

‘வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று தெரியாதவர் களுக்குத்தான் கணிதம் கசப்பாக இருக்கிறது’ என்று ஜான் வான் நியுமன் சொல்வார். ஆனால், வாழ்வின் கசப்பை உணர்ந்துகொள்வதற்கு முன்பே ஜான் கணிதத்தில் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்.
ஜானுக்கு ஆறு வயது. எட்டு இலக்க எண்களைக் காகிதம் இல்லாமல் மனக்கண்ணில் வகுத்து ஆச்சரியப்படுத்தினார். வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் தொலைபேசி எண்களைக் கேட்டு, பெயரும் முகவரியும் சொல்லி, டெலிபோன் டைரக்டரியை மனப்பாடம் செய்து அசத்தினார். பழங்காலக் கிரேக்கக் கதைகளைச் சொல்லி வீட்டில் இருப்பவர்களைப் பிரமிக்க வைத்தார். ‘தன் மகன் எப்படி எல்லாம் யோசிக்கிறான்’ என்று ஜானின் அம்மாவுக்கு எப்போதும் ஆச்சரியமாகவே இருக்கும்.
தாய்மொழி கற்றால் மட்டும் போதாது என்று சிறப்பு ஆசிரியரை நியமித்து, பல மொழிகளைக் கற்றுத் தந்தார் ஜானின் தந்தை மேக்ஸ். கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கில மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். எட்டு வயதில் வகை, தொகை நுண்கணிதங்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குப் பயிற்சி பெற்றார்.
பிரெட்ரிக் வில்ஹெம் எழுதிய 46 தொகுதிகள் கொண்ட உலக வரலாற்றுப் புத்தகத்தை வரிவிடாமல் வாசித்துவிட்டார்! சில பத்தாண்டுகள் கழித்து அதன் எந்த அத்தியாயத்தைக் கேட்டாலும் அப்படியே ஒப்பித்தார்! பிற்காலத்தில் ஜான் விருந்துக்கு அழைக்கும்போது, வரலாற்றுத் துறை பற்றி எதுவும் பேசாதிருந்தால்தான் வருவேன் என்றே பேராசிரியர்கள் இவரிடம் அன்பு வேண்டுகோள் வைத்தார்கள்!
ஆனால், இத்தனையும் படித்தறிந்த ஜான் நியுமன் வரலாற்றுத் துறை வல்லுநரோ மொழியியல் அறிஞரோ கிடையாது. கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் என்று பல்துறை நிபுணராகவே இருந்தார்.
ஹங்கேரியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டதோடு, ஜானுக்கு நுண்கணிதம் பயிற்றுவிக்