

முல்லைக் காட்டில் தேன்சிட்டு ஒன்று பூக்களைத் தேடிப் போய்க்கொண்டிருந்தது. வழியெங்கும் செடிகளும் மரங்களும் இருந்தனவே தவிர, அவற்றில் பூக்கள் இல்லை. தேன்சிட்டுக்கோ பசி எடுத்தது.
‘எந்தத் திசையில் பூக்கள் பூத்திருக்கின்றன என்று எப்படித் தெரிந்துகொள்வது?’ என்று யோசித்தபடியே பறந்தது தேன்சிட்டு. வழியில் தேனீ ஒன்று உற்சாகமாகப் பாடிக்கொண்டு வருவதைக் கண்டது.
“நீ உற்சாகமாக வருவதைப் பார்க்கும்போது நிறைய தேன் குடித்திருப்பதாகத் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும் தேன்தான் உணவு. எனக்குப் பசிக்கிறது. நான் வெகு நேரமாகப் பூக்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். ஆனால், பூக்கள் தென்படவே இல்லை. நீ எங்கே தேன் குடித்தாய்? எனக்கும் கொஞ்சம் வழிகாட்ட முடியுமா?” என்று கேட்டது தேன்சிட்டு.
தேனீ சட்டென்று ஒரு செடியின் கிளையில் அமர்ந்தது. தேன்சிட்டும் அதன் அருகில் அமர்ந்தது.
“சரி, நீ தனியாகவா பூக்களைத் தேடி அலைகிறாய்? உனக்கு நண்பர்கள் யாருமே இல்லையா?” என்று கேட்டது தேனீ.
“நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் தனியாகத்தான் பூக்களைத் தேடிச் செல்வேன். இல்லையென்றால் எனக்குக் கிடைக்கும் தேனில் மற்றவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் அல்லவா? அப்படிப் பங்கு கொடுத்தால் எனக்கு எப்படி வயிறு நிறையும்? எங்கள் இனத்தில் நான் மட்டும் அல்ல, எல்லாருமே அப்படித்தான்” என்றது தேன்சிட்டு.
சிரித்த தேனீ, “எங்களுக்கு மட்டும் எப்படி நிறைய தேன் கிடைக்கிறது என்று கேட்டாய் அல்லவா? எங்கள் இனத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று கேட்டது.
“தெரியாதே...”
“நாங்கள் ஒரு துளி பூந்தேனைச் சேகரிக்க பல மைல் தூரம் பறந்து செல்கிறோம். பல நூறு பூக்களிலிருந்து பூந்தேனைச் சேகரிக்கிறோம். நாங்கள் சாப்பிட்டது போக மீதமுள்ள பூந்தேனை எங்கள் வயிற்றில் உள்ள பையில் சேகரித்து, கூட்டுக்கு எடுத்துச் செல்கிறோம். அங்கே இளம் தேனீக்களுக்கும் ராணித் தேனீக்கும் உணவாக இந்தத் தேனைக் கொடுத்துவிடுவோம். நாங்கள் சேகரிக்கும் பூந்தேன் எங்களுக்கானது மட்டுமல்ல, எங்களுடைய மிகப் பெரிய குடும்பத்துக்கானது” என்றது தேனீ.
“சரி, அவ்வளவு தூரத்தில் தேன் நிறைந்த பூக்கள் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள், அதைச் சொன்னால் நானும் அங்கே சென்று தேன் குடிப்பேன் அல்லவா?” என்று கேட்டது தேன்சிட்டு.
“தேனீக்களாகிய நாங்கள் பூக்களைத் தேடி பல திசைகளுக்கும் பறந்து செல்கிறோம். பூக்களைக் கண்டுபிடித்து அவற்றில் தேன் குடித்தால், திரும்பி வரும் வழியில் சந்திக்கிற தேனீக்களிடம் பூக்கள் இருக்கும் திசையைத் தெரிவிப்போம். அந்தத் திசையில் பறந்து சென்று மற்ற தேனீக்களும் தேன் குடிக்கும்.”
“நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறீர்கள்?” என்று வியப்போடு கேட்டது தேன்சிட்டு.
“எங்கள் தேன்கூட்டில் தலைவியாக இருப்பது ராணித்தேனீதான். நாங்கள் எல்லாரும் பணியாளர்கள். ஒற்றுமையாக இருந்தால்தான் நாங்கள் வாழவே முடியும். அதனால் எங்களுக்குள் போட்டி, பொறாமை, சுயநலம் எல்லாம் வருவதில்லை” என்றது தேனீ.
“நீங்கள் எல்லாருமே தேனை, தேன்கூட்டில் சேகரித்து வைப்பதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஒரு தேனீ எடுத்த தேனை மற்ற தேனீக்கள் குடிக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? அதனால் உங்களுக்குள் சண்டை வராதா?”
“நான் சொன்னது உனக்குப் புரியவில்லையா? என் வயிற்றுப் பையில் இருக்கும் வரைதான் அது என்னுடைய தேன். கூட்டுக்குள் வைத்துவிட்டால், அது பொதுவான தேன். அதனால் யாருக்குப் பசி என்றாலும் தேனைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். அங்கே சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை.”
“உங்களுக்கு மட்டும் தேனைச் சேகரித்தால், இவ்வளவு உழைக்க வேண்டிய அவசியம் இல்லையே?”
“நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறே? உழைப்புதான் எங்கள் மூச்சு. உழைப்புதான் எங்கள் மகிழ்ச்சி. அதனால் உழைக்காமல் இருக்கலாமா என்கிற சிந்தனை எல்லாம் எங்களுக்கு வராது.”
“உங்களைப் போன்ற அன்பான, ஒற்றுமையானவர்களை நான் பார்த்தது இல்லை.”
“நாங்கள் எங்களுக்குள் அன்பாகத்தான் இருப்போம். ஆனால், எதிரிகள் யாராவது எங்கள் கூட்டுக்குத் தொந்தரவு கொடுக்க வந்தால், அப்போதும் இதே ஒற்றுமையுடன் கொடுக்கால் கொட்டி, அவர்களை விரட்டிவிடுவோம்.”
“அப்படியா! கொஞ்சம் தள்ளி இருக்கிறேன்.”
“எங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தால், எங்களைக் காப்பாற்றிக்கொள்வதும் எங்களின் கடமைதானே? பயப்படாதே, உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்.”
“உன்னோடு பேசிக்கொண்டிருந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பசியோடு இருக்கிறேன். எந்தத் திசையில் பூக்கள் இருக்கும் என்பதைச் சொன்னால், புறப்பட்டுவிடுவேன்” என்றது தேன்சிட்டு.
“வடதிசையிலேயே இன்னும் கொஞ்ச தூரம் போ. அங்கே நிறைய பூக்கள் பூத்திருக்கின்றன. உன் நண்பர்களையும் அழைத்துச் செல். சேர்ந்து உழைக்கும்போது களைப்பு தெரியாது. பகிர்ந்து உண்ணுகிறபோது உணவும் கூடுதலாக ருசிக்கும்” என்று தேனீ சொல்ல, வடதிசை நோக்கி மகிழ்ச்சியாகப் பறந்து சென்றது தேன்சிட்டு.
- கீர்த்தி