

புற்றுநோயாளிகள் ஏன் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள், டிங்கு?
- சு. ஓவியா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும்போது, அவற்றைத் தாக்கி, செயல் இழக்கும் வகையில் கீமோதெரபி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் புற்றுநோய் செல்களை மட்டும் தாக்காமல், உடலில் வளரும் மற்ற செல்களையும் தாக்குகின்றன. இதன் காரணமாக முடியின் வேர்களும் பாதிக்கப்படுகின்றன.
அதனால் முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. தலைமுடி மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் முடிகளும் உதிர்ந்துவிடுவது உண்டு. எல்லாப் புற்றுநோயாளிகளுக்கும் இந்தப் பாதிப்பு ஒரே மாதிரியாக இருக்காது. அவரவருக்குக் கொடுக்கப்படும் கீமோதெரபி மருந்துகளின் அளவைப் பொறுத்து பாதிப்பும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும், ஓவியா.
நாகப்பாம்பு ஒன்று ரத்தினக் கல்லைக் கக்குவது போன்று வீடியோ பார்த்தேன். உண்மையா, டிங்கு?
- ஜெ. ரஞ்சன், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை.
சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் இதுபோன்ற செய்திகளை நாம் உண்மை என்று நினைத்துவிடக் கூடாது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உண்மை போன்று போலியான செய்திகளைச் சிலர் பரப்புகிறார்கள். ரத்தினக் கல் இயற்கையாகக் கிடைப்பது. நாகப்பாம்பு ரத்தினக்கல் உள்பட எந்தக் கல்லையும் கக்காது. பாம்பு கடிக்கும்போது மட்டுமே நச்சுப் பையிலிருந்து நஞ்சு வெளிவரும். மற்றபடி அந்த நஞ்சு கெட்டியாகி, கல்லாக மாறாது, ரஞ்சன்.
சிலர் தூக்கத்தில் உளறுகிறார்களே ஏன், டிங்கு?
- அ.ரா. அன்புமதி, 10-ம் வகுப்பு, லிட்ரசி மிசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சோமனூர், கோவை.
நாம் தூங்கும்போது ஒரே மாதிரியாகத் தூங்குவதில்லை. சில நேரம் லேசான தூக்கத்தில் இருப்போம். சில நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம். இதை மருத்துவத்தில் Rapid Eye Movement, Non Rapid Eye Movement என்பார்கள். இந்த நிலைகளிலும் பல கட்டங்கள் இருக்கின்றன.
பல செயல்பாடுகள் நடைபெறுகின்றன. தூக்கத்தில் வரும் கனவு, அலறல், சிறுநீர் கழிப்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல்களை எல்லாம் பாராசோம்னியாஸ் (Parasomnias) என்று அழைக்கிறார்கள்.
பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளே தூக்கத்தில் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரும்பாலும் பேசுவது தெளிவாக இருக்காது. என்ன பேசுகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. வளர்ந்த பிறகு தூக்கத்தில் பேசுவது பெரும்பாலும் நின்றுவிடும்.
அதனால் பயப்படத் தேவையில்லை. பெரியவர்களும் தூக்கத்தில் எப்பொழுதாவது பேசினால், அதுவும் பிரச்சினை இல்லை. ஆனால், அடிக்கடி தூக்கத்தில் பேசினால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். தூக்கத்தில் ஏன் பேசுகிறார்கள் என்பதற்கான சரியான காரணத்தை இன்னும் மருத்துவ உலகம் கண்டுபிடிக்கவில்லை, அன்புமதி.