

“எல்லாரும் நான் மேதை என்று சொல்கிறார்கள். ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம். ஆனால், பாகிஸ்தானில் என்னைப் போலவே பல சிறார்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களையும் பட்டை தீட்டிவிட்டால் என்னைக் காட்டிலும் நன்றாக ஜொலிப்பார்கள். என்னுடைய லட்சியமும் அதுதான்” என்று உலக நாடுகளில் உரையாற்றியவர் ஆர்ஃபா கரீம்.
ஆர்ஃபா கரீம் (Arfa Karim), 1995ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஃபைசலாபாத் நகரில் பிறந்தவர். தன் ஐந்தாவது வயதில் பள்ளிக்குப் புதிதாக வந்த கணினியைப் பார்த்து, தனக்கும் ஒன்று வேண்டும் என்று தந்தை அம்ஜத்திடம் கேட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் வேலை செய்துவந்த அம்ஜத், ஆர்ஃபாவுக்குக் கணினி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அன்று முதல் ஆர்ஃபாவின் உலகம் விரிந்துகொண்டே சென்றது.
நுணுக்கமான திறன்களை விரைந்து கற்றுக் கொண்டார். மகளின் ஆர்வத்திற்குத் தீனிபோடும் விதமாக அருகிலிருக்கும் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பவியல் பயில ஏற்பாடு செய்தார் அம்ஜத். ஆர்ஃபாவின் அறிவு மேலும் மேலும் விரிவடைந்தது.
2004ஆம் ஆண்டு தன் ஒன்பதாவது வயதில் மைக்ரோசாஃப்ட்டின் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மிக இளைய வல்லுநர் என்கிற பெருமையை பாகிஸ்தானுக்குத் தேடித்தந்தார் ஆர்ஃபா.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆர்ஃபா பற்றி அறிந்து ஆச்சரியத்தில் உறைந்துபோனார். மைக்ரோசாஃப்ட் தலைமையகத்துக்கு வருமாறு ஆர்ஃபாவுக்கும் அவர் பெற்றோருக்கும் அழைப்பு விடுத்தார்.
“என் வயதுப் பெண்கள் ஏன் மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்யக் கூடாது? ஐ.டி நிறுவனங்களில் பெண்கள் ஏன் அதிக அளவில் இருப்பதில்லை?” என்றெல்லாம் பில் கேட்ஸிடம் நீண்ட உரையாடலை நிகழ்த்தினார் ஆர்ஃபா. இதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
பாகிஸ்தான் திரும்பிய ஆர்ஃபாவுக்குத் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்சி ஊடகங்களும் பத்திரிகைகளும் ‘ஆர்ஃபா’ புகழ்பாடின. 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசின் மூன்று முக்கிய விருதுகளை ஆர்ஃபா பெற்றார். அவற்றில் ஒன்று, ‘செயல்திறனுக்கான பெருமை’ விருது. மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்கிற சிறப்பு இன்றளவும் ஆர்ஃபாவிடமே இருக்கிறது.
2006இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ‘மைக்ரோசாஃப்ட் டெவலப்பர்கள்’ மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார் ஆர்ஃபா. 5 ஆயிரம் டெவலப்பர்களில் ஒரே ஒரு பாகிஸ்தானியராகக் கலந்துகொண்ட ஆர்ஃபாவை, ஸ்பெயின் பிரதமர் புகழ் மழையால் நனைத்தார்.
2010இல் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கிய ‘இவோ’ சேவையின் விளம்பரத் தூதராக ஆர்ஃபா நியமிக்கப்பட்டார்.
உலக அளவில் புகழும் அங்கீகாரமும் பெற்றாலும் ஆர்ஃபாவுக்கு ஓர் ஆசை இருந்தது. ஐவி லீக் பள்ளியில் பட்டம் பெற்று, மென்பொருள் வடிவமைப்பாளராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், 16ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்ஃபா. பில் கேட்ஸ் ஆர்ஃபாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களின் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தார்.
2012 ஜனவரி 14இல் கணினி மேதை ஆர்ஃபா கரீம் மறைந்தார். இவரின் நினைவாக லாகூரில் இருக்கும் மிகப்பெரிய தொழில்நுட்பப் பூங்காவிற்கு, ‘ஆர்ஃபா தொழில்நுட்பப் பூங்கா’ என்று பெயர் சூட்டிக் கௌரவித்திருக்கிறது பாகிஸ்தானிய அரசு.
மலாலா உள்படப் பல பாகிஸ்தானிய பெண்கள் வெளியுலத்துக்கு வருவதற்குப் பாதை அமைத்து தந்திருக்கிறார் இந்த ஆர்ஃபா கரீம்.
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com