குழந்தை மேதைகள் 10: உலகின் முதல் கணினி நிரலாளர்!

குழந்தை மேதைகள் 10: உலகின் முதல் கணினி நிரலாளர்!
Updated on
3 min read

‘ஒரு குடும்பத்தில் ஒரு புத்திசாலி யாவது இருக்க வேண்டும். ஏடாவை அறிவியல் புலத்தில் செயல்பட கடவுள் அனுமதிப்பார் என்று நம்புகிறேன்’ என 1822ஆம் ஆண்டு தன் மனைவி அனபெல்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் உலகப் புகழ்பெற்ற கவிஞர் லார்டு பைரன்.

அவர் எண்ணப்படியே பைரனின் மகள் ஏடா லவ்லேஸ் (Ada Lovelace) அறிவியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, உலகின் முதல் கணினி நிரலாளராக (கம்ப்யூட்டர் புரோகிராமர்) உருவெடுத்தார். ஆனால், அந்தப் பயணம் அவருக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை.

1815, டிசம்பர் 10 அன்று ஏடா பிறந்தாள். கவிதை, இலக்கியம் என்று சுற்றிக்கொண்டிருந்த பைரன் மீது அனபெல்லாவுக்கு நிறைய வருத்தம். ஒருவேளை தன் கணவர் போலவே மகளும் கவிதை, இசை எனச் சென்றுவிடுவாளோ என்று பயந்தார்.

அதனால் ஏடா பிறந்த சில வாரங்களில் பைரனைப் பிரிந்து, தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அனபெல்லாவுக்குக் கணிதத்தில் ஆர்வம் அதிகம். தனக்குத் தெரிந்த ஆசிரியர்களை வரவழைத்து, அவர்களோடு தானும் சேர்ந்து அறிவியல், கணிதப் பாடங்களை ஏடாவுக்குப் போதித்தார்.

சமர்த்தாகப் பாடம் கேட்டால் கதைப் புத்தகங்களைப் பரிசளிப்பார். குறும்பு செய்தால் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார். இப்படியாக ஏடாவின் குழந்தைப் பருவம் படிப்பும் கண்டிப்புமாக நகர்ந்தது. அனபெல்லாவின் நடவடிக்கைகள் பிடிக்காததால்தான் மேற்கண்ட கடிதத்தை பைரன் எழுதியிருந்தார். தனது தந்தை உலகறிந்த கவிஞர் என்பதை ஏடா தெரிந்துகொள்ளும் முன்னரே, பைரன் இறந்துபோனார்.

ஏடாவுக்குக் கணிதம் மீது ஆர்வம் கொஞ்சம் குறைவாக இருந்தது. வானவில் ஏன் தோன்றுகிறது, எப்படி அதற்குள் அத்தனை வண்ணங்கள், பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்றெல்லாம் ஆசிரியர் வில்லியம் ஃபிரென்ட்டிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார்! ஏடாவின் ஆர்வத்தைக் கண்ட வில்லியமும் பொறுமை யாகப் பதில் அளிப்பார்.

ஏடாவுக்குப் பத்து வயதானபோது, ஐரோப்பியச் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார் அனபெல்லா. 15 மாதங்கள் நீடித்த அந்த நெடிய பயணத்துக்குப் பிறகு, பறவையைப் போல் தானும் பறக்க ஆசைப்பட்டார் ஏடா. சிறகு பொருத்தப்பட்ட குதிரை பொம்மை ஒன்று, நீராவி இயந்திரத்தால் செயல்படும்படி கற்பனை செய்தார். இதைப் ‘பறத்தலியல்’ என்கிற புத்தகமாக எழுத ஆரம்பித்தார்.

ஆனால், தனக்குச் சிறகு முளைப்பது பற்றியும் தான் வானில் பறப்பது பற்றியும் ஏடா எழுதியதைக் கண்டு, தந்தை பைரனின் கற்பனை குணம் மகளுக்கும் வந்துவிட்டதாக அஞ்சினார் அனபெல்லா. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி கூறினார்.

13 வயதில் போலியோ ஏடாவைக் கடுமை யாகத் தாக்கியது. தொடர்ந்து மூன்றாண்டுகள் படுக்கையில் இருந்தார். இந்தக் காலகட்டம் ஏடாவின் வாழ்க்கையைத் திசைதிருப்பிவிட்டது. கணிதம் இப்போது பிடித்த பாடமாக மாறியது. மிகக் கடினமான கணித நூல்களையும் படித்து முடித்தார்.

1833ஆம் ஆண்டு சார்ல்ஸ் பாபேஜ் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஏடாவும் கலந்து கொண்டார். அங்கே சார்லஸ் டிக்கன்ஸ், மைக்கேல் ஃபாரடே, அகஸ்டஸ் டி மோர்கன், சார்ல்ஸ் டார்வின் போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் இருந்தார்கள். பாபேஜின் பகுப்பாய்வு இயந்திரத்தைக் கண்டு ஏடா அசந்துபோனார்.

அந்தக் கருவி குறித்து லூயிஜீ மெனாபிரயா எழுதிய பிரெஞ்சுக் குறிப்பை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்ததோடு, பாபேஜின் பரிந்துரை யால் தன் குறிப்பையும் சேர்த்து எழுதினார் ஏடா. அதில் பெர்னோலி எண்கள் குறித்து அவர் எழுதிய தனிக்குறிப்பு மட்டுமே பின்னாளில் கணினியின் நிரல் நெறிமுறையாக (அல்காரிதம்) உருவெடுத்தது. ஆனால், பாபேஜின் கணினி அவர் வாழ்நாளில் முழுமை பெறாததால், ஏடாவின் நிரலைச் சோதிக்க இயலாமல் போனது. இப்படியாகத் தனது 18 வயதில் உலகின் முதல் நிரலாளராக ஏடா உருவெடுத்தார்!

அன்றைய இங்கிலாந்தில் பெண்கள் நேரடியாகக் கல்லூரிக்குச் செல்ல முடியா விட்டாலும் பல ஆசிரியர்களிடம் பாடம் கற்றுக்கொண்டார் ஏடா. கணினி கணிதத்திற்கு மட்டுமல்ல, அறிவியலிலும் இசையிலும் பல செயல்களுக்கு அச்சாணியாக இருக்கப் போகிறது என்றார்.

கணித ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஏடா, 36 வயதில் புற்றுநோயால் இறந்துபோனார்.

அமெரிக்க ராணுவம் உருவாக்கிய கணினி நிரல் ஒன்றுக்கு ஏடா லவ்லேஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏடா மொழிபெயர்த்த பாபேஜின் பகுப்பாய்வு இயந்திரம் குறித்த புத்தகத்தின் நகல் ஒன்று, 2018ஆம் ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

கவிஞரின் மகளாகத் தோன்றி, கணினி மொழியின் தாயாக மறைந்த ஏடா லவ்லேஸின் நினைவைப் போற்றும்விதமாக, அக்டோபர் 2ஆவது செவ்வாய்க்கிழமை ‘ஏடா லவ்லேஸ் தின’மாக அனுசரிக்கப்படுகிறது.

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா; iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in