

‘இனி வரும் காலத்தில் விநோதமான குழந்தைகள் என்று அவர்களை விலக்குவதற்குப் பதிலாக, அவர்களிடம் இயற்கையாக உருவான திறமைகளைக் கொண்டாடும்படியான உலகம் அமைய வேண்டும்’ என்று வில்லியம் ஜேம்ஸ் சிடிஸின் (William James Sidis) வரலாற்றை எழுதிய ஏமி வாலஸ் குறிப்பிடுகிறார்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட புத்திசாலிக் குழந்தை ஜேம்ஸ். 1898ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போரிஸ் - சாரா இணையருக்குப் பிறந்தான். தந்தை, மனநல மருத்துவர். தாய், மருத்துவப் பணியாளர். பெற்றோர் தங்கள் மகன் ஜேம்ஸை எப்படியாவது புகழின் உச்சிக்குக் கொண்டு செல்ல விரும்பினார்கள்.
ஒன்றரை வயதில் ஜேம்ஸ் ’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையை மேலும் கீழும் புரட்டி வாசிக்க ஆரம்பித்துவிட்டான். எட்டு வயதில் லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்பட எட்டு மொழிகளைத் தங்குதடையின்றி பேசினான். அதோடு நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டான். ‘வெண்டர்குட்’ (Vendergood) என்கிற புது மொழியையும் உருவாக்கிவிட்டான். உள்ளூர் பத்திரிகை முதல் தேசிய ஊடகங்கள்வரை அவனை நோக்கிப் படையெடுத்துவிட்டன.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ‘நான்காவது பரிமாணம்’ பற்றிய ஒரு கருத்தரங்கை ஒன்பது வயதில் தலைமை வகித்து நடத்தினான் ஜேம்ஸ். அப்போதே ஹார்வர்டில் படிக்க ஜேம்ஸின் தந்தை அவன் பெயரில் விண்ணப்பித்தார். வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
11 வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டான் ஜேம்ஸ். 16வது வயதில் பட்டம்பெற்று, ரைஸ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்த பேராசிரியர்களும் மாணவர்களும் தங்களைவிட வயதில் குறைந்த ஒருவரிடம் அன்புடன் நடந்துகொள்ளவில்லை. நிர்வாகத்தின் அழுத்தத்தால் அந்த வேலையைவிட்டு வெளியேறியதாகப் பின்னர் ஒரு பேட்டியில் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
உடனே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க விண்ணப்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக சமதர்ம (சோசலிசம்) கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். முதல் உலகப் போருக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய பேரணி ஒன்றில் கலந்துகொண்ட ஜேம்ஸ், அதற்காக 18 மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். இவை எல்லாம் ஜேம்ஸின் 20 வயதுக்குள் நடந்துவிட்டன.
சிறு வயது முதல் ஜேம்ஸ் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் பத்திரிகையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். இதனால், குழந்தைக்கான, இளைஞருக்கான இயல்பான, மகிழ்ச்சியான மனப்பான்மையைத் தொலைத்திருந்தார் ஜேம்ஸ்.
ஒருகட்டத்தில் மன அழுத்தத்துக்கு ஆளான ஜேம்ஸ், தன் மேதமையை ஒதுக்கிவைத்துவிட்டு, “நான் தனிமையில் வாழ ஆசைப்படுகிறேன். என்னைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார். இதனால் ஜேம்ஸின் பெற்றோருடைய வளர்ப்புமுறை குறித்துப் பத்திரிகைகள் விமர்சனம் செய்தன.
தனிமையில் இருந்தாலும் தன் அறிவை வீணாக்காமல் புத்தகங்களை எழுத ஆரம்பித்தார் ஜேம்ஸ். தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பல புனைபெயர்களைச் சூட்டிக்கொண்டார். கருந்துளைகள் பற்றி விஞ்ஞானி சந்திரசேகரின் ஆய்வு முடிவுகள் வெளிவருவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே, 1925ஆம் ஆண்டில் ‘அண்டவியல்’ பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் ஜேம்ஸ். அதே ஆண்டில் அவர் கையெழுத்திட்ட ‘தி அனிமேட் அண்ட் தி இன்-அனிமேட்’ என்கிற புத்தகம் சமீபத்தில் ஆறரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஜேம்ஸுக்கு இணையான அறிவாளி யாருமில்லை என்று சொல்கிறார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டைனைக் காட்டிலும் அதிக நுண்ணறிவு (ஐக்யூ) இருந்ததாக அவருடைய சகோதரி பதிவு செய்திருக்கிறார். 25 மொழிகளில் ஜேம்ஸ் நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
46 வயதுக்குள் பல்வேறு விதத்தில் தன்னுடைய அறிவை வெளிப்படுத்திய ஜேம்ஸ் சிடிஸ், கொண்டாடப்பட்டதைப் போலவே விமர்சிக்கவும்பட்டு உலக வாழ்க்கையிலிருந்து மறைந்து போனார். மிகச் சிறந்த கணிதவியலாளர், மொழியியலறிஞர் என்று இப்போது வில்லியம் ஜேம்ஸ் சிடிஸை நினைவுகூர்கிறது உலகம்.
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com