

பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்துக்குக்கூட நாம் நடந்து செல்வதில்லை. வாடகைக்கு ஆட்டோ வைத்துக் கொள்கிறோம். பள்ளிக்கூடப் பேருந்தில் போகிறோம். கொஞ்சம் பெரிய பசங்க என்றால், தனியாக வண்டியில் போவார்கள் இல்லையா? பொதுவாக நடப்பது என்றாலே அலுத்துக்கொள்கிறோம். ஆனால் சில விலங்குகள், கால்நடையாகவே ரொம்ப தூரம்கூடப் போகின்றன தெரியுமா? அதுவும் ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டிகூட நடக்கின்றன. ஏழாவது உலகத்தில் இருக்கிற அற்புத விளக்கைக் கண்டுபிடிக்கிற மாதிரியான திகில் நிறைந்த நடை பயணம் அது.
பொதுவாக விலங்குகள் இரையைத் தேடியும், இனப் பெருக்கம் செய்யவும்தான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் விட்டு இடம் போகும். அப்படி ஒரு இடம்பெயர்தல்தான் இந்தப் பயணமும்கூட. ஏதோ ஒரு பறவை எங்கோ ஓர் இடத்துக்குப் பறந்து போவது போன்ற பயணம் இல்லை இது. ஊரே சேர்ந்து பக்கத்து ஊருக்குப் படையெடுப்பது போன்ற பயணம்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செரங்கட்டி என்று ஒரு விலங்குகள் தேசியச் சரணாலயம் உள்ளது. இந்தச் செரங்கட்டியிலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விலங்குகள் படையெடுத்துச் செல்கின்றன. (மசாய் என்பது அந்த இடத்தில் வாழும் பழங்குடி இன மக்களின் பெயர், மாரா என்பது அவர்கள் பேசும் மொழி. எனவே இந்தப் பழங்குடி மக்களைப் போற்றும் விதமாக அந்த இடத்துக்கு மசாய்மாரா என்று பெயர்.)
செரங்கட்டியில் சிங்கங்கள், தான்சானியா சிறுத்தைகள், வரிக்குதிரைகள், தாம்சன் இன மான்கள், வால்டர் பீஸ்ட் என்னும் காட்டெருமைகள், கழுதைப்புலிகள், கொம்பு மான்கள் என்று விதவிதமான விலங்குகள் வாழ்கின்றன.
இவற்றில் சில விலங்குகள் ஊரைவிட்டு ஊர் செல்லும் பயணத்தையும் ஒன்றாகவே சேர்ந்து செய்கின்றன. ஆம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் செரங்கட்டி பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. அப்போது மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களது பயணத்தை இந்த விலங்குகள் தொடங்கும். ஜூலை மாதம் பயணத்தைத் தொடங்கி, அக்டோபர் மாதம் பயணத்தை முடித்துக்கொண்டு இவை வீடு திரும்புகின்றன.
இந்த நெடும் பயணத்தில் 13 லட்சம் எருமை மாடுகள், 5 லட்சம் தாம்சன் மான்கள், 2 லட்சம் வரிக்குதிரைகள் உட்படக் கிட்டத்தட்ட 25 லட்சம் விலங்குகள் பிரம்மாண்டமாகப் பயணம் செய்யும். இந்த விலங்குகள் பயணம் செய்யும் பாதைகள் மிகக் கடுமையானவை. பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்ட வேண்டும். இந்த நீண்ட பயணத்தை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள் காத்திருக்கும். முதலைகளைப் பொறுத்தவரை இந்தக் காலம் விருந்துக்கான காலம். விருப்பப்பட்ட விலங்குகளைப் பிடித்துச் சாப்பிடும். முதலைகள் மட்டுமல்ல, சிறுத்தைகள், கழுதைப்புலிகள் எல்லாம் கூடக் காத்திருக்கும். முக்கியமாகப் பயணம் செய்யும் விலங்குகளை வேட்டையாட சிங்கங்கள் வரிசை கட்டி நிற்கும்.
விலங்குகளின் இந்த விநோதப் பயணத்தைப் பார்த்து ரசிப்பதற்காகச் சிறப்பு சுற்றுலாவுக்குக்கூட அரசாங்கம் ஏற்பாடு செய்து தருகிறது. இதனால் கென்யாவுக்குச் சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்திருக்கிறது என்றால் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்தப் பயணத்தில் இரண்டு விஷயங்களை முக்கியமாகச் சொல்லலாம். இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் செல்வது. இந்த இரண்டு விஷயங்களுமே விலங்குகள் உலகத்தில் அதிசயம்தான்!
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com