

குரங்குக் கூட்டம் ஒன்று பசியோடு பெரிய மாந்தோப்புக்குள் நுழைந்தது. மாமரங்களில் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்த மாம்பழங்களைப் பார்த்ததும் அவற்றின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சரசரவென்று மரங்களில் ஏறி, வேகமாகப் பழங்களைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தன.
குட்டிக் குரங்கு மகிக்குக் கையில் முள் குத்திக் காயம் ஏற்பட்டிருந்தது. மகியால் மரம் ஏற முடியாது என்பதால், அம்மா குரங்கு மரத்திலிருந்து பழங்களைப் பறித்துப் போட்டது. வயிறு ஓரளவு நிறைந்ததும் குரங்குகளுக்கு உற்சாகம் வந்துவிட்டது. வெவ்வேறு மரங்களில் உள்ள பழங்களை ருசித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால், மரத்துக்கு மரம் தாவிக் குதித்துக்கொண்டிருந்தன.
அந்தக் காட்சிகளைக் கண்டுகொண்டிருந்த மகிக்கும் மரம் ஏற வேண்டும் என்று தோன்றியது. அம்மாவிடம் கேட்டால் மரம் ஏறுவதற்கு அனுமதிக்க மாட்டார். அதனால், அம்மா கவனிக்காதபோது மரத்தில் ஏற ஆரம்பித்தது. மரத்தைப் பிடிக்கும்போது முள் குத்திய இடத்தில் பயங்கரமாக வலித்தது.
தரையில் மகி இல்லாததைக் கண்ட அம்மா, அங்கும் இங்கும் தேடியது. மகி மரம் ஏறுவதைக் கண்டதும், “ஏய், மகி... ரெண்டு நாளைக்கு மரம் ஏறக் கூடாதுன்னு சொல்லிருக்கேனே? பழங்களும் பறிச்சுப் போட்டுட்டேன். எதுக்கு ஏறுற?” என்று பதறியது.
“நீங்க எல்லாம் ஜாலியா மரத்தில் ஏறி விளையாடுவீங்க, நான் மட்டும் தரையில் இருந்து வேடிக்கை பார்க்கணுமா?” என்று சொல்லிக்கொண்டே ஒரு மரக்கிளையில் வசதியாக உட்கார்ந்துகொண்டது மகி.
திடீரென்று அந்தக் கிளை உடைந்து தொங்கியது. “ஐயோ, அம்மா... யாராவது காப்பாத் துங்களேன்” என்று ஒரு கையில் கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியது மகி.
அப்போது தோட்டத்தின் காவலர் ஒருவர் பெரிய தடியுடன் குரங்குகளை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
“எல்லாரும் சீக்கிரம் மரத்தை விட்டு இறங்கி, வடக்குப் பக்கமா ஓடுங்க. அதோ காவலர் கம்புடன் வந்துகொண்டிருக்கிறார்” என்று அறிவித்தது தலைவர் குரங்கு.
உடனே மகியின் அம்மாவுக்குப் பதற்றமாக இருந்தது. “ஏய், மகி சீக்கிரம் மரத்தைவிட்டு இறங்கு. உன்னை வந்து தூக்கிக்கிட்டுப் போக யாருக்கும் நேரம் இல்லை” என்று மகியிடம் சொன்னது.
“ஐயோ... அம்மா... எனக்கு முயற்சி செய்யறதுக்கு நேரமில்லை. சீக்கிரம் வந்து என்னைக் காப்பாற்று.”
“நான் ஏறி வருவதற்குள் காவலர் வந்துடுவார். தடியால் அடித்தால் நானே தாங்க மாட்டேன். சட்டுனு குதிச்சிடு. உயரம் குறைவாதான் இருக்கு” என்றது அம்மா.
கூட்டத்தில் உள்ள மற்ற குரங்குகள் எல்லாம் வட திசையை நோக்கி ஓடின.
“ம்ஹும்... எனக்குப் பயமா இருக்கு.”
“அப்படின்னா காவலர் கிட்ட மாட்டிகிறீயா?”
“என்னைக் காப்பாத்தறது உன்னோட கடமை.”
“அம்மா சொல்வதைக் கேட்பது பிள்ளையோட கடமை.”
காவலர் அருகில் வந்துவிட்டார். மகி இறங்குவதாகத் தெரியவில்லை. உடனே ஒரு கல்லை எடுத்து மகி மீது வீசப் போவதாகச் சொன்னது அம்மா.
மகிக்குக் கோபமும் பயமும் வந்துவிட்டது. “நீயெல்லாம் ஒரு அம்மாவா? உன்னைவிட அந்தக் காவலரே மேல்” என்றது மகி.
“அவர் உன்னைக் கட்டி வச்சிடுவார். இல்லைனா வித்தைக்காரரிடம் வித்துடுவார், பரவாயில்லையா?”
சட்டென்று கைகளைவிட்டு, தரையில் விழுந்தது மகி. அதைப் பார்த்த காவலர் மகியை நோக்கிக் கம்பை வீசினார். சட்டென்று மகியைத் தூக்கிக்கொண்டு ஓடியது அம்மா.
வேலிக்கு அந்தப் பக்கம் காத்திருந்த குரங்குகள், மகியும் அம்மாவும் பத்திரமாக வந்து சேர்ந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தன.
கோபத்துடன் அம்மா முதுகில் இருந்து இறங்கிய மகி, “தலைவரே, கல் எடுத்து என் மீது வீச இருந்த அம்மா மீது புகார் கொடுக்கிறேன். நடவடிக்கை எடுங்க” என்று சொன்னது.
“உங்க அம்மா உன்னைக் காப்பாற்றியதால்தான் புகார் கொடுக்கறே... அப்படியே விட்டுவிட்டு வந்திருந்தால் தெரிஞ்சிருக்கும்...” என்று தலைவர் குரங்கு சொல்லவும் கூட்டமே சிரித்தது.
மகி அமைதியாக இருந்தது.
“மகி செல்லம், உன்னைப் போய் கல்லால் அடிப்பேனா? கல்லை எடுத்ததாலதான் நீ வேகமா கீழே குதிச்சே... இல்லைனா அங்கேயே தொங்கிட்டு இருந்திருப்பே... உன்னை விட்டு நானும் போக மாட்டேன். ரெண்டு பேரும் காவலர் கிட்ட உதை வாங்கியிருப்போம். புரிஞ்சுக்கடா” என்று அம்மா அமைதியாகச் சொன்னது.
“நானும் என்னோட தவறைப் புரிஞ்சுக் கிட்டேம்மா. நீ எதைச் செய்தாலும் என் நன்மைக்குதான் செய்வே... என்னை மன்னிச்சிடும்மா” என்று சொன்ன மகியை வாரி அணைத்துக்கொண்டது அம்மா.
- பூபதி பெரியசாமி