Published : 13 Sep 2017 10:46 AM
Last Updated : 13 Sep 2017 10:46 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சிவப்பு நிறத்தைக் கண்டு மாடு மிரள்வது ஏன்?

டூத் பிரஷ் பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளைக் கூடச் சுத்தம் செய்துவிடுகிறது. ஆனால், ஆலங்குச்சியும் வேப்பங்குச்சியும் அப்படி இல்லாவிட்டாலும், அதை ஏன் சிறந்தவை என்கிறோம் டிங்கு?

–எஸ்.எஸ்.எம்.எஸ். மணியன், ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

குச்சியால் பல் துலக்கினாலும் குச்சியின் நுனியைக் கடித்து, பிரஷ்போல் மாற்றிக்கொண்டுதான் பல் துலக்க வேண்டும். அதனால் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளைக் குச்சியும் நீக்கிவிடும் மணியன். ஆல், நாவல், மா, நொச்சி, புங்கை, கொய்யா குச்சிகள் சற்றுத் துவர்ப்புச் சுவையுடையவை. இவற்றால் பல் துலக்கும்போது ஈறுகளில் உள்ள புண்களும் ரத்தம் வடிதலும் குணமாகும். பற்களும் பளிச்சென்று தெரியும். கசப்பான வேப்பங்குச்சியால் பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமடைகின்றன. அதனால்தான் இதுபோன்ற குச்சிகளில் பல் துலக்குவது சிறந்தது என்கிறார்கள்.

தபால்தலைகளைச் சேகரித்த அனுபவம் உண்டா டிங்கு? நானும் தபால்தலை சேகரிக்க விரும்புகிறேன். எப்படிச் சேகரிக்க வேண்டும் என்று ஆலோசனை தரமுடியுமா டிங்கு?

–பி. வனிதா, மேலூர்.

தபால்தலை, நாணயங்கள் போன்றவற்றைச் சேகரித்திருக்கிறேன் வனிதா. அப்போது எனக்கு யாரும் இது குறித்து வழி காட்டாததால் எனக்குக் கிடைத்தவற்றைச் சேகரித்து வைத்திருந்தேன். உள்நாட்டுத் தபால்தலைகள், வெளிநாட்டுத் தபால்தலைகள், சிறப்புத் தபால்தலைகள் எல்லாம் என் சேகரிப்பில் இருந்தன. நீங்கள் இந்தியத் தபால்தலைகளை மட்டுமே சேகரிக்கலாம். அல்லது வெளிநாட்டுத் தபால் தலைகளை மட்டும் சேகரிக்கலாம். பறவைகள், விலங்குகள், வாகனங்கள், தலைவர்கள் என்று ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பிக்கலாம். இப்படித் தனித்தனியாகச் சேகரிப்பது கடினம் என்றால், ஒரே ஆல்பத்தில் தனித் தனியாகப் பக்கங்களை ஒதுக்கி, கலவையாகச் சேகரிக்கலாம். உங்கள் விருப்பம்.

மாடுகள் ஏன் சிவப்பு நிறத்தைக் கண்டு மிரள்கின்றன டிங்கு?

-ஆர். ஜான்சன், அரசினர் மேல்நிலைப் பள்ளி, டிரஸ்ட்புரம், சென்னை.

மாடுகள் சிவப்பு நிறத்தைக் கண்டு மிரள்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ஜான்சன்? அப்படி ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்த் திரைப்படங்களில்தான் இதுபோன்ற தவறான காட்சிகள் எல்லாம் காண்பிக்கப்படுகின்றன. மாடுகளின் கண்களுக்குச் சிவப்பு. பச்சை என்று நிறங்களை அறிந்துகொள்ளும் சக்தி கிடையாது. வெளிர் நிறங்களைச் சாம்பல் வண்ணமாகவும் அடர் நிறங்களைக் கறுப்பு வண்ணமாகவும் மட்டுமே அறிய முடியும். மாடு மட்டுமல்ல, குதிரை, நாய், பூனை, புலி போன்ற விலங்குகளாலும் நிறங்களைப் பார்க்க முடியாது.

குற்றாலத்தில் இப்போது நல்ல சீசன். உன்னுடைய உறவினர்கள் எல்லாம் அதிகம் இருக்கிறார்கள். உன்னுடைய தோழி நானும் இருக்கிறேன். நீ வருவாயா டிங்கு?
–எம். சுமித்ரா, தென்காசி.

அடடா! குற்றாலத்தில் எனக்கு ஒரு தோழி இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டதே! போன வாரம்தான் குற்றாலம் வந்திருந்தேன். என் உறவினர்களுடன் மரங்களிலும் மலைகளிலும் சுற்றிவந்தேன். அருவியில் குளித்தேன். மெல்லிய தூறல்களும் இதமான குளிருமாகக் குற்றாலம் அட்டகாசமாக இருந்தது சுமித்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x