

ப
ண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை விளையாட்டுகளும் பாடல்களும் நிறைந்ததாக இருந்தது. சிறு வயதிலிருந்தே விளையாடுவதால் உடல் வலு பெறுவதோடு, பலரோடு இணைந்து செயல்படுவதற்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.
‘மரமும் குருவிகளும்’ என்ற விளையாட்டை 25 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
விளையாட்டில் பங்கேற்பவர்களை மூன்று பேர் கொண்ட ஏழெட்டுக் குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். தொடக்க ஆட்டக்காரராக ஒருவரைத் தேர்வு செய்யுங்கள். அனைவரும் பெரிய வட்டமாக நின்றுகொள்ளுங்கள். மையத்தில் தொடக்க ஆட்டக்காரரை நிற்க வையுங்கள். ஒரு குழுவிலுள்ள மூவரில், நடுவில் நிற்பவர் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி மரமாக நிற்க வேண்டும்.
மரமாக நிற்பவருக்கு இடம், வலமாக நிற்கும் இருவரும் குருவிகளாக மாற வேண்டும். மரமாக நிற்பவரின் தோள்ப்பட்டையில் இரு கைகளையும் வைத்தபடி, இருவரும் குனிந்து நிற்க வேண்டும்.
எப்படி விளையாடுவது?
வட்டத்தின் நடுவில் நிற்கும் தொடக்க ஆட்டக்காரர், ’மரம்’ என்று சொன்னால், ஒவ்வொரு குழுவிலும் மரமாக நடுவில் நிற்பவர், அதிலிருந்து பிரிந்து வேறொரு குழுவில் மரமாக மாறி நிற்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நிற்பதற்குள், தொடக்க ஆட்டக்காரர் ஓடிப்போய், ஏதாவது ஒரு குழுவில் மரமாக நின்று விடுவார். இதனால், யாராவது ஒருவர் ‘அவுட்’ ஆவார். அவர் வட்டத்தின் நடுவில் நின்று, மீண்டும் விளையாட்டைத் தொடரவேண்டும். ‘மரம்’ அல்லது ‘குருவி’ என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும். ’குருவி’ என்று சொன்னால், இருபுறமும் குருவிகளாக நிற்பவர்கள், வேகமாகக் கலைந்து சென்று, வேறொரு மரத்தின் குருவிகளாக மாறி நின்றுகொள்ள வேண்டும்.
இப்படி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டே இருக்கலாம். இந்தக் கலகலப்பான விளையாட்டில் வெற்றி, தோல்வி என்று எதுவும் இல்லை. நீங்களும் ஒருமுறை விளையாடிப் பாருங்கள்.
(விளையாட்டு நிறைந்தது).