

1950கள் தொடங்கி கடந்த நூற்றாண்டின் இறுதிவரை சிறாருக்கான இதழ்கள் தமிழ்நாட்டுச் சிறாரின் வாசிப்பில் பெரும் தாக்கத்தைச் செலுத்திவந்தன. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்ச் சிறார் இதழ்கள் பெருமளவு தேய்ந்துவிட்டன.
இந்தப் பின்னணியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழ் இந்த மாதம் முதல் அனுப்பப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் இதழ், அதை வாசிப்பதற்குத் தனி நேரம் போன்றவை ஒதுக்கப்பட்டுள்ளன.
வணிக இதழ்களுக்குச் சவால் விடும் தரத்தில், வண்ணப் பக்கங்களுடன் முதல் ‘தேன்சிட்டு’ இதழ் வெளியாகியுள்ளது. 24 பக்கங்களுடன் ‘டேப்ளாய்டு’ வடிவத்தில் இதழ் அமைந்துள்ளது. மாதம்தோறும் வெளியாக உள்ளது.
கதை, பாடலைத் தாண்டி அறிவியல், ஆங்கிலம், சிறார் சாதனையாளர், சுற்றுச்சூழல், கலை எனப் பல்வேறு அம்சங்கள் குறித்த படைப்புகள் நிறைந்துள்ளன.
அனைத்துமே குறைந்த எழுத்து, அதிகப் படங்களுடன் மாணவர்களை ஈர்க்கும் வகையில் தரப்பட்டுள்ளன. அத்துடன் இதழின் பல்வேறு பக்கங்களில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்றால், ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ என்கிற இதழ் வெளியாகிறது. இதில் ஆசிரியர்களுக்கும் கற்பித்தலுக்கும் உதவும் பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் அம்சங்களை இதழின் பெரும்பாலான பக்கங்களில் பார்க்க முடிகிறது. சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவர்கள் குறித்து மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக முன்னுதாரணங்களான ஜப்பானின் ‘டோமாயி பள்ளி’, ‘பகல் கனவு’ நூலை எழுதிய ஆசிரியர் ஜிஜுபாய் பதேக்கா என வாசிப்பை ஊக்கப்படுத்தும் கட்டுரைகள், திரைப்படம் குறித்த அறிமுகம் என ஆசிரியர்களுக்கான முழுமையானதோர் இதழாக வந்திருப்பது அருமை. இரண்டு இதழ்களையும் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் சிறப்பாகத் தயாரித்துள்ளது.
- நேயா