Published : 27 Sep 2017 11:01 AM
Last Updated : 27 Sep 2017 11:01 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவது ஏன்?

பாம்பாட்டியின் மகுடி இசைக்கு ஏற்ப பாம்பு படம் எடுத்து ஆடுவது எப்படி டிங்கு?

– எஸ். சிவன் முத்து சுப்பிரமணியன், 7-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி.

பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் கிடையாது. அதனால் இசையைக் கேட்க இயலாது. பாம்பாட்டியின் மகுடி அசைவையும் அடிக்கடி மகுடியைத் தரையில் தட்டும்போது ஏற்படும் அதிர்வையும் உணரும் பாம்பு, பயத்திலும் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உடலை அசைக்கும். இது மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுவதுபோல் தோன்றும். பெரும்பாலும் பாம்பாட்டிகள் பயன்படுத்தும் பாம்புகளின் நச்சுப் பற்கள் அகற்றப்பட்டிருக்கும். அதனால் பாம்பாட்டி தைரியமாகப் பாம்பு முன்பு அமர்ந்து மகுடியை இசைத்துக்கொண்டிருப்பார், புரிந்ததா... சிவன் முத்து.

உனக்குத் தெரிந்த விளையாட்டுகள் என்னென்ன? உனக்குப் பிடித்த விளையாட்டு எது டிங்கு?

– எஸ். ராஜகணேஷ், தலைஞாயிறு.

தனியாக விளையாடும் விளையாட்டுகளைவிட குழு விளையாட்டுகள்தான் எனக்குப் பிடிக்கும். நான் வளர வளர, நான் விளையாடும் விளையாட்டுகளும் மாறிக்கொண்டிருந்தன. பூப்பறிக்க வருகிறோம், திருடன் போலீஸ், மரம் ஏறி கொம்பு ஏறி, கோகோ, நாலு மூலை சக்கரம், பாண்டி, பல்லாங்குழி, தாயம், த்ரோ பால், கிரிக்கெட் என்று ஏராளமான விளையாட்டுகளை விளையாடியிருக்கிறேன். நாள் முழுக்க விளையாடும் கிரிக்கெட்டை விட சில மணி நேரங்களில் முடிந்துவிடும் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் இப்போது அதிகம் பிடிக்கிறது ராஜகணேஷ்.

கடல் நீர் உப்புக் கரிக்கிறது. ஆனால் அதில் வசிக்கும் மீன் உப்புக் கரிப்பதில்லையே ஏன் டிங்கு?

– வி. ராஜசியாமளா, காரைக்கால்.

நல்ல கேள்வி ராஜசியாமளா. எந்த உயிரினமும் தான் எந்த மாதிரி சுற்றுச் சூழலில் வாழ்ந்தாலும் தன் உடலைச் சீராக வைத்துக்கொள்ளும் தகவமைப்பை இயற்கையாகவே பெற்றுள்ளன. மீன்கள் உப்பு அதிகம் உள்ள கடலில் வாழ்ந்தாலும், உடலிலுள்ள செவுள்கள் மீன்களை உப்பிலிருந்து காப்பாற்றிவிடுகின்றன. செவுள்களில் இருக்கும் செல்கள், மீன்கள் உட்கொள்ளும் நீரில் உள்ள உப்பை அடர்கரைசலாக மாற்றி, கழிவோடு சேர்த்து வெளியேற்றிவிடுகின்றன. இதனால் உப்பு நீரில் வசித்தாலும் மீன்கள் உப்புக் கரிப்பதில்லை.

கங்காருவைப்போல் வயிற்றில் பையுடைய விலங்குகள் வேறு உண்டா டிங்கு?

– எஃப். ப்ரான்க் ஜோயல்,

4-ம் வகுப்பு, ஜெயின் வித்யாலயா, மதுரை.

குட்டி முதிர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்து, தாயின் வயிற்றில் உள்ள பையில் மீதி வளர்ச்சி அடைய வைக்கும் விலங்குகளை மார்சுபியல் என்று அழைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் மார்சுபியல் உயிரினங்கள் வசிக்கின்றன. இவற்றில் சுமார் 250 வகைகள் இருக்கின்றன. கங்காருவின் குட்டி பிறக்கும்போது 3 செ.மீ. நீளமே இருக்கும். இதனால் தாய் கங்காரு தன் வயிற்றில் உள்ள பையில் வைத்து, பாலூட்டி வளர்க்கும். 8 முதல் 11 மாதங்கள் வரை குட்டி பையில் வசிக்கும். வல்லபி, கோலா, ஒப்போசம், வாம்பட், போசம், டாஸ்மேனியன் டெவில் போன்ற விலங்குகள் வயிற்றில் பையுள்ள விலங்குகளில் சில, பரான்க் ஜோயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x