டிங்குவிடம் கேளுங்கள்: தேங்காய்க்கு ஏன் கடினமான ஓடு?

டிங்குவிடம் கேளுங்கள்: தேங்காய்க்கு ஏன் கடினமான ஓடு?

Published on

பட்டாணியின் வெளித்தோலையும் ஆரஞ்சுப் பழத்தின் தோலையும் எளிதாக உரிக்க முடிகிறது. ஆனால், தேங்காய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு கடினமான நாரும் ஓடும் இருக்கின்றன, டிங்கு?

- வி. ஜெபமணி, 7-ம் வகுப்பு, தூய வளனார் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

மென்மையான பட்டாணி விதைகளையும் ஆரஞ்சின் சுளைகளையும் பாதுகாப்பதற்காகவே தோல் இருக்கிறது. பட்டாணி செடியிலும் ஆரஞ்சு சிறு மரத்திலும் காய்க்கின்றன. கீழே விழுந்தாலும் பட்டாணிக்கும் ஆரஞ்சுக்கும் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், தென்னை மரம் மிக உயரமாக வளரக்கூடியது. அங்கிருந்து தேங்காய் விழுந்தால், உடைந்துவிடாமல் இருக்க வேண்டும் அல்லவா? பல கோடி ஆண்டுகளாகப் பூமியில் வசிக்கும் தென்னை மரம், பரிணாம வளர்ச்சியில் தேங்காயைப் பாதுகாக்கக்கூடிய வகையில் தகவமைப்பைப் பெற்றிருக்கிறது.

தேங்காயைச் சுற்றி ஓடு மட்டும் இருந்தாலும் உயரத்தில் இருந்து விழும்போது உடைந்துவிடும். அந்த ஓட்டையும் பாதுகாக்கும் விதத்தில் சுற்றிலும் நார் அமைந்திருக்கிறது. இதனால் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் தேங்காய் உடையாது. நிலத்தில் விழுந்துகிடக்கும் தேங்காய் நாளடைவில் புதிய மரமாகவும் உருவெடுக்கும், ஜெபமணி.

மெளனத்தைவிடப் பெரிய ஆயுதம் எதுவும் இல்லை என்கிறார்களே, அது சரியா டிங்கு?

- ஆர். பூங்குழலி, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

அது சூழ்நிலையைப் பொறுத்தது, பூங்குழலி. சில சூழலில் மெளனமாக இருந்து, அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவரலாம். சில சூழலில் மெளனமாக இருப்பதே பிரச்சினையாகவும் இருக்கலாம். அதனால், பேச வேண்டிய இடத்தில் பேசுவதும் மெளனமாக இருக்க வேண்டிய இடத்தில் மெளனமாக இருப்பதும் நல்லது என்று நினைக்கிறேன்.

இயற்கையாகக் காளான் எப்படி உருவாகிறது, டிங்கு?

- அ. அருண்பாண்டியன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கண்ணுக்குத் தெரியாத ஸ்போர்கள் என்கிற பூஞ்சைகளின் விதைகள் மண்ணுக்குள் புதைந்திருக்கும். வளர்வதற்கான சூழ்நிலை உருவாகும்போது, இவை வெளியே வரும். காளான்களால் தாமே உணவைத் தயாரிக்க இயலாது. அதனால் இவை அழுகும் தாவரப் பொருள்களில் இருந்து தமக்குத் தேவையான சத்துகளைப் பெற்றுக்கொள்கின்றன. அதனால்தான் பட்டுப்போன மரங்கள், தாவரங்களில் இருந்து சத்துகளைப் பெற்று, காளான்களாக வளர்கின்றன, அருண்பாண்டியன்.

தலைமுடியில் தேனைத் தடவினால் வெள்ளையாகிவிடும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா டிங்கு?

- கா. நனி இளங்கதிர், 5-ம் வகுப்பு, ஓ.எம்.ஜி.எஸ். பள்ளி, காளையார் கோவில்.

முடியில் தேன் பட்டுவிட்டால் முடி நரைத்துவிடும் என்பதில் உண்மை இல்லை. தேனில் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் என்சைம் உள்ளது. இது ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாக்குகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு முடியின் நிறத்தைத் தற்காலிகமாக, லேசாகக் குறைக்கும். ஆனால், அது வெள்ளை நிறமாக மாறாது, நனி இளங்கதிர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in