குழந்தை மேதைகள் 16: செஸ்டரின் காது காக்கும் கருவி

குழந்தை மேதைகள் 16: செஸ்டரின் காது காக்கும் கருவி
Updated on
3 min read

பனி அடர்ந்த பிரதேசங்களுக்குச் செல்லும்போது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக விதவிதமான துணிகளை எடுத்துச் செல்கிறோம். கம்பளிச் சட்டையும் காலுறைகளும் சர்வ சாதாரணமாக இருந்த காலகட்டத்தில், குளிர் காற்றிலிருந்து காதுகளைக் காப்பாற்ற எந்த ஒரு கருவியும் இல்லை.

காதுகளைப் பாதுகாக்கும் விதமாக விலங்குகளின் மென்முடியால் உருவாக்கப்படும் ’மஃப்’ (Muff) என்கிற துணியைச் சுற்றி, குளிரில் இருந்து காத்துக்கொண்டார்கள். ஆனால், அது அளவில் பெரியதாக இருந்ததோடு, காதுக்குப் பாதுகாப்பையும் தரவில்லை.

1858இல் வில்லியம் வேர் என்பவர் தாடையை ஒட்டிக் காதுகளைக் காக்கும் கருவி ஒன்றை உருவாக்கினார். ஆனால், அது பார்ப்பதற்கு செயற்கை தாடிபோல் இருந்தது. அதற்குப் பின்னும் இரண்டு பேர் முயன்றார்கள். ஆனால், குளிர் காற்றிலிருந்து காதுகளைக் காப்பாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல என்று ஒதுங்கிக்கொண்டனர்.

செஸ்டர் கிரீன்வுட்
செஸ்டர் கிரீன்வுட்

1858, அமெரிக்காவின் ஃபார்மிங்டன் நகரில் பிறந்த செஸ்டர் கிரீன்வுட், 19 வயதில் தன் ’காதுறை’ கண்டுபிடிப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்டார்!

செஸ்டரின் காதுகள் இயல்பிலேயே பெரிதாக இருந்தன. அவருடைய 15ஆவது பிறந்தநாளுக்குப் பனிச்சறுக்கு காலணி ஒன்று பரிசாக வந்தது. பனி பொழியும் டிசம்பர் மாதத்தில் தன் வீட்டுக்கு அருகில் உறைந்திருந்த குளத்தில் சறுக்கி விளையாட ஆசையாக ஓடினார் செஸ்டர்.‌

விளையாட ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவருடைய காதுகள் விறைத்துவிட்டன. வலி தாங்க முடியாமல் வீட்டிற்கு ஓடினார். விளையாடும் ஆசையில் தலையைச் சுற்றிக் கம்பளித் துணியைச் சுற்றிக்கொண்டு மீண்டும் கிளம்பினார்.

இந்த முறை கம்பளித் துணியால் அவருடைய காதுகளில் அரிப்பு ஏற்பட்டது. மீண்டும் வீட்டிற்கு ஓடினார். ஒரு கம்பியின் முனைகளில் இரண்டு காலுறைகளைக் கோத்து, தலையின் மீது வைத்து, காதுகளை அடைத்துக்கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், பனியில் சறுக்கும்போது காற்றில் ஆடி மீண்டும் தொல்லை கொடுத்தது.

இதற்கு என்னதான் வழி என்று யோசித்து, இறுதியில் ஒரு திட்டத்தைத் தீட்டினார் செஸ்டர். இரண்டு கம்பிகளை வட்டமாக வளைத்து, கம்பளியும் மெல்லிய துணியும் எடுத்துக்கொண்டு, தன் பாட்டி வீட்டிற்குச் சென்றார். பாட்டிக்குத் தையல் கை வந்த கலை.

மெல்லிய துணிக்குள் கம்பளியை வைத்து தைத்து, கம்பியில் கோத்து, தலையில் மாட்டி இரண்டு காதுகளையும் அடைத்துக்கொண்டார் செஸ்டர். இதைப் பார்த்து நண்பர்கள் சிரித்தார்கள்.

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத செஸ்டர், தொடர்ந்து சில மணிநேரம் விளையாடினார். குளிர் காற்றின் தாக்கம் சுத்தமாக இல்லை. செஸ்டர் இயல்பாக விளையாடுவதைக் கண்ட நண்பர்கள், தங்களுக்கும் அந்தக் கருவி வேண்டும் என்று கேட்டார்கள்.

’சாதனையாளர் கிரீன்வுட்டின் காது காப்புக் கருவி’ என்று அதற்குப் பெயர் வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார் செஸ்டர். எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். கம்பிகளில் மாற்றம் செய்து, மேலும் கருவியைச் சிறப்பாக உருவாக்கினார். விரைவிலேயே புகழும் பணமும் செஸ்டரைத் தேடிவந்தன.

செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்து, ஏராளமானவர்கள் காது காப்புக் கருவியைக் கேட்டு ஓடிவந்தனர். தொழிற்சாலையை நிறுவினார் செஸ்டர். அடுத்த 60 ஆண்டுகளுக்கு அந்தத் தொழிற்சாலை சிறப்பாக இயங்கியது.

1877ஆம் ஆண்டு 19 வயதில் காது காப்புக் கருவிக்கான உரிமத்தைப் பதிவு செய்து, வரலாற்றில் இடம்பெற்றார் செஸ்டர். அவர் கண்டுபிடித்த கருவிகளின் பட்டியல் நீண்டது. வட்டமான கீழ்ப்பாகம் உடைய கொதிகெண்டி, குடை வைக்கும் பை, கலைத்துக் கட்டும்படியான தற்காலிக வீடுகள், மடித்து வைக்கும் படுக்கை என 130க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராக செஸ்டர் இன்று அறியப்படுகிறார்.

தான் சம்பாதித்த பணத்தில் அந்த ஊரிலேயே முதல் ஆளாக நீராவி இயந்திரத்தில் இயங்கும் கார் ஒன்றை வாங்கினார். பெரிய வீட்டைக் கட்டினார். இளம் வயதிலேயே தன் திறமையால் உயர்ந்த செஸ்டரை இன்றும் மக்கள் நினைவுகூர்கிறார்கள்.

டிசம்பர் முதல் சனிக்கிழமை மெய்ன் நகரில் ’செஸ்டர் கிரீன்வுட் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. அவர் நினைவாக மக்களும் விலங்குகளும் ’காதுறை’ அணிந்துகொண்டு பேரணியில் கலந்துகொள்கிறார்கள். குளிர் இருக்கும்வரை, செஸ்டர் நம் காதுகளோடு வாழ்வார்!

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in