

பசுமையும் குளிர்ச்சியும் கொண்ட அந்த அடர்ந்த வனத்தில் மலர், ஆதவன் என்கிற கிளிகள் வாழ்ந்துவந்தன. நீண்டு படர்ந்த ஒரு மாமரத்தின் கிளையில் அவை தங்கியிருந்தன. மற்றொரு கிளையில் லல்லி, லில்லி என்கிற மைனாக்கள் வாழ்ந்துகொண்டிருந்தன.
கிளிகளின் பொந்துக்குள்ளே அடிக்கடி சண்டை நடக்கும். மலரும் ஆதவனும் எதிரிகளைப் போல் மோதிக்கொள்வார்கள். ஆனால், சற்று நேரத்தில் அண்ணனும் தங்கையும் ஒற்றுமையாகிவிடுவார்கள்.
மலருக்கும் ஆதவனுக்கும் சண்டை வரும்போதெல்லாம் லல்லிக்குப் பயமாக இருக்கும். உடனே லில்லியை அழைத்து, “மலருக்கும் ஆதவனுக்கும் சமாதானம் செய்து வை. என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை” என்று சொல்லும். அன்றும் சண்டை நடந்துகொண்டிருந்தது. லில்லியைச் சமாதானம் செய்து வைக்கச் சொன்னது லல்லி.
கண்டுகொள்ளாத லில்லி, “அண்ணனும் தங்கையும் சண்டை போடுவாங்க, சேர்ந்துடுவாங்க. நடுவில் யாரும் நுழையக் கூடாது” என்று வழக்கம்போல் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டது.
ஆதவன் பொந்தை விட்டுச் செல்லட்டும், அதன் பிறகு மலரைச் சந்தித்து ஆறுதல் சொல்லலாம் என்று காத்திருந்தது லல்லி.
சிறிது நேரத்தில் ஆதவன் கோபத்துடன் வெளியே சென்றது. லல்லி மலரைப் பார்ப்பதற்காகப் பொந்துக்குள் நுழைந்தது.
“வா, லல்லி... ஏதாவது சாப்பிடறீயா?” என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே கேட்டது மலர்.
“எனக்கு ஒன்னும் வேணாம். உனக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று அன்பாகக் கேட்டது லல்லி.
தன் அலகால் உடைத்து வைத்திருந்த வாதுமை பருப்பைத் தந்தது மலர். அதைப் பெற்றுக்கொண்ட லல்லி, விஷயம் என்ன என்று கேட்டது.
“நான் எதைச் சொன்னாலும் ஆதவன் கேட்பதே இல்லை. அவன் போக்கே பிடிக்கவில்லை” என்று சொல்லிக்கொண்டே திராட்சைப் பழத்தை ஒரு கொத்து கொத்தியது.
வாதுமை பருப்பைக் கடித்து வாயில் ஒதுக்கிக்கொண்ட லல்லி, “இன்னிக்கு என்ன செஞ்சான்?” என்று அக்கறையாகக் கேட்டது.
பெருமூச்சு விட்டுக்கொண்ட மலர், “நேற்று மலைப்பக்கம் போயிருந்தான் ஆதவன். திரும்பி வரும்போது எனக்குப் பிடிக்குங்கிறதுக்காக கேரட்டைக் கொண்டு வந்தானாம். வழியில் அவன் நண்பன் முயலைப் பார்த்தானாம். அது கேரட்டைக் கேட்டதாம். உடனே எனக்காகக் கொண்டு வந்த கேரட்டைக் கொடுத்துட்டானாம். என்ன அநியாயம்?” என்று லல்லியிடம் கேட்டது.
“உன் அண்ணன் கோபக்காரனாக இருந்தாலும் பாசக்காரன். நண்பன் ஆசையாகக் கேட்கும்போது, கொடுக்காமல் இருப்பானா? இதுக்கு ஏன் நீ இவ்வளவு கோபப்படறே? எனக்கும் லில்லிக்கும் எவ்வளவோ சாப்பிடக் கொடுக்கறே, முயலுக்கு மட்டும் ஏன் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றே?”
இதைக் கேட்டு கடுப்பான மலர், “நீயும் லில்லியும் எங்கள் அன்புக்கு உரியவர்கள். அந்த முயல் ஆதவனுக்குத்தான் நண்பன். எனக்கு இல்லை. கொஞ்சம்கூட நன்றி இல்லாதவன்” என்று கோபம் குறையாமல் சொன்னது.
“ஆ... நன்றி இல்லாதவனா?”
“ஆமாம், சில நாள்களுக்கு முன் நான் அந்த முயலிடம் அத்திப் பழம் கேட்டேன். தர முடியாது என்று திமிராகச் சொல்லிவிட்டது. ஆதவன் எத்தனையோ முறை அந்த முயலுக்கு உதவியிருக்கான். காய்கள், கனிகளைக் கொடுத்திருக்கான். அதை எல்லாம் நினைச்சுப் பார்க்காமல், பழத்தைத் தர மறுத்துவிட்டது.
எனக்கு எவ்வளவு வருத்தமாக இருந்தது தெரியுமா? அடுத்தவர்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு நாம் ஏன் உதவணும்? என்ன சொன்னாலும் ஆதவன் தன்னோட குணத்தை மாற்றிக்க மாட்டேங்கிறான்” என்று தன் கோபத்துக்கான காரணத்தைச் சொன்னது மலர்.
பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த லல்லி, வாதுமைப் பருப்பைத் தின்று முடித்து, வாயைத் துடைத்துக்கொண்டது. சிறிது நீரைப் பருகிவிட்டு, “நான் சொல்வதை நீ தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பிறருக்கு உதவும் நல்ல குணம் உன் அண்ணனுடையது.
உதவி செய்ய மனமில்லாத குணம் அந்த முயலுடையது. அப்படியானால் தன் குணத்தை மாற்றிக்க வேண்டியது யார்? நல்ல குணம் கொண்டவரா, உதவ மனம் இல்லாதவரா?”
“இது என்ன கேள்வி, உதவ மனம் இல்லாதவர்தான்.”
“ஓஹோ... அப்படியானால் திருந்த வேண்டியது ஆதவனா, முயலா?”
“முயல்தான்” என்று தீர்மானமாக மலர் சொன்னதும் சிரித்துவிட்டது லல்லி.
“ஐயோ, இவ்வளவு நாளும் புரிந்துகொள்ளாமல் ஆதவனைத் திட்டிக்கிட்டு இருந்தேனே...” என்று வருத்தப்பட்டது மலர்.
“ஆதவன் உன்னைப் புரிந்துகொள்வான். இனிமேல் அவசியமான விஷயத்துக்கு மட்டும் சண்டை போடு” என்று சிரித்தது லல்லி.
“இனி சண்டை எல்லாம் கிடையாது. சமாதானம்தான்” என்று சொன்ன மலர், பருப்புகளையும் உலர் பழங்களையும் கொடுத்து, லல்லியை அனுப்பி வைத்தது.
- சஞ்சய் சங்கையா