

242 ஆண்டுகளுக்கு முன்பே டெபோரா சாம்சன் ஆண் வேடமிட்டு, அமெரிக்கப் புரட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டிருக்கிறார்!
1760 ஆம் ஆண்டு இன்றைய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பிறந்தார் டெபோரா சாம்சன். தந்தை ஒரு விபத்தில் இறந்துபோனதும் டெபோராவின் குடும்பம் வறுமையில் வாடியது. நோய்வாய்ப்பட்ட டெபோராவின் அம்மா, தன்னுடைய நான்கு குழந்தைகளையும் நான்கு உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைத்தார்.
ஐந்து வயதில் அம்மாவைப் பிரிந்த டெபோரா, தன் அத்தை வீட்டில் வளர்ந்தார். விரைவிலேயே அத்தையும் இறந்துவிட, குழந்தைகள் காப் பகங்களில் தங்கி இருந்தார். எட்டு வயதில் டீகன் தாமஸ் வீட்டில், பத்து ஆண்டுகளுக்குச் சம்பளம் இல்லாத தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார்.
நாள் முழுவதும் கடினமாக உழைத்தார். பசுக்களைக் குளிப்பாட்டினார். பன்றிக்குத் தீவனம் இட்டார். கோழிகளை வளர்த்தார். குதிரைகளைப் பராமரித்தார்.
தாமஸின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து, டெபோராவுக்கும் படிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. உணவுக்கும் தங்கும் இடத்துக்கும் நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தபோது, அவரால் பள்ளிக்குப் போக முடியுமா? எப்படியாவது படிக்க வேண்டும், இந்த மோசமான வாழ்க்கைச் சூழலில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்தார்.
அதற்காக தாமஸின் குழந்தைகளிடம் புத்தகங்களை இரவல் வாங்கினார். உழைத்து, களைத்துப் போயிருந்தாலும் இரவு முழுவதும் எழுத்துக்கூட்டித் தானாகவே படிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் வாத்து இறகை மையில் தோய்த்து, எழுதவும் ஆரம்பித்துவிட்டார்! பத்து ஆண்டுகளில் படிப்பு டெபோராவை ஒரு புதிய மனிதராக மாற்றிவிட்டது.
1778 ஆம் ஆண்டு 18 வயதில் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால், தாமஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் டெபோரா. அது அமெரிக்க வரலாற்றில் முக்கியமான காலகட்டம். இங்கிலாந்தின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கச் சுதந்திரப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.
டெபோரா எங்கு சென்றாலும் போர் குறித்த பேச்சுகளே கேட்டுக்கொண்டிருந்தன. திருமணம் செய்து கொள்ளும்படி அவருடைய அம்மா வற்புறுத்திக்கொண்டே இருந்தார். நினைவு தெரிந்த நாளில் இருந்து அடிமையாக வாழ்ந்த டெபோராவுக்குத் திருமணத்தின் மீது ஆர்வம் இல்லை. எனவே, அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் எடுக்காத ஒரு முடிவைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்தார்.
ஆண்களை மட்டுமே அப்போது ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற சட்டம் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்த டெபோரா, தன்னை ஆணாக வெளிக்காட்டிக்கொள்ள முடிவு எடுத்தார். தலைமுடியை வெட்டிக்கொண்டார். தடித்த ஆடையை அணிந்துகொண்டார். ‘திமோதி தயர்’ என்கிற பெயரைச் சூட்டிக்கொண்டு ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால், விஷயம் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது.
அரசு அலுவலர்கள் வீட்டைத் தேடிவந்தார்கள். டெபோரா தலைமறைவானார். ஒவ்வோர் ஊராகக் குடிபெயர்ந்தார். இறுதியில் பெல்லிங்காமில் உள்ள ஒரு ராணுவ முகாமில் ’ராபர்ட் சர்ட்லிஃப்’ என்கிற பெயரில் இணைந்துகொண்டார்.
தன்னை 17 வயது சிறுவன் என்று டெபோரா சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நியூயார்க் நகரில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
ஒருமுறை எதிரிகளுடன் சண்டையிடும்போது தொடையில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார் டெபோரா. அவரை ராணுவ வீரர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். மருத்துமனையில் தன்னைப் பெண் என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்கிற பயத்தில் தப்பி ஓடினார்.
குண்டு பாய்ந்த தொடையில் இருந்து தானாகவே தோட்டாவை வெளியில் எடுத்தார். ரத்தம் வெளியேறாமல் இருப்பதற்காகத் துணியை இறுக்கமாகக் கட்டினார். உடல்நிலை தேறியதும் மீண்டும் ராணுவப் பணிக்குத் திரும்பினார். டெபோராவின் அர்ப்பணிப்பு ராணுவ அதிகாரிகளிடம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விரைவிலேயே அவருக்கு உயர்பதவியும் வழங்கப்பட்டது.
ஜெனரல் பேட்டர்சன்னின் உதவியாளராக நியமிக்கப்பட்ட டெபோரா, திறமையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ராணுவ மருத்துவர் டெபோராவுக்குச் சிகிச்சை அளித்தார். அப்போது அவர் ஒரு பெண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஒரு கடிதத்தில் இந்த விஷயத்தை எழுதி, பேட்டர்சனுக்குக் கொடுத்து அனுப்பினார்.
டெபோரா நினைத்திருந்தால் அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்திருக்கலாம். அல்லது வேறு ஊருக்குச் சென்றிருக்கலாம். ஆனால், தைரியமாக அந்தக் கடிதத்தை ஜெனரலிடம் ஒப்படைத்தார்.
சட்டத்துக்குப் புறம்பான இந்தச் செயலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்று ஜெனரல் யோசித்தார். 17 மாதங்கள் மிகவும் சிறப்பாகத் தன் பணியைச் செய்த டெபோராவைத் தண்டிக்க அவர் விரும்பவில்லை. அதே நேரம் அவரைப் பணியில் வைத்துக்கொள்ளவும் சட்டத்தில் இடமில்லை. எனவே மன்னித்து, மிகவும் மரியாதையோடு டெபோராவை வழியனுப்பி வைத்தார் ஜெனரல் பேட்டர்சன்.
வறுமையில் வாடி, அடிமையாக உழைத்து, சுயமாகக் கல்வி கற்று, துணிச்சலான முடிவை எடுத்த டெபோரா, பின்னால் வந்த பெண்களுக்கு உதாரணமானவராக மாறினார்!
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com