

நகரில் பலத்த காற்று வீசியது. ஊரெல்லாம் போர்வை போர்த்தியது போலப் புழுதி படர்ந்தது. நிலத்தில் இருந்த மண், தூசிக் கலவை அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
சற்று நேரத்தில் புழுதிப் படலம் சுழற்காற்றாக மாறியது. வித்தியாசமான சுழற்காற்று. நகரின் பல இடங்களில் உருவான சின்னச்சின்ன சுழல்கள் மெல்ல நகர்ந்து ஓரிடத்தில் குவிந்தன.
திடீரென்று உருவான சுழற்காற்றைப் பார்த்த நடைப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுழலில் சிக்கினால் சுழற்றி அடித்து வீசிவிடும் என்கிற பீதியில் மக்கள் இருந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், தூரத்திலிருந்து கவனித்தார்கள்.
“இந்த மாதிரி புழுதிக்காற்று பாலை வனங்கள்ல வீசுமென்று படித்திருக்கிறேன்” என்று நடுங்கிய குரலில் சொன்னான் ஒரு சிறுவன்.
“அது, நம்ம பக்கம் நகர்ந்து வர்றதைப் பாருங்க. இதைத்தான் பேய்க்காற்றென்று சொல்கிறார்களோ?” என்றான் அருகில் இருந்தவன்.
எதிர்ப் பக்கம் நின்றிருந்த கீர்த்தி, சுழற்காற்றைப் பார்த்துப் பயந்தாள். அவளுக்குப் பின்னால் யாரையும் காணவில்லை. வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. பார்வை எட்டும் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து இருந்தன.
சுழற்காற்று அவளை நெருங்கியது. திடுக்கிட்டவள், “நான் சின்னப்பொண்ணு. என்னை விட்டுவிடு. நான் பாவம் இல்லையா?” என்று கத்தினாள்.
“பயப்படாதே, தைரியமாக இரு” என்ற குரல் கேட்டு, சட்டென்று திரும்பினாள். அருகில் யாரு மில்லை. சுழற்காற்று பேசுமா?
சாலை நடுவில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலரைப் பார்த்தாள். பாய்ந்தோடி அவருக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். அழுகை வந்தது. காவலர் தேற்றினார்.
சற்றுத் தூரத்தில் ஒரு பழங்காலக் கட்டிடம் இருந்தது. ‘நீதிமன்றம்’ என்றிருந்த பெயர்ப் பலகையைப் பார்த்தாள். சுழற்காற்று நீதிமன்ற வாசலை நோக்கிச் சென்றது. கீர்த்திக்கு எதுவும் புரியவில்லை. சுழற்காற்று ஏன் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்? சுழற் காற்றைப் பின்தொடர்ந்தாள்.
கறுப்பு மேலங்கி அணிந்திருந்த வழக்கறிஞர்கள் கூடியிருந்தார்கள். நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த சுழற்காற்று மெல்ல தனது சுழற்சியை நிறுத்திக்கொண்டது. புழுதியில் கரைந்து இருந்த பொருள்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சிறுவனாக மாறின. சிறுவன் நீதிமன்றத்துக்கு உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து கீர்த்தியும் சென்றாள்.
உள்ளே ஒரு வழக்கறிஞர் எழுந்து நின்று, “நீதிபதி அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்ட இந்தப் பொதுநல வழக்கில், இந்தச் சிறுவனை சாட்சியாக விசாரிக்கலாம்” என்றார். நீதிபதி அனுமதி அளித்தார். சிறுவன் சாட்சி சொல்ல கூண்டில் ஏறினான்.
“வணக்கத்துக்குரிய நீதிபதி அவர்களே, இந்தப் பெருநகரில் பால், பால் பொருள்கள், எண்ணெய், உணவுப் பொருள்கள் போன்றவை ஞெகிழிப் பைகளில் விநியோகம் செய்யப் படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள், ஞெகிழிப் பைகளின் மூலையில் சிறிதாகக் கத்தரித்துப் பயன் படுத்துகிறார்கள். அப்போது கைவிடப்படும் நுண்ஞெகிழிகளைக் குப்பைகளில் சேர்க்க மறந்துவிடுகிறார்கள்” என்றான்.
இடைமறித்த நீதிபதி, “அப்படிச் சேகரமாகும் நுண்ஞெகிழிக் கழிவுகளின் அளவு எவ்வளவு தெரியுமா?” என்று கேட்டார்.
“ஒவ்வொரு நாளும் சுமார் 60 லட்சம் நுண்ஞெகிழி கழிவுத்துண்டுகள் உற்பத்தியா கின்றன. எல்லாவற்றிலும் கலக்கின்றன. அவற்றைச் சாப்பிடும் விலங்குகளும் கடல்வாழ் உயிரினங்களும் ஆபத்துக்கு உள்ளாகின்றன. சில நேரம் நமது உணவிலும் அவை கலக்கின்றன. உயிருக்கே ஆபத்தாகி விடுகின்றன” என்றார் வழக்கறிஞர்.
“அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்” என்று உத்தரவிட்ட நீதிபதியின் பார்வைக்குக் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சாட்சியாகக் கூண்டில் நின்று கொண்டிருந்த சிறுவன், “பெருநகரில், இன்று ஒருநாள் மட்டும் கைவிடப்பட்ட நுண்நெகிழிகள் சேர்ந்து உருவான சிறுவன் நான்” என்று சொல்லி, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். அனைவரும் வாயடைத்து நின்றார்கள்.
“நீங்கள் அனுமதித்தால் நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன்” என்றான் சிறுவன்.
நீதிபதி தலையசைத்தார்.
“ஞெகிழிப்பைகள் தயாரிப்பில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பையிலும் எளிய பொத்தான்கள் பொருத்தலாம். இரண்டாவதாக, மக்கும் ஞெகிழிப்பை தயாரிப்பைக் கட்டாயப் படுத்தலாம். இதனால் நுண்ஞெகிழிகள் உற்பத்தி செய்யப்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.”
வாதத்தைக் கேட்ட நீதிபதி, கோப்புகளைச் சரிபார்த்தார். பிறகு தனது தீர்ப்பை வாசித்தார்:
“அரசு இதை உடனடியாகக் கவனத்தில்கொள்ள வேண்டும். மக்கும் ஞெகிழி உற்பத்தியையும், பொத்தான் வைத்த பைகள் தயாரிப்பையும் உறுதி செய்ய வேண்டும். விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.”
கூடியிருந்தவர்கள் தீர்ப்பை வரவேற்றார்கள்.
அங்கிருந்து விடைபெற்ற ஞெகிழிச் சிறுவன் குப்பைக் கிடங்கு நோக்கி நடந்து சென்றான். நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தாள் கீர்த்தி.