கதை: இறக்கை முளைக்குமா?

கதை: இறக்கை முளைக்குமா?
Updated on
2 min read

விடுமுறை நாள்களில் எல்லாம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் சிறிய தோட்டத்தில்தான் இலக்கியாவும் ரகுவும் இருப்பார்கள். பேசுவார்கள், விளையாடுவார்கள், சில நேரம் செடிகளுக்குத் தண்ணீர்கூட ஊற்றுவார்கள். அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டால்தான் இருவரும் வீட்டுக்குள்ளேயே வருவார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் தேர்வு வரப்போகிறது என்பதால் அம்மா, இலக்கியாவையும் ரகுவையும் தோட்டத்துக்குள் விடவில்லை. இருவரும் வேகமாகப் படித்து முடித்தார்கள். அம்மா கொடுத்த ஆப்பத்தைச் சாப்பிட்டு முடித்த அடுத்த நொடி தோட்டத்தில் இருந்தார்கள்.

வழக்கமாக விளையாடும் விளையாட்டுகளை வரிசையாக விளையாட ஆரம்பித்தார்கள். அவர்களின் உற்சாகம் அங்கே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த தட்டானைத் தட்டி எழுப்பியது. எரிச்சலுடன் கண்விழித்த தட்டானுக்கு இலக்கியாவும் ரகுவும் உற்சாகமாக விளையாடுவதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னை மறந்து அவர்கள் இருவரையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டது.

“அங்க பாரு அக்கா... தட்டான்... வா, அதைப் பிடிச்சுக் கட்டிப்போட்டு விளையாடலாம்...” என்று சொன்னான் ரகு.

மகிழ்ச்சியாக இருந்த தட்டான், சட்டென்று வருத்தமடைந்தது.

“அது என்ன பந்தாடா, விளையாடுறதுக்கு? யார் உனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தர்றாங்க?”

‘நல்ல வேளை, இந்தப் பொண்ணாவது நல்லபடியா யோசிக்கிறாளே’ என்று நிம்மதி யடைந்தது தட்டான்.

“என் பிரெண்ட் சொன்னான், தட்டானை நூலில் கட்டி விளையாடினால் ரொம்ப நல்லா இருக்கும்னு. ஒருதடவை விளையாடிட்டு அதைப் பத்திரமா பறக்க விட்டுடலாம். நீ நூல் எடுத்துட்டு வா. நான் இது பறந்து போகாமல் பார்த்துக்கறேன்” என்றான் ரகு.

இலக்கியா நூல் எடுக்க வீட்டுக்குள் ஓடினாள்.

‘அவ மேல நம்பிக்கை வச்சேன்... இப்படிக் கவுத்து விட்டுட்டாளே’ என்று நினைத்தது தட்டான்.

இலக்கியா நூலுடன் வந்து சேர்ந்தாள். இருவரும் அமைதியாக, தட்டானை நெருங்கினார்கள். தட்டான் சட்டென்று பறந்து ரோஜா செடியில் அமர்ந்தது. மீண்டும் அக்காவும் தம்பியும் தட்டானைப் பிடிப்பதற்காகச் சென்றனர். மீண்டும் பறந்து மல்லிகை செடியில் அமர்ந்தது.

“என்னடா ரகு, ஒரு சின்ன தட்டானை நம்மால பிடிக்க முடியலையே” என்று இலக்கியா வருத்தப் பட்டாள்.

“நாம என்ன தினமும் பூச்சியைப் பிடிச்சிருக்கோமா? முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நானா, தட்டானான்னு பார்த்துடலாம்” என்றான் ரகு.

இப்படி ரகு சொன்னதைக் கேட்டால் கோபம்தானே வர வேண்டும்? ஆனால், தட்டானுக்குச் சிரிப்பு வந்தது.

ஆரம்பத்தில் இருந்த நிதானம் இப்போது ரகுவிடமோ இலக்கியாவிடமோ இல்லை. வேகமாகச் செயலில் இறங்கி, தட்டானை கோட்டைவிட்டார்கள்.

“ஏய் தட்டானே, ஒழுங்கா என் கைல வந்து உட்கார்ந்தால், கொஞ்ச நேரத்துல உன்னை விட்டுடுவேன். இல்லைன்னா ஒரு பெட்டியில் அடைச்சு வச்சிடுவேன்.”

