குழந்தை மேதைகள் 14: எகிப்தின் வரலாற்றை உலகறியச் செய்தவர்!
நீர் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது, ‘W’ என்கிற எழுத்து நீர் அலை போன்று தெரிகிறதா? நைல் நதியை ஆங்கிலத்தில் எழுதும்போது ‘N’ என்கிற எழுத்து அலை மேலெழும்பி விழுவதுபோல் தோற்றம் தருகிறதா? இந்தப் புதிர்களை எல்லாம் பதின்வயதுச் சிறுவன் ஒருவன் புரிந்துகொண்டு உலகிற்குச் சொன்ன கதையில்தான், எகிப்தின் பழங்கால வரலாறு உலகத்துக்குத் தெரியவந்தது.
1790, டிசம்பர் 23 அன்று ஜான் பிரான்ஸ்வா ஷாம்போலியோ (Jean-Franois Champollion) பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அவரின் தந்தை ஷாம்போலியோ ஜாக்ஸ், புத்தக வியாபாரி.
கேநோபிலில் இருக்கும் பெரிய மகன் ஜோசப்புடன் படிக்கட்டும் என்று ஜானை அனுப்பி வைத்தார். அது ஜானுக்கு அற்புதமான வாய்ப்பை வழங்கியது. ஜோசப் வழிகாட்டுதலில் ஜானின் உலகம் விரிவடைந்தது.
பிரான்ஸ் புரட்சியாளர் நெப்போலியன் போனபர்ட் பற்றி நிறைய படித்தார் ஜான். எகிப்தின் வரலாற்றைத் தோண்டி எடுத்து உலகிற்குச் சொன்னதில், அவரின் படையெடுப்புக்குப் பெரும்பங்கு இருந்தது. வளர்ந்த பிறகு தானும் எகிப்துக்குச் சென்று, ஆய்வு செய்யப்போவதாக ஜோசப்பிடம் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜான்.
தம்பியின் அறிவையும் ஆர்வத்தையும் அறிந்த ஜோசப், 11 வயதில் ஜானை விஞ்ஞானி ஜோசப் ஃபூரியே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் எகிப்துப் போரின்போது நெப்போலியனோடு இருந்தவர். வீடு முழுக்க எகிப்துப் புதையல்களும் சித்திர எழுத்துகளுமாகச் (Heiroglyphs) சிதறிக் கிடந்தன.
அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆவலில், “இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று விஞ்ஞானியிடம் கேட்டார் ஜான். “யாருக்கும் தெரியாது” என்றார் அவர். “நிச்சயம் ஒருநாள் இவற்றுக்கு எல்லாம் விளக்கம் தருவேன்” என்று ஜான் சொன்னதைக் கேட்டு, ஜோசப் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார்.
ஜோசப் கொடுத்த எகிப்து குறித்த புத்தகங்களை இரவு, பகலாகப் படித்தார் ஜான். அடுத்த 5 ஆண்டுகளில் 6 பழங்கால மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். ரோசெட்டா கல்லின் (Rosetta Stone) மாதிரியைப் படிக்க முயன்றார். அதற்காக எகிப்தின் பழங்கால மொழிகளைப் படித்து, தன் முதல் கட்டுரையைச் சமர்பித்தார். அதுவரை சித்திர எழுத்துகளாக உலகறிந்த எகிப்தின் புராதனச் சின்னங்கள், இப்போது வரலாறாக மாறின.
தன் 19ஆவது வயதில் கேநோபிலில் இருக்கும் கல்லூரி ஒன்றில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து, சித்திர எழுத்துகள் குறித்து முழுமையான ஆய்வில் இறங்கினார் ஜான்.
நெப்போலியன் கேநோபிலுக்கு வந்தபோது, ஜானின் எகிப்து குறித்த உரையாடலில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் பேசியிருக்கிறார். ஜானை எகிப்துக்கு அழைத்துச் செல்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் தோல்வி அடைந்தார். கேநோபில் சூறையாடப்பட்டது. இதனால் சில காலம் ஜானால் ஆய்வைத் தொடர முடியவில்லை.
இந்த நேரத்தில் ஆங்கிலேயர் ஒருவர் ரோசெட்டா கல்லின் எழுத்துகள் சிலவற்றைப் படித்து, விளக்கத்தை வெளியிட்டார். எகிப்தின் பண்டைய வாசலை ஆங்கிலேயர்கள்தாம் திறந்து வைப்பார்கள் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர்.
ஆய்வில் தீவிரமாக இறங்கினார் ஜான். தன்னுடைய 30ஆவது வயதில் குறிப்புகளைத் தொகுத்து முடித்தார். கேநோபிலில் இருந்து பாரிஸ் சென்று ரோசெட்டா கல்லின் சித்திர எழுத்துகளைத் தீவிரமாக வாசித்தார். தூக்கத்தை மறந்தார்.
உணவை மறந்தார். கடின உழைப்பின் பலனாக, 1822ஆம் ஆண்டு ரோசெட்டா கல்லின் மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகம் அவரைக் கொண்டாடியது. இந்த ரோசெட்டா கல் 1799ஆம் ஆண்டு நெப்போலியனின் எகிப்துப் படையெடுப்பின்போது கண்டறியப்பட்டது.
1826ஆம் ஆண்டில் ஜானின் மேதமைக்காக இத்தாலியின் லூவார் அருங்காட்சியகத்தில் எகிப்து சின்னங்களின் காப்பாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். 1830இல் எகிப்து புராதனக் காப்பு மையத்தில் இவருக்கென்று ஓர் இருக்கை ஏற்பாடு செய்து, பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
1832ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, 42வது வயதில் மறைந்தார் ஜான். தன் வாழ்க்கை முழுவதையும் எகிப்தின் சித்திர எழுத்துகளுக்காகவே அர்ப்பணித்தவர். ஜான் இல்லை என்றால், எகிப்து குறித்த வரலாறு சித்திரங்களாகவே நின்றிருக்கும்!
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com
