

“இதோ சிறிது நேரத்தில் புதிய ஜெனரல் வந்துவிடுவார்! எல்லாரும் தயாராகுங்கள்!” வீரர்கள் அனைவரும் ஜெனரலை வரவேற்கத் தயாரானார்கள்.
விக்டரும் தயாராகவே இருந்தது. அதன் தலையில் அலங்காரத்துக்காக மலர்கள் சூடப்பட்டிருந்தன. முதுகில் சிவப்புப் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஐம்பது குதிரைகள் விக்டருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தன. ஆனால், எதற்கும் விக்டரைப் போன்ற அலங்காரம் இல்லை. ‘என்ன இருந்தாலும் நான் புதிய ஜெனரலின் குதிரையல்லவா’ என்று கர்வத்துடன் நினைத்துக்கொண்டது விக்டர்.
சிறிது நேரத்தில் ஜெனரல் தன் பரிவாரத்துடன் வாசலுக்கு வந்தார். விக்டரின் இதயம் வேகமாகத் துடித்தது. ஜெனரல் அருகில் வந்தபோது மெல்ல தலையை உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்தது விக்டர். புன்னகை வடியும் முகம். ஜெனரல் அதன் முதுகில் தட்டிவிட்டு, தாவி ஏறினார். விக்டருக்கு மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. அவர் கை எவ்வளவு வலிமையாக இருக்கிறது! நிச்சயம் இவர் மாவீரர்தான். இங்கிலாந்துடன் சண்டை போட்டு நிச்சயம் பிரான்ஸை இவர் விடுவித்துவிடுவார்.
விக்டர் கம்பீரமாக முன்னால் தாவிச் செல்ல, பிற வீரர்கள் பின்தொடர்ந்தனர். இப்போது அவர்கள் ஜெனரலின் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். இனி விக்டர் அங்கேதான் வசிக்க வேண்டும்.
திடீரென்று விக்டருக்கு அந்தச் சந்தேகம் எழுந்தது. ஜெனரலின் மீசையைப் பார்க்கவில்லையே? மேல் நோக்கி இருந்ததா, அல்லது கீழ் நோக்கிச் சாய்ந்திருந்ததா? சரியாகப் பார்க்காமல் விட்டதற்காக வருத்தப்பட்டது விக்டர்.
ஹோ ஹோவென்று கத்தியபடி ஜெனரல் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தினார். இடையில் பாய்ந்த ஓடையை ஒரே தாவாகத் தாவியது விக்டர். அப்போது கீழே நீரில் ஜெனரலின் முகம் தெரிந்தது. திடுக்கிட்டது விக்டர். இதென்ன இந்த ஜெனரலின் முகத்தில் மீசை இல்லை. தலைமுடியும்கூட நீண்டு இருக்கிறதே!
அப்போது விக்டருக்கு அருகில் வந்த மற்றொரு குதிரையான சிம்சன், “விக்டர், விஷயம் தெரியுமா? நீ சுமந்துவரும் ஜெனரல், ஆணல்ல, பெண்!” என்றது.
சொன்னதோடு நிற்காமல் கேலியாகச் சிரிக்கவும் செய்தது சிம்சன். விக்டர் அதிர்ந்துவிட்டது.
‘ஐயோ, நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டதே... என்ன செய்வது? ஒரு மாவீரனின் குதிரை என்றல்லவா பெருமையுடன் இருந்தேன்! என் பெற்றோரை எந்த முகத்தோடு பார்ப்பேன்? நண்பர்களை எப்படிச் சமாளிப்பேன்?’
விக்டரின் வேகம் குறைந்தது. பல மாவீரர்களைச் சுமந்து சென்ற நான், இறுதியில் ஒரு பெண்ணையா ஜெனரலாக ஏற்க வேண்டும்? பிரான்ஸ் மன்னர் எப்படி இவரை ஜெனரலாக நியமித்தார்?
கூடாது, இனி என் முதுகில் இவர் ஏறக் கூடாது. சடாரென்று ஓரிடத்தில் வேகத்தைக் குறைத்து வேண்டுமென்றே விழுந்தது விக்டர். ஜெனரலும் தடுமாறி விழுந்துவிட்டார்.
சமாளித்து எழுந்தபோது விக்டர் வேண்டுமென்றே நொண்ட ஆரம்பித்தது. உடனே ஜெனரல் பக்கத்தில் இருந்த இன்னொரு குதிரையின்மீது தாவி ஏறி பறந்து சென்றார்.
அன்று இரவு விக்டருக்குத் தூக்கமே வரவில்லை. இன்று சமாளித்துவிட்டோம், நாளை என்ன செய்வது?
“என்ன விக்டர், யோசனை?” என்று கேட்டது சிம்சன்.
“ஒரு பெண்ணை எப்படி ஜெனரலாக நியமித்தார்கள்? எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை?”
