

ஐ
ந்து வயதில் குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள். ஆனால் டோலி ஷிவானி 5 வயதில் ஆசிய அளவில் சாதனைகளை நிகழ்த்திவருகிறார்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் வசித்துவருகிறார் டோலி ஷிவானி செருகூரி. இவரது தந்தை டோலி சத்யநாரயணனும் வில்வித்தை வீரர். சொந்தமாக ஒரு வில்வித்தை அகாடெமியை நடத்திவருகிறார். டோலி ஷிவானிக்கு ஒரு வயதிலிருந்தே வில்லை எப்படிப் பிடிப்பது, அம்பை எவ்வாறு விடுவது என்று கற்றுக்கொடுத்துள்ளார்.
டோலியும் தன் அப்பாவின் பயிற்சியால் விரைவிலேயே வில்வித்தையைக் கற்றுக்கொண்டார். இரண்டு வயதிலேயே வில்வித்தைத் தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டு, 200 புள்ளிகளை எடுத்து முதல் முறையாக இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
சமீபத்தில் ஆசிய புக் ஆப் ரெக்காட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய புத்தகங்களில் இடம்பெறுவதற்காக டோலி போட்டிகளில் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் வெறும் 11 நிமிடங்கள் 19 நெடிகளில் 10 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி 103 அம்புகள் விட்டார். 5 நிமிடங்கள் 8 நெடிகளில் 20 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 36 அம்புகள் விட்டார். 360 புள்ளிகள் கொண்ட இலக்கில் 290 புள்ளிகள் எடுத்து ஆசிய புக் ஆஃப் ரெக்காட்ஸ் மற்றும் இரண்டாவது முறையாகவும் இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் டோலி ஷிவானி.
வருங்காலத்தில் வில்வித்தையில் டோலி ஷிவானி மூலம் இந்தியாவுக்குப் பெருமை கிடைக்கப் போவது நிச்சயம்!