குழந்தை மேதைகள் 12: நோயை வென்ற வயலின் கலைஞன்

குழந்தை மேதைகள் 12: நோயை வென்ற வயலின் கலைஞன்
Updated on
2 min read

நோயை வென்ற வயலின் கலைஞன் ‘ஒவ்வொரு வீட்டிலும் வெளிச்சம் இருக்கிறது. அந்த வெளிச்சத்தை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை அந்த வெளிச்சம் அணைந்துபோய் இருள் சூழ்ந்தால், வீட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் கொள்ளை போய்விடும்’ என்று சீசரின் தந்தை லூகாஸ் சான்டோஸ் ஒரு பேட்டியில் கண்ணீர்விட்டுக் கரைந்திருந்தார். அந்த வீட்டின் வெளிச்சத்திற்கு என்ன ஆனது?

அமெரிக்காவின் பிராவிடன்ஸ் பகுதியில் வசித்துவந்த லூகாஸ் - அலெய்ன் தம்பதிக்கு 2008ஆம் ஆண்டில் அழகிய குழந்தையாக சீசர் சான்ட் (Caesar Sant) பிறந்தான். இயல்பிலேயே எதையும் வேகமாகக் கற்றுக்கொள்ளக்கூடியவனாக சீசர் திகழ்ந்தான். அதனால் மகன் விரும்பிய அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் நினைத்தனர்.

இரண்டு வயதுக்குள் வயலின் இசை மீது ஆர்வம் கொண்டான் சீசர். அதனால் அவனை வயலின் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். சின்னஞ்சிறு கைகளால், சிறிய வயலினைப் பிடித்துக்கொண்டு சீசர் வாசிக்கும்போது அற்புதமாக இருக்கும்! வயலின் கற்றுக்கொண்டதோடு பாடவும் ஆரம்பித்தான். அடுத்து ஜப்பானிய கணிதம், கிரேக்கம், கராத்தே என வரிசையாகப் பலவற்றையும் தேடிச் சென்று, கற்றுக்கொண்டே இருந்தான்.

புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆன்டோனியோ விவால்டியின் ’ஈ மைனர்’ பாடலை நான்கு வயதிலேயே இசைத்துக் காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான் சீசர். இன்னும் முறையாகப் பள்ளி செல்லாத சீசருக்கு, இசைக் கச்சேரிகளில் பங்கேற்கச் சொல்லி வாய்ப்புகள் குவிந்தன. அதே நேரத்தில் கராத்தேவிலும் பிளாக் பெல்ட் வாங்கிவிட்டான்!

இனிய கீதமாகச் சென்றுகொண்டிருந்த சீசரின் வாழ்க்கை, திடீரென்று சோக கீதமாக மாறியது. பிறவியிலேயே சீசருக்கு மரபணு குறைபாட்டால் வரும் அரிவாள் உயிரணு சோகை (Sickle Cell Disease) எனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ரத்தச் சிவப்பணுக்கள் வளைந்து, ரத்த நாளங்களை அடைத்துக்கொள்ளும். மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் வலியைத் தாங்கவே இயலாது. பக்கவாதமும் ஏற்படும்.

நான்கு வயதில் முதல் பக்கவாதம் சீசரைத் தாக்கியது. அடுத்த ஆறு மாதங்களில் மற்றொரு தாக்குதல். அதற்கடுத்த ஆறாவது மாதத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் என்று படுத்த படுக்கையானான் சீசர். லூகாஸ் வேலையை உதறிவிட்டு, தன் மகனைப் பார்த்துக்கொள்வதையே முழு நேர வேலையாகச் செய்தார்.

சில மாதங்களுக்கு முன்பு வசீகரமாக நின்று கைகளை முன்பின் அசைத்து வயலின் வாசித்த சீசர், இப்போது அசைவின்றி, படுத்த படுக்கையாகக் கிடந்தான். தொடர்ந்து ஏழு நாள்கள் துளியும் அசைவின்றி கண்களை மட்டும் உருட்டிப் பார்த்தான். அவனுக்குப் பிடித்த வயலினை இசைத்துக் காட்டியபோது மட்டும் சீசரின் கண்கள் கலங்கின.

இப்படி இரண்டு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு ஓரளவு உடல்நலம் பெற்றான் சீசர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வயலின் வகுப்பிற்குச் சென்றான். முன்புபோல் அவனால் வாசிக்க முடியவில்லை. குறிப்புகளைத் தவறவிட்டான். கால் தரையில் நிற்கவில்லை. தன்னால் இசைக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில் கண்ணீர்விட்டான் சீசர். பெற்றோர் அவனுக்கு நம்பிக்கை அளித்தார்கள்.

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, சீசரின் குறைபாட்டைச் சரிசெய்ய பெற்றோர் நினைத்தனர். அதற்காக சீசரின் அம்மா ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.

சீசர் குடும்பத்தினரின் 7 ஆண்டு போராட்டம், 2021இல் முடிவுக்கு வந்தது. சீசருக்கு வெற்றிகரமாக ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது பதினைந்து வயதாகும் சீசர், ஒரு குழந்தை மேதையாக இசைக் கச்சேரிகளில் வயலின் வாசித்து, அனைவரின் இதயங்களையும் கொள்ளைகொண்டு வருகிறார். சீசரின் இசையை மட்டுமா ரசிக்கிறார்கள்? சீசர் நோயிலிருந்து நம்பிக்கையோடு மீண்டு வந்ததையும் எந்தச் சூழ்நிலையிலும் புன்னகை மாறாமல் வலம் வந்ததையும் தங்களுக்கான பாடங்களாகப் பலரும் எடுத்துக்கொள்கிறார்கள்.

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா | iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in