“இந்தப் பெண்ணுக்குப் பதினாறு வயதுதான் ஆகிறதாம். பெயர் ஜோன் ஆஃப் ஆர்க். எழுதப் படிக்கத் தெரியாதாம். இதற்கு முன்னால் போர்க்களத்தைக்கூடப் பார்த்ததில்லையாம். கத்தியைக்கூடப் பிடிக்கத் தெரியாதாம். நல்ல வீரர்தான் மாட்டியிருக்கிறார், போ!”
“ஐயோ... முதல் முறையாக நான்தான் இவரைச் சண்டைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? இவர் எப்படி இங்கிலாந்து வீரர்களை வெல்வார்? தோல்வியடைந்த குதிரை என்று என்னையும் அல்லவா கிண்டல் செய்வார்கள்?” என்று சொல்லும்போதே விக்டரின் கண்கள் கலங்கின.
அப்போது ஜோன் வெளியில் வந்தார். வரிசையாக நின்றுகொண்டிருந்த குதிரைகளைப் பார்த்தபடி விக்டரை நெருங்கினார். அவர் முகத்தில் கவலை தெரிந்தது. விக்டரின் கழுத்தைத் தடவிக்கொடுத்தார். “எப்படி இருக்கிறாய் விக்டர்? அடி எதுவும் படவில்லையே?”
ஆசையாகத் தடவிக்கொடுத்துவிட்டு, உள்ளே சென்ற ஜோனை ஆச்சரியத்துடன் பார்த்தது விக்டர். அப்போது வீரர்களின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“இந்தப் பெண் நம்மை வழிநடத்திச் செல்லப்போகிறாராம், கேட்டாயா கொடுமையை?”
“ஜெனரலின் உடையை அணிந்துகொண்டால் வீரம் வந்துவிடுமா? எதிரிகளின் அம்புகளையும் ஈட்டிகளையும் எதிர்கொள்வது சாதாரண காரியமா?”
“பார்த்துக்கொண்டே இரு, இவர் வாளைத் தூக்கிப்போட்டுவிட்டு ஓடத்தான் போகிறார்.”
விக்டர் இரவு முழுக்க உறங்கவே இல்லை. எவ்வளவோ மாவீரர்களிடம் பணியாற்றியிருக்கிறேன், போரில் எத்தனையோ காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், யாராவது என்னை நெருங்கி வந்து கவனித்திருப்பார்களா? எப்படி இருக்கிறாய் என்று விசாரித்திருப்பார்களா?
தன் மீதே கோபம் வந்தது விக்டருக்கு. ஒரு பெண் என்று அவரை ஏளனமாக நினைத்துவிட்டேனே! இந்த மனிதர்களுடன் சேர்ந்து, அவர்களின் குணம் எனக்கும் வந்துவிட்டதா?
ஜோன் நிச்சயம் சாதாரண மனிதர் இல்லை. எதிரிபோல் நினைத்துத் தள்ளிவிட்ட என்னையே நொடியில் அவர் வென்றுவிடவில்லையா? ஒரே ஒரு சொல்லில் என்னை அவர் மாற்றிவிடவில்லையா? இதோ, கேலி பேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் இவர்களை, நாளை ஜோன் வெல்லத்தான் போகிறார்! போர்க்களத்தில் இங்கிலாந்து வீரர்களையும்கூட இவர் நிச்சயம் வெல்வார்.
எழுதப் படிக்கத் தெரியாத, போர் என்றால் என்னவென்றே தெரியாத இந்தப் பெண்ணிடம் இருந்து, மகா அறிவாளிகளும் மாவீரர்களும் விரைவில் பாடம் கற்கப்போகிறார்கள். ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உலகம் கற்கப்போகிறது.
விக்டர் துள்ளி எழுந்தபோது விடிந்திருந்தது.
கதவு திறந்தது. ஜோன் வெளியில் வந்தார். வரிசையாக அணிவகுத்து நின்ற வீரர்களைப் பார்வையிட்டார். சட்டென்று தன் வாளை உருவி வானை நோக்கி உயர்த்தினார்.
“பிரான்ஸுக்காகப் போரிடுவேன்! பிரான்ஸுக்காகஉயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்!”
வீரர்கள் முழங்கினார்கள், “பிரான்ஸுக்காகப் போரிடுவேன்! பிரான்ஸுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்!”
விக்டரும் தனது முன் பக்கக் கால்களை உயர்த்தி கத்தியது, “ஜோனுக்காகப் போரிடுவேன்! ஜோனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்!”
(பிரெஞ்சுப் படைக்குத் தலைமையேற்று வழிநடத்தி, ஆங்கிலேயர்களை விரட்டியடித்து, நாட்டைக் காப்பாற்றியவர் ஜோன் ஆஃப் ஆர்க்.)
- மருதன் | marudhan@gmail.com