

சில நாள்களுக்கு முன்பு பலத்த காற்றில் வேங்கை மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்தன. இப்போது புதிய இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. கீழே கிடந்த காய்ந்த இலைகளைக் காற்று நகர்த்தி விளையாடிக்கொண்டிருந்தது.
மினி, வினி என்கிற புதிய இலைகள் மிகுந்த உற்சாகத்துடன் காற்றில் அசைந்தாடின. அவற்றைப் பக்கத்துக் கிளையில் இருந்த இரண்டு முதிர் இலைகள் ரசித்தன.
“ஏய் வினி, மரம் முழுவதும் புதிய இலைகளாகவே இருக்கிறோம். அந்த இரண்டு இலைகள் மட்டும் பழைய இலைகள். இந்தக் கிழட்டு இலைகளால் மரத்துக்கு என்ன லாபம்?” என்றது மினி.
“நீ, முதிர் இலைகளின் மனதைக் காயப்படுத்துகிறாய். இளம் வயதில் அவை துடிப்போடு இருந்திருக்கும். வாழ்நாள் முழுவதும் மரத்திற்கு உணவு தயாரித்துக் கொடுத்திருக்கும். இப்போது முதுமையில் கொஞ்சம் ஓய்வு எடுக்கின்றன” என்று பழுத்த இலைகளுக்காக வினி பரிந்து பேசியது.
“கீழே நிலத்தைப் பார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காய்ந்த இலைகள் மண்டிக்கிடக் கின்றன. அவை எதற்கும் உதவாதவை. இந்த இரண்டு முதிர் இலைகள் உதிர்வதால் மரத்துக்கு என்ன நஷ்டம்?”
மினி உதிர்த்த வெறுப்பு வார்த்தைகளைக் கேட்டு, பதில் பேசாமல் அமைதியானது வினி. இளம் இலைகளின் விவாதத்தைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு மைனா, முதிர் இலைகள் இருந்த கிளைக்குத் தாவியது.
அப்போது முதிர் இலைகளில் ஒன்று, “ஐயோ, நமக்கு வயதாகிவிட்டது. நாம் ஏன் இன்னும் இந்த மரத்துக்குப் பாரமாக இருக்க வேண்டும்?” என்றது.
“நாமும் உதிரத்தான் போகிறோம். அதுவரை பொறுமையாக இரு” என்றது மற்றோர் இலை.
“உண்மைதான். ஆனாலும், மனம் ஏனோ அமைதிகொள்ள மாட்டேன் என்கிறது.”
“நீயா இப்படிப் பேசுகிறாய்? நம் இளம் வயது நினைவுகளை நினைத்துப் பார். எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம்! கவலையை விடு. நம் உருவத்தில் எந்த மாறுதலும் இல்லை. நிறத்தில் மட்டுமே மாற்றம். பச்சை நிறத்திலிருந்து பொன் நிறத்திற்கு மாறியிருக்கிறோம். அவ்வளவுதான்!”
“நீ எப்போதும் மற்றவர்களைப் பாராட்டிப் பேசுவாய். ஊக்கமளிப்பாய். அப்படித்தானே நம் நட்பு ஆரம்பித்தது!”
“உதிர்ந்தாலும் நாம் மண்ணுக்கு உரமாகத்தான் இருக்கப் போறோம்” என்று ஆறுதலாகப் பேசிய அந்த முதிர்ந்த இலை, சற்று நேரத்தில் உதிர்ந்தது.
அப்போது, மரத்துக்குக் கீழே ஒரு மான் குட்டி ஓய்வெடுக்க வந்தது. அதைப் பார்த்த உற்சாகத்தில் மரத்திலிருந்த மைனா மான் குட்டியின் முதுகில் உட்கார்ந்துகொண்டது. காற்றின் வேகம் இப்போது குறைந்திருந்தது.
திடீரென்று புதர் மறைவிலிருந்த சிறுத்தை, மானைப் பிடிக்கப் பாய்ந்து வந்தது. அதன் பிடியில் சிக்காமல், கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியது மான் குட்டி.
அங்கே நடப்பவற்றை எல்லா இலைகளும் கவனித்தன.
“இப்போது என்ன நடந்தது தெரியுமா?” என்று மினியிடம் கேட்டது வினி.
“எதுவும் புரியல.”
“நிலத்தில் விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகள்தாம் மான் குட்டியைக் காப்பாற்றின...”
“ஆ... எப்படி?”
“பசியோடு இருந்த சிறுத்தை, மான் குட்டியைப் பின்தொடர்ந்து வந்தது. தரையில் கிடந்த காய்ந்த இலைகளின் மீது சிறுத்தையின் பாதங்கள் பட்டவுடன் ஓசை வந்தது. உடனே மான் குட்டி ஓடிவிட்டது. காய்ந்த இலைகளால் மான் குட்டி இன்று உயிர் பிழைத்துவிட்டது.”
“ஓ... காய்ந்த இலைகள் இன்று ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கின்றன! நல்ல விஷயம்” என்றது மினி.
சில நிமிடங்களில் புதிதாக ஒரு கம்பளிப்புழு தன்னை நோக்கி வருவதைப் பார்த்து அலறியது மினி.
“பயப்படாதே. உலகில் எல்லா உயிர்களும் பிற உயிர்களைச் சார்ந்தே வாழ்கின்றன. புழுக்களின் உணவுத் தேவைக்காக, நாம் தியாகம் செய்யத்தான் வேண்டும்” என்று மினியைத் தேற்றியது வினி.
“நான் முதிர்ந்து உதிர வேண்டும் என்று நினைத்தேன். இப்படி அற்ப ஆயுளில் போக விரும்பவில்லை. ஐயோ, புழு அருகில் வந்துவிட்டதே...”
கிளைக்கு வந்த மைனா, இலையில் ஊர்ந்து கொண்டிருந்த புழுவைக் கொத்தித் தின்றது.
“இப்போது மைனாவின் உணவுத் தேவை பூர்த்தியாகிவிட்டது. நீ உயிர் பிழைத்தாய்” என்று சிரித்தது வினி.
வாழ்க்கைப் பாடத்தை ஓரளவுக்குக் கற்றுக் கொண்டதாக நினைத்த மினி, பக்கத்துக் கிளையில் மிச்சமிருந்த ஒரு முதிர் இலையை அன்பாக நோக்கியது.
அடுத்த சில நொடிகளில் கடைசி முதிர் இலையும் உதிர்ந்தது. வினியும் மினியும் தலை வணங்கித் தங்கள் அன்பைச் செலுத்தின.