Published : 07 Dec 2016 11:50 AM
Last Updated : 07 Dec 2016 11:50 AM

சித்திரக் கதை: வானவில் யானை

குட்டிப் பையன் யுவனுக்கு ஓவியம் வரைவது என்றால் கொள்ளைஆசை. கையில் வெள்ளைத் தாள் கிடைத்தால் போதும். பூக்கள், சூரியன், மலை, பறவைகள் என்று வரைந்து தள்ளிவிடுவான். அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுவது என்றால் தன்னையே மறந்து விடுவான்.

ஒரு நாள் வீட்டில் எவ்வளவு தேடியும் வெள்ளைத் தாள் கிடைக்கவில்லை ‘அதனால் என்ன? வீட்டுச் சுவர்தான் இருக்கவே இருக்கே’ என்று அப்பா வருவதற்குள் புதிதாக பெயிண்ட் அடித்த சுவரில் படங்களாகக் கிறுக்கி வைத்துவிட்டான். அப்பா பார்த்துவிட்டு கத்தினார். அப்பாவை அடிக்க விடாமல் அம்மாதான் தடுத்தார். யுவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

யுவனின் தாத்தா அவனுக்குப் பெரிதாக ஒரு டிராயிங் நோட்புக் வாங்கிக் கொடுத்தார். வண்ணம் தீட்டுவதற்குத் தனியாக நோட்டுப் புத்தகமும், வண்ண பென்சில்களின் பெட்டியும் வாங்கித் தந்தார்.

இப்போதெல்லாம் குட்டிப் பையன் யுவன் பள்ளியில் இருந்து வந்ததும் குறும்பே செய்வதில்லை. விதவிதமாகப் படங்களை வரைவான். வண்ணம் தீட்டுவான்; தாத்தா அவன் முதுகில் தட்டிக்கொடுத்து ‘பலே” என்பார்.

ஒரு நாள் வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்தான். வண்ண பென்சில்கள் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டான். ஒரு யானை யின் படத்தை வரைந்தான். யானைக்கு வண்ணம் பூச கருப்பு வண்ண பென்சிலை எடுத்தான்.

அப்போது 'வேண்டாம்… வேண்டாம்…’ என்ற குரல் கேட்டது. ‘யாரது?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தான் யுவன்.

“நான்தான், நீ வரைந்த யானைதான் பேசுறேன்” யுவன் குனிந்து பார்த்தான்.

யுவன் வரைந்த யானை, தன் தலையை ஆட்டிஆட்டி தும்பிக்கையை நீட்டி நீட்டி பேசியது.

“நீ ரொம்ப அழகா வரைஞ்சதால எனக்கு உயிர் வந்துடுச்சு. ஆனால், எனக்கு கருப்பு வண்ணம் வேணாம்”.

“யானைன்னா கருப்பாத் தானே இருக்கும்?” என்றான் யுவன்.

“மற்ற பறவைகள்போல் விலங்குகள்போல விதவிதமான வண்ணங்களுடன் என் உடல் இருக்க ணும்னு எனக்கு ஆசை” என்றது யானை.

யுவனுக்கு யானையைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அதற்கு நான் என்ன செய்யுறது?”

“உன்னிடம்தான் பல வண்ண பென்சில்கள் இருக்கே, எனக்கு வண்ணம் தீட்டிவிடேன்” என்று சொன்னது யானை.

யுவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வண்ணப் பென்சில்கள் ஒவ்வொன்றாய் எடுத்து யானையின் உடல் முழுவதும் பல வண்ணங் களைத் தீட்டிவிட்டான்.

யானை எழுந்து நின்றது. துதிக்கை நீல நிறமாக இருந்தது. யானையின் காதுகள் பச்சை நிறம், வால் மஞ்சள் நிறம். வயிறு சிவப்பு நிறம். ஒவ்வொரு காலும் ஒரு நிறம். யானையின் தந்தங்களிலும் வண்ணங்கள் பூசினான். யானையின் கால் நகங்களையும் விட்டுவைக்கவில்லை. அதற்குப் பல வண்ண நெயில் பாலீஷ் போட்டான்.

‘‘என் மீது சவாரி செய்ய ஆசையா? என்று கேட்டது அந்த வண்ணமயமான யானை”.

‘‘ஆமாம்’’ என்றான் யுவன்.

யானை காலை முட்டிபோட, யுவன் யானை மீது ஏறிக்கொண்டான். யானை தெருவில் இறங்கி நடந்தது. தெருவில் எல்லாக் குழந்தைகளும் யானைக்குப் பின்னால் ஓடிவந்தார்கள்”.

“டேய்! கலர் யானைடா” என்று கத்தினார்கள்.

யுவன் அவர்களைப் பார்த்து, “இல்லை இல்லை, இது வானவில்களின் ஏழு நிறம் இருப்பதால் வானவில் யானை” என்று சத்தமாக சொன்னான். “ஹையோடா! வானவில் யானை! வானவில் யானை!” என்று எல்லாரும் கத்தினார்கள்.

யானைக்குத் தன் வண்ணங்களைக் காட்டில் உள்ள மற்ற விலங்குகளிடம் காட்ட ஆசையாக இருந்தது. “நான் காட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்” என்றது வானவில் யானை.

“சரி சரி, சீக்கிரம் வந்திடணும். உன்னை என் அப்பா, அம்மாவிடம் காட்டணும்” என்றான்.

யானை காட்டுக்குள் சென்று மறைந்தது. ஆனால், அது திரும்பி வரவே இல்லை.

ஒரு நாள் மழை சோவென்று பெய்தது. பிறகு நின்றுவிட்டது. தொடுவானத்தில் பெரிதாக ஒரு வானவில் தோன்றியிருந்தது.

அதன் வளைந்த பகுதி யானையின் முதுகு போல் இருந்தது.

“வானவில் யானை, வா என்னிடம்” என்று தொடுவானத்தைப் பார்த்துக் கத்தினான் யுவன்.

சற்று நேரத்தில் வானவில் மறைந்து விட்டது. யுவன் மறுபடியும் யானை படம் வரைய உட்கார்ந்தான். இந்த முறை யானைக்குப் பல வண்ணம் தீட்டவில்லை. கருப்பு வண்ணத்தையே தீட்டினான்.

‘வானவில் யானை மறைந்துவிடும். இந்த யானைதான் பத்திரமாக என்னிடம் இருக்கும்’ என்று சொல்லிக்கொண்டான் யுவன்.

என்ன குழந்தைகளே யுவன் வரைந்த வானவில் யானையைப் பார்க்க ஆசையா?

கீழே பாருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x