குழந்தை மேதைகள் 09: ஜீனியஸ் யோஜீனி!

குழந்தை மேதைகள் 09: ஜீனியஸ் யோஜீனி!
Updated on
2 min read

“குழந்தை மேதையாக வாழ்வது வரம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், சராசரியாக வாழ்வதைக் காட்டிலும் மேதையாக வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நீங்கள்தான் சாதித்தீர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டும்” என்று வருத்தப்படும் யோஜீனி டி சில்வாவுக்கு 24 வயதுதான் ஆகிறது. இதற்குள் பல உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தி இருக்கிறார்.

குழந்தை யோஜீனி நடக்கக்கூட ஆரம்பிக்க வில்லை. அவிழ்ந்த காலணி நாடாவை அவர் தந்தை சரிசெய்வதைப் பார்த்தார். தானும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவரின் மற்றொரு காலில் அவிழ்ந்திருந்த நாடாவைக் கட்டிவிட்டார்! அதே வேகத்தில் எழுதக் கற்றுக்கொள்ளும் முன்பே கணினியில் தட்டச்சு செய்யவும் தெரிந்துகொண்டார்.

ஆறு வயதில் நாம் எல்லாம் பொம்மை கார் ஓட்டிக்கொண்டு இருந்திருப்போம். யோஜீனி கியர் மாற்றி, ஸ்டியரிங் திருப்பி, நிஜ காரை ஓட்டினார்.‌ அடுத்த ஆண்டே ‘இளவரசி யோஜீனியின் சாகசங்கள்’ என்கிற பெயரில் இலங்கை சென்ற பயண அனுபவங்களைத் தொகுத்து, தன் முதல் புத்தகத்தை வெளியிட்டார்! பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். பீத்தோவனின் Fur Elise இசைக் கலவையைத் துல்லியமாக வாசித்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1998, ஜூன் 16 அன்று இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும், யோஜீனியின் பூர்விகம் இலங்கை. வருடத்துக்கு ஒரு முறையாவது இலங்கை சென்றுவிடுவார். பெற்றோர் இருவரும் பிரிந்த பிறகு, ஐந்து வயது யோஜீனி தந்தையோடு இங்கிலாந்தில் குடியேறினார்.

யோஜீனியின் மேதாவித்தனமான செயல்கள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கின. ஒன்பது வயதில் கல்வி பயில சென்ற யோஜீனி, இரண்டே ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார்! கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதினார். 12 வயதில் நுண்ணறிவுப் பகுப்பாய்வுத் துறையில் இளங்கலை படிக்கச் சென்றவர், 14 வயதில் பட்டம் பெற்று உலக சாதனை படைத்தார்! அடுத்த ஆண்டே அந்தத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 13 வயதில் தொடங்கிய முதுகலைப் படிப்பை 15 வயதில் நிறைவுசெய்தார். இதன் மூலம் உலகின் மிக இளமையான ஹார்வர்டு பட்டதாரி என்றும் இளம் வயதில் இரண்டு பட்டங்களைப் பெற்றவர் என்கிற சாதனையையும் படைத்தார்!

15 வயதில் முனைவர்‌ பட்டப் படிப்பை படித்து, ஒட்டுமொத்த அமெரிக்காவையும் வியப்பில் உறையவைத்தார். யார் இந்த யோஜீனி என்று மீடியாக்கள் வலைவீசித் தேடின.

“நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் எப்போதும் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும். அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலராக வேண்டும் என்று ஐந்து வயதிலேயே ஆசை வந்துவிட்டது! நாட்டின் பாதுகாப்பே என் தலையாய லட்சியமாக இருந்தது. அந்தச் செய்திகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன” என்று சொன்னார் யோஜீனி.

அன்றிலிருந்து அந்த லட்சியத்தை நோக்கியே தன் படிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார். 2014இல் தனது மூன்றாவது முதுகலைப் பட்டத்தை, சட்டத் துறையில் பெற்றார். யோஜீனி படித்த எந்தப் படிப்புக்கும் கல்வி உதவித்தொகை கிடையாது. உதவித்தொகை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதைக்கூட அவர் பூர்த்திசெய்யவில்லை.

குழந்தை மேதையாகத் திகழ்ந்தாலும் இனம், பெண் என்கிற ரீதியில் பாகுபாட்டையும் எதிர்கொண்டார் யோஜீனி. மாணவர்கள் அதிகமாக நிறைந்திருந்த வகுப்பறைகளில் தனியொரு மாணவியாகப் பயின்றுவந்தார். பேராசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் அளித்தாலும் மாணவர்களைப் பாராட்டும் அளவுக்கு, யோஜீனியைப் பாராட்ட மாட்டார்கள்.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், தன் இலக்கை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருந்தார் யோஜீனி. 18 வயதில் ‘தேசியப் பாதுகாப்பு’ குறித்து ஓர் ஆய்வு நூலையும் வெளியிட்டார்.

தற்போது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பணிசெய்து கொண்டிருக்கும் யோஜீனிக்கு, இந்த வயதுக்கே உரிய விருப்பங்களும் இருக்கின்றன. கன்சல்டன்சி, இணைய வகுப்பு, மாடலிங் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவர், தான் கைவைக்கும் துறைகளில் எல்லாம் முத்திரை பதித்துவருகிறார்! யோஜீனி ஒரு ‘ஜீனியஸ்’ என்பதால் இன்னும் பல சாதனைகளைப் படைப்பது நிச்சயம்.

(மேதைகளை அறிவோம்)

இஸ்க்ரா; iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in