

“உங்களால் ஓசோன் படல மெலிவை சரிசெய்ய முடியுமா? வற்றிப்போன நீரோடைகளில் மீன்களை உயிர்ப்பிக்க வைப்பீர்களா? அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர முடியுமா? இப்போது பாலைவனமாகக் காட்சியளிக்கும் வளமிக்கக் காடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு மாற்றும் வழியை அறிவீர்களா? நான் ஒரு குழந்தை, எனக்குத்தான் தெரியாது. ஆனால், உங்களுக்கும் தெரியவில்லையே... பிறகு எந்தத் தைரியத்தில் இவ்வளவு வேகமாக இயற்கையை அழிக்கிறீர்கள்?”
கனடாவைச் சேர்ந்த செவன் கலிஸ் சுசூகி (Severn Cullis-Suzuki) என்கிற 12 வயதுச் சிறுமி, 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஐ.நா. சுற்றுச்சுழல் மாநாட்டில் உதிர்த்த வார்த்தைகள் இவை. யாரும் எதிர்பாராத சூழலில் திடீரென மேடையேறி, ஐந்து நிமிடங்களில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் வாயடைக்கச் செய்தார்.
சிலர் இந்த உரையைக் கேட்டுக் கண்ணீர் விட்டதாக அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதின. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று உலகம் மெதுவாகச் சிந்திக்கத் தொடங்கியபோதே, செவன் வேலையில் இறங்கிவிட்டார்.
1979இல் கனடாவில் உள்ள வான்கூவரில் பிறந்தார் செவன். அம்மா தாரா கலிஸ் எழுத்தாளர். தந்தை டேவிட் சுசூகி சுற்றுச்சூழல் ஆர்வலர். தன் தந்தை சென்ற பாதையில் மிகச் சிறுவயதில் இருந்தே பயணிக்கத் தொடங்கிவிட்டார் செவன்.
ஐந்தாவது படித்தபோது நண்பர்களோடு சேர்ந்து குழந்தைகளுக்கான ’ECO’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் 1992இல் ரியோ டி ஜெனிரோவில் நடக்க இருந்த ஐ.நா. புவி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நிதி திரட்டினார்.
அந்த மாநாட்டில் கலந்துகொண்டு, “வனிசா சட்டி, மார்கன் கெய்ஸ்லர், மிச்சல் க்விக் உள்பட என் போன்ற 12, 13 வயது சிறுவர்கள் மாற்றம் உண்டாக்க முயல்கிறோம். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான நிதியைத் திரட்டி, பல்லாயிரம் மைல்களைக் கடந்துவந்து, பெரியோர்கள் சரியான வழியில் செல்லவில்லை என்று எச்சரிக்கிறோம்” என்று முழங்கினார் செவன். அவர் சொன்னது உண்மைதான், பெரியோர்கள் மோசமான சுற்றுச்சுழல் கொள்கையைத்தான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.
1993ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில், செவனுக்கு ‘குளோபல் 500 ரோல் ஆஃப் ஹானர் விருது’ வழங்கப்பட்டது. அதே ஆண்டு, ‘உலகத்துக்குச் சொல்லுங்கள்’ என்கிற புத்தகத்தையும் வெளியிட்டார், செவன்.
பதின் வயதிலேயே சுற்றுச்சூழலுக்கான எர்த் சார்ட்டர் ஆணையத்தின் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு, அதில் இன்றளவும் செயலாற்றிவருகிறார்.
2000ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாடு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக கனடா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் மூலம், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற வளம் குன்றா வளர்ச்சி மாநாட்டில் பேசினார். அந்த மாநாட்டின் பொதுச் செயலாளருக்குத் தனிப்பட்ட ஆலோசகராகவும் செவன் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு இவர் உதவியால் உருவான ‘தி ஸ்கைஃபிஷ் புராஜக்ட்’ அமைப்பின் நண்பர்களோடு சேர்ந்து ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னானுக்கு ஆலோசகராகப் பணியாற்றும் வாய்ப்பும் தேடிவந்தது.
செவனின் புகழ்பெற்ற உரையை, 2008இல் யூடியூபில் பதிவேற்றியபோது மீண்டும் பிரபலமானார். அது ‘இளம் சூழலியல் போராளி’ என்கிற அடையாளத்தையும், ‘ஐந்து நிமிடத்திற்கு உலகை மௌனமாக்கியவர்’ என்கிற பாராட்டையும் பெற்றுத் தந்தது.
2019ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பை நோக்கி கிரெட்டா துன்பெர்க் பேசிய தகிக்கும் உரைக்கு விதைபோட்டவர் செவன் சுசூகி! சுற்றுச்சூழல் சார்ந்த சில ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ‘டேவிட் சுசூகி அறக்கட்டளை’ மூலம் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.
‘உங்களால் முடிந்தவரை பாட்டில் நீரை ஒதுக்குவதன் மூலம் பல லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு நீங்களும் ஒரு காரணியாக இருக்கலாம்’ என்று சொல்லும் செவன், அழிந்துவரும் மொழிகளை மீட்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com