செம்பருத்தி, முல்லை, அந்திமந்தாரை, சாமந்தி, அரளி என அந்தத் தோட்டத்தில் இருந்த அத்தனை செடிகளிலும் அமர்வதும் பறப்பதுமாகவும் வேடிக்கை காட்டியது தட்டான்.

“டேய் ரகு, இது லொள்ளு பிடிச்ச தட்டானா இருக்கும்போல...” என்று இலக்கியா சொல்லவும் அக்காவைத் திரும்பிப் பார்த்தான் ரகு.

“ஆமாடா, இந்தத் தட்டான் ரொம்பவே அலையவிடுது. நமக்கு இந்தத் தட்டான் கிடைக்காதுடா. ரொம்ப களைப்பா இருக்கு. வா, அம்மா கிட்ட மாதுளை ஜூஸ் வாங்கிக் குடிப்போம்.”

“நீங்க ரெண்டு பேரும் என்னைப் பிடிக்க ஏன் நினைக்கறீங்க?”

“ஆ... ஐயோ... பேய் போல... வாடா ஓடலாம்” என்று பயந்து ஓடினாள் இலக்கியா.

“நில்லுங்க ரெண்டு பேரும். பேயும் இல்ல, பிசாசும் இல்ல. தட்டான்...”

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம் தைரியம் வந்தது.

“உனக்கு றெக்கை இருக்கு. அதனால நூலில் கட்டி விளையாட ஆசைப்படறோம்” என்றான் ரகு.

“உனக்கு இருக்கற மாதிரி றெக்கை எங்களுக்கு இருந்தால், நாங்க ஏன் உன்னைப் பிடிக்கப் போறோம்?” என்றாள் இலக்கியா.

“உங்களுக்கு றெக்கை வேணுமா?”

“ஆமா... ஆமா...” என்று ரகுவும் இலக்கியாவும் ஒன்றாகச் சொன்னார்கள்.

“றெக்கை வேணும்னா என்ன செய்யணும் தெரியுமா?”

“என்ன செய்யணும்?”

“படிக்கணும்... நல்லா படிச்சு ஒவ்வொரு வகுப்பா முன்னேறிப் போகப் போக, கொஞ்சம் கொஞ்சமா றெக்கை முளைக்க ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் நீங்க என்னை மாதிரி நினைச்ச இடத்துக்கு, நினைச்ச உயரத்துல பறக்க முடியும்!”

“ஆ... அப்படியா! நல்லா படிச்சா எங்களுக்கும் றெக்கை முளைக்குமா!” என்ற இலக்கியா, கனவு காண ஆரம்பித்தாள்.

“கண்டிப்பா றெக்கை முளைக்கும். றெக்கை முளைச்சதுக்கு அப்புறம் நீங்க என்னை ஆச்சரியமா பார்க்குற மாதிரி எல்லாரும் உங்களை ஆச்சரியமா பார்ப்பாங்க! நீங்க என்னைப் பிடிச்சி கஷ்டப்படுத்தணும்னு நினைச்சப்ப நான் எப்படி உங்ககிட்ட இருந்து தப்பி ஓடி என்னைக் காப்பாத்திக்கிட்டேனோ... அந்த மாதிரி நீங்களும் உங்களைப் பாதுகாத்துக்கலாம். உங்களை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது” என்றது தட்டான்.

“நிஜமாதான் சொல்றியா?” என்று இலக்கியாவும் ரகுவும் கேட்டார்கள்.

“நான் சொன்னதை உங்க அம்மா, அப்பா, ஆசிரியர் யார்கிட்டேயாவது கேட்டுப் பாருங்க. அவங்களும் இதைத்தான் சொல்வாங்க” என்று சிரித்தது தட்டான்.

“ஆஹா! சூப்பரா சொன்னே... நிச்சயம் நாங்க படிச்சுப் பெரிய ஆளா வருவோம்.”

“இப்ப சொல்லுங்க, என்னை நீங்க பிடிக்கணுமா?”

“வேணாம், வேணாம்... உனக்கு ரொம்ப நன்றி. நாங்க படிக்கப் போறோம். நீ தாராளமா, பயமில்லாம ஓய்வெடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் இலக்கியா. ரகுவும் தட்டானைப் பார்த்து, கைகளை அசைத்துவிட்டு ஓடினான்.

- யுவராஜ் மாரிமுத்து

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in