கதை: அணிலுக்காகக் காத்திருந்த கரடி!

கதை: அணிலுக்காகக் காத்திருந்த கரடி!
Updated on
2 min read

முல்லைக்காட்டில் வெயில் கடுமையாக இருந்தது. ஒரு வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது கரடி. திடீரென்று அதன் முதுகின் மீது ஏதோ தொப்பென்று விழ, திடுக்கிட்டு எழுந்தது.

இறங்கி ஓடியது ஓர் அணில். தன் தூக்கத்தைக் கலைத்த அணிலைக் கண்டதும் கரடிக்குக் கடுமையான கோபம் வந்தது.

“அணிலே, என் மீது குதித்து விளையாடு கிறாயா? என்ன துணிச்சல் உனக்கு? என் தூக்கம் கலைந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டே அணிலைத் துரத்தியது.

“மரக்கிளையிலிருந்து தவறி விழுந்து விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே அணிலும் ஓடியது.

“அணிலே, உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்” என்று கத்தியபடியே அணிலைத் துரத்தியது கரடி.

ஒரு பெரிய வாதுமை மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த மரப்பொந்தைக் கண்டதும் அதற்குள் நுழைந்துவிட்டது அணில். துரத்தி வந்த கரடிக்குக் கோபம் குறையவே இல்லை.

“அணிலே, தப்பித்துவிட்டோம் என்று நினைக்காதே. எப்படியும் நீ வெளியே வந்துதானே ஆக வேண்டும். எத்தனை நாள்கள் ஆனாலும் நான் இங்கேயே காத்திருந்து உன்னைத் தண்டிப்பேன்” என்று சொல்லிவிட்டு, அந்த மரப்பொந்தின் அருகிலேயே அமர்ந்துகொண்டது கரடி.

அன்று முழுவதும் அணில் வெளியே வரவில்லை. மறுநாள் அணில் வெளியே வரும் என்று கரடி காத்திருந்தது. ஆனால், மறுநாளும் அணில் வெளியே வரவில்லை. இப்படியே மூன்று நாள்கள் கடந்துவிட்டன.

மூன்று நாள்களாக கரடி எதுவுமே சாப்பிடாமல் மரத்தடியில் காத்திருந்ததால் அதற்குப் பசி எடுத்தது. ஆனால், அந்த இடத்தைவிட்டு நகர்ந்தால், அணில் தப்பித்துவிடுமே என்று நினைத்து அது வேறு எங்கும் செல்லவில்லை. பசியும் தாகமும் வாட்டியதால் கரடி களைத்துப்போய் அங்கேயே படுத்துக்கொண்டு, மரப்பொந்தைக் கண்காணித்துக்கொண்டிருந்தது.

அங்கே வந்த நரி, “ஏன் இந்த மரத்தடியில் களைத்துப் போய் படுத்துக் கிடக்கிறே?” என்று கேட்டது. நடந்த விஷயங்களைக் கூறியது கரடி.

“சரிதான். ஆனால், எதற்காக நீ வீணாகப் பட்டினி கிடக்க வேண்டும்? இதோ இந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுக் காத்திருக்கலாமே” என்று சொன்ன நரி, கொஞ்சம் பழங்களையும் கிழங்குகளையும் கரடிக்குக் கொடுத்தது.

‘ஆஹா, தக்க நேரத்தில் உணவு கிடைத்ததே’ என்று நினைத்த கரடி, நரி கொடுத்த பழங்களையும் கிழங்குகளையும் வாங்கிச் சாப்பிட்டது. கரடிக்கு இப்போது தெம்பு வந்தது. அது நரிக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் அணிலுக்காகக் காத்திருந்தது.

மரப்பொந்திற்குள் சென்ற அணில் வெளியே வரவில்லை. இப்படியே இன்னும் சில நாள்கள் கடந்தன. ஆனால், தினமும் நரி தவறாமல் கரடிக்குப் பழங்களையும் கிழங்குகளையும் கொண்டு வந்து கொடுத்தது. கரடியும் அவற்றைச் சாப்பிட்டுவிட்டு, நரிக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தது.

வழக்கம்போல மறுநாளும் நரி வந்தது. அது கரடிக்கு இன்று வெள்ளரிக்காய், தேனடை என்று ருசியான உணவைக் கொண்டு வந்திருந்தது. அவற்றைப் பார்த்ததும் கரடிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அது நரியிடம், “நண்பனே, என்னை உனக்கு யாரென்றே தெரியாது. ஆனாலும் தினமும் எனக்கு உணவு எடுத்து வருகிறாய். என்னைத் தொந்தரவு செய்த அணிலைப் பழிவாங்க உதவி செய்கிறாய். எதற்காக இப்படி என்னைத் தேடி வந்து உதவி செய்கிறாய்?” என்று கேட்டது கரடி.

நரி சிரித்தது.

“அணிலைப் பழிவாங்க வேண்டும் என்று எத்தனை நாள்கள் இங்கேயே காத்திருக்கிறே?” என்று கேட்டது நரி.

“பத்து நாள்களுக்கும் மேலே இங்கே காத்திருக்கிறேன்” என்றது கரடி.

“இப்படிப் பசியும் பட்டினியுமாகக் காத்திருந்ததால் உன் உடல்தானே மோசமானது... எதற்கு இந்தப் பிடிவாதம்?”

“நரியே, எனக்காவது நீ உணவு கொண்டு வருகிறாய். ஆனால், மரப்பொந்திற்குள் இருக்கும் அணிலுக்கு யார் உணவு தரப்போகிறார்?” என்று கேட்டது கரடி.

“அணில் பசியால் தவிக்கிறது என்று யார் சொன்னது? அது தினமும் வெளியே போய் உணவைச் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறது” என்று நரி சொன்னதைக் கேட்டு, கரடிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்றே?”

“ஆமாம், இந்த மரப் பொந்திற்குள் அணில் நுழைந்தது என்னவோ உண்மைதான். ஆனால், மரத்தின் மறுபுறம் இதுபோலவே வேறொரு ஓட்டை இருக்கிறது. நீ இந்தப் பக்கம் அணிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது, அணில் தினமும் அந்தப் பக்கம் இருக்கும் ஓட்டை வழியாக வெளியே போய்விட்டுத் திரும்பி வருகிறது. இன்னொரு உண்மையையும் நான் சொல்லட்டுமா?” என்று கேட்டது நரி.

“என்ன?”

“நீ பசியாலும் தாகத்தாலும் தவிப்பதைப் பார்த்து இரக்கம் கொண்டு தினமும் உனக்கு உணவை என்னிடம் கொடுத்து அனுப்புவதே அணில்தான். அணில் அறியாமல் செய்த தவறுக்காக அதைப் பழிவாங்க வேண்டும் என்று நீ நினைக்கிறே... ஆனால், அணில் உன்மீது அன்பு கொண்டு உனக்கு உணவை அனுப்பி வைக்கிறது.

ஒருவர் செய்த தவறை மன்னிப்பதே சிறந்தது. அதைவிட்டுவிட்டு, பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் நம் மனமும் உடலும்தான் பாதிக்கப்படும். இப்போதே அணிலை அழைத்து வருகிறேன். அதை மன்னித்து நண்பனாக ஏற்றுக்கொள்” என்று சொன்னது நரி.

“கோபத்தில் நியாயத்தை மறந்துவிட்டேன். இதோ இப்போதே அணிலிடம் என் செயலுக்கு வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்” என்றது கரடி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in