உறவினர்-நண்பர்களின் குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள் எனப் பல்வேறு வகைகளில் தான் சந்தித்த குழந்தைகளுடன் ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களைச் சிறு சிறு கட்டுரைகளாகத் தந்திருக்கிறார். குழந்தைகள் மூலம் தான் கற்றதையும் பெற்றதையும் இதன் வழியாகக் கூறியிருக்கிறார்.

என் பெயர் வேனில், l ரமணி, வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 9176549991: ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ சிறுகதை நூலை எழுதிய பள்ளி மாணவி ரமணியின் புதிய நாவல் இது. தன் கூட்டைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறது வேனில் என்கிற தேனீ. இந்தப் பயணத்தில் அத்துடன் மதி தேன்சிட்டு, நாதன் வரிக்குதிரை, தெம்பா யானை ஆகியவை வேறுவேறு விஷயங்களைத் தேடிப் புறப்படுகின்றன. இதற்கிடையில் நடக்கும் பல்வேறு திருப்பங்கள் கொண்ட சாகசக் கதை.

சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?, l Camera-etc, தமிழில்: நர்மதா தேவி, இடையன் இடைச்சி நூலகம், தொடர்புக்கு: 98412 08152: ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது வீடு, பள்ளி, நண்பர்கள், பெரியவர்கள், சமூகம் எனச் சில அடிப்படை விதிகளைச் சொல்கிறார்கள். ஆனால், அறிவியலோ இயற்கையோ அப்படி எந்த வேறுபாட்டையும் ஆண்கள், பெண்களிடையே உருவாக்கவில்லை. பாலின வேறுபாடு சார்ந்த எல்லாப் பாகுபாடுகளும் மனிதர்கள் உருவாக்கியவை. அவை ஏன் தவறு என்பது குறித்து இந்தப் புத்தகம் எளிய கதை வழியாகப் புரியவைக்கிறது.

ஓங்கூட்டு டூணா!, l தேனி சுந்தர், புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 8778073949: ஆசிரியரான இந்த நூலின் ஆசிரியர், தன் குழந்தைகளுடன் நிகழ்ந்த அனுபவங்களை ‘டுஜக் டுஜக்’, ‘சீமையில் இல்லாத புத்தகம்’ ஆகியவற்றின் வழியே பதிவுசெய்திருந்தார். இந்த நூலில் தன் வகுப்பறைக் குழந்தைகளிடம் நேர்ந்த பல்வேறுபட்ட அனுபவங்களைச் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார். இந்த நூல் மாறுபட்ட ஓர் அனுபவத்தைத் தருகிறது.

- நேயா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in