

நாகராஜபுரம் என்கிற பெயருக்கு ஏற்ற மாதிரி அந்தக் காட்டில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். பாம்புகளின் தலைவன் நாகராஜன் ஒரு தவளையை விழுங்கப் போகும்போது, எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடிவந்த நரி, பாம்பு மீது காலை வைத்துவிட்டது. அந்த நேரம் தவளை தப்பி ஓடிவிட்டது. அதனால் நரி மீது நாகராஜன் கோபமாக இருந்தது.
‘எப்படியாவது நாகராஜனின் கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே வந்த நரி, மரத்தின் மீது பார்வையைத் திருப்பியது.
நீண்ட நேரம் உணவை வேட்டையாடி, உண்ட களைப்பில் கழுகு மரத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது. உடனே நரிக்கு ஒரு யோசனை உதித்தது. நாகராஜனிடம் நல்ல பெயர் எடுக்க இதுதான் சரியான வாய்ப்பு என்று நினைத்தது.
“கழுகண்ணா, இங்கே பாரு” என்று மரத்தடியில் நின்று குரல் கொடுத்தது நரி.
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது கழுகு.
“கீழே பாரு.”
“சொல்லு...”
“உங்களைப் போல ஒரு வீரனை நான் பார்த்ததில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் வீரத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.”
“நன்றி.”
“நீங்கள் வீரன் என்பதை எங்கள் நாகராஜன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.”
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
“அவருடன் சண்டையிட்டு நீங்கள் வெற்றி பெற வேண்டுமாம்.”
“என்ன ஆணவம்? கூப்பிடு உன் நாகராஜனை...”
நரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாகராஜனிடம் சென்றது.
“என்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று ஆணவமாகச் சொல்கிறது வட திசையில் இருந்து வரும் அந்தக் கழுகு.”
“என்ன சொல்கிறாய்?”
“நாகராஜனை வந்து என்னுடன் சண்டை போடச் சொல்லு என்று என்னை அனுப்பி வைத்தது.”
“இதோ வருகிறேன்...”
நாகராஜனும் கழுகும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டன. சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தது நரி.
தரையில் இருந்து சண்டை போடும் வரை தன்னால் ஜெயிக்க இயலாது என்பதை உணர்ந்துகொண்ட கழுகு, சட்டென்று நாகராஜனைத் தூக்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.
“ஐயோ, தரையில்தான் நான் பலசாலி. வானில் நீதான் பலசாலி என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்னை விட்டுவிடு” என்றது நாகராஜன்.
“ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் பலம் மட்டும் போதாது, நல்ல களமும் வேண்டும். உன்னுடன் சண்டையிட நான் விரும்பவில்லை.”
“நானும் வீண் சண்டையை விரும்ப மாட்டேன்.”
“ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த என்னிடம், நீ சண்டைக்கு அழைத்ததாக இந்த நரி சொன்னது. நான் நம்பவில்லை. சும்மா சண்டையிடுவதுபோல் நடித்தேன்.”
“நானும் நரி சொன்னதை நம்பவில்லை, சும்மாதான் சண்டை யிடுவதுபோல் நடித்தேன்.”
“சரி, நரி உன்னிடமே தன் வேலையைக் காட்டிவிட்டது. கொஞ்சம் எச்சரிக்கையாக இரு. நீ உன் பெற்றோரைப் பார்க்க பக்கத்து காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அங்கே இறக்கி விடட்டுமா உன்னை?”
“ஐயையோ... நாம் சண்டை போட்ட இடத்திலேயே இறக்கி விட்டுவிடு. இப்பவே நாகராஜன் தோற்றுவிட்டான். கழுகு தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது என்று செய்தியைப் பரப்பியிருக்கும் நரி. நான் போய் உண்மையைச் சொல்ல வேண்டும்” என்றது நாகராஜன்.
கழுகு நாகராஜனை இறக்கி விட்டது. நன்றி சொன்ன நாகராஜன், நரியைத் தேடி ஓடியது.
- கு. அசோகன்