குழந்தை மேதைகள் 11: காற்றாலையை அமைத்த சிறுவன்!

குழந்தை மேதைகள் 11: காற்றாலையை அமைத்த சிறுவன்!
Updated on
3 min read

உங்களால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்கிற கேள்விக்கு, “முயன்றேன். முடிந்துவிட்டது” என்று இரண்டே வார்த்தைகளில் பதில் அளித்த வில்லியம் கேம்க்வாம்பாவைச் (William Kamkwamba) சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.‌

ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டின் முதல் காற்றாலையைத் தன் 14 வயதில் உருவாக்கியவன்! குப்பையில் கிடைத்த பொருள்களை வைத்து காற்றாலையை உருவாக்கி, மின்சாரத்தைப் பார்க்காத தன் டோவா கிராமத்தை வெளிச்சத்தில் ஒளிரவிட்டான்.

1987இல் வில்லியம் கேம்க்வாம்பா பிறந்தான். தன் தந்தைக்குச் சொந்தமான மக்காச்சோள வயலை மண்வெட்டியால் கிளறிக்கொண்டே, தூரத்தில் செல்லும் லாரிகளை வேடிக்கை பார்ப்பான். ‘லாரியால் எப்படி நகர முடிகிறது? மக்காச்சோளத்துக்கும் சக்கரம் இருந்தால் நகர்ந்துவிடுமா?’ என்றெல்லாம் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டு, பதில்களைத் தேடுவான். பட்டினி கிடந்தாலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிற வைராக்கியம் வில்லியமின் பெற்றோருக்கு இருந்தது. அரசாங்கப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான் வில்லியம்.

தன் கேள்விகளுக்கு எல்லாம் பள்ளியில் பதில் கிடைக்கும் என்கிற ஆசையில் நுழைந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
2001ஆம் ஆண்டு வரலாறு காணாத பஞ்சத்தை மலாவி எதிர்கொண்டது. வில்லியமின் குடும்பம் முதல் இரண்டு மாதங்களிலேயே வறுமையில் வாடியது.

ஒரு நாளைக்கு ஒருவேளைதான் உணவு. கட்டணம் செலுத்த இயலாமல் வில்லியம் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டான். கிராம மக்களில் பலரும் பசியால் மடிந்தார்கள். வில்லியமும் அவன் சகோதரிகளும் உடல் மெலிந்து போனார்கள். அவனுடைய தந்தை தற்காலிகமாகப் பார்வையை இழந்தார்.

ஓர் ஆசிரியர் வைத்திருந்த சைக்கிள் முகப்பில் விளக்கு எப்படி ஒளிர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றான் வில்லியம். பள்ளி நூலகத்தில் ‘ஆற்றலைப் பயன்படுத்தும் விதம்’ என்கிற புத்தகத்தை எடுத்து, அகராதியின் துணையோடு படித்து, காந்தவியலைக் கற்றுக்கொண்டான். ரேடியோவும் விளக்கும் எப்படி வேலை செய்கின்றன என்கிற ரகசியம் புரிந்து போனது.

யாருமில்லாத பள்ளி நூலக அறையில் ஏராளமான விஷயங்களை, தாமாகப் படித்துக் கற்றுக்கொண்டான் வில்லியம். ‘காற்றாலைகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தண்ணீர் பாய்ச்ச முடியும்’ என்கிற ஒற்றை வரி வில்லியம்மின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. வறண்டு போன வயல் களில் தாகம் எடுத்த மக்காச்சோளப் பயிர்கள், காற்றாலை மின்சாரத்தால் தண்ணீர் குடிப்பதாகக் கனவு கண்டான்.

தன் நாடு கண்டிராத காற்றாலையின் செயல்பாடுகளை அறிந்துகொண்டான். குப்பைக் கிடங்கில் இருந்து பிவிசி குழாய், டிராக்டர் விசிறி, பாட்டில் மூடி, சைக்கிளின் உதிரி பாகங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். மூன்று நாள்கள் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் ஏதேதோ செய்வதும் பிரிப்பதுமாக இருந்தான்.

நண்பர்களின் உதவியுடன் யூகலிப்டஸ் மரக்கட்டைகளை வைத்து கோபுரத்தை உருவாக்கினான். அதன் உச்சியில் விசிறியைப் பொருத்தினான். சில மணி நேர முயற்சிக்குப் பிறகு, விசிறி மெதுவாகச் சுற்ற ஆரம்பித்தது! வில்லியம்மின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தால், வீட்டில் இருந்த மின்சார விளக்கு எரிந்தது.

“காற்றாலை மின்சாரத்தை உருவாக்கிவிட்டேன்” என்று மகிழ்ச்சியில் குதித்தான். கத்தினான். கிராம மக்களை அழைத்துவந்து காட்டினான். எல்லாருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி தங்கள் வீடுகளிலும் இரவில் வெளிச்சம் கிடைக்கப் போகிறது என்று வில்லியம்மைக் கொண்டாடினார்கள்.

இப்போது அவன் வீட்டிலிருக்கும் 4 விளக்குகளும் கிராமத்தில் இருந்த 2 ரேடியோக்களும் பிரமாதமாக இயங்கின. விளக்கு எரிவதைவிட மக்களின் வயிறு எரியாமல் இருப்பது முக்கியம் என்று நினைத்தான். மேலும், சில காற்றாலைகளை உருவாக்கினான். இப்படித்தான் மலாவியின் முதல் காற்றாலை, ஒரு சிறுவனால் உருவானது. காய்ந்து போன வயல்களுக்கு நீரும் கிடைத்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தான்சானியாவில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு வில்லியமுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு உலகம் வில்லியம்மை அடையாளம் கண்டுகொண்டது. சூரிய ஆற்றலில் இயங்கும் தண்ணீர்க் குழாய்களைக் கொடையாக வழங்கினார்கள்.

2008ஆம் ஆண்டு முதல் ‘மூவிங் வில்லியம்’ஸ் புராஜெக்ட்’ என்கிற திட்டத்தைச் சிலரோடு சேர்ந்து உருவாக்கி, கிணறு வெட்டுதல், சூரிய மின்சாரத்தால் தண்ணீர் எடுத்தல், கல்விக்கூடங்களில் மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்துவருகிறார் வில்லியம். இந்தத் திட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்திவருகிறார்.

The Boy Who Harnessed the Wind என்கிற பெயரில் வில்லியம் குறித்து பிரயன் மீலர் ஒரு புத்தகத்தை எழுதினார். பின்னர் இதே பெயரில் ஒரு திரைப்படமும் வெளியானது. இப்போது வில்லியம் கேம்க்வாம்பா பிரபலமான கண்டுபிடிப்பாளராக அறியப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ பற்றி ஆய்வு செய்துவருகிறார்.

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா; iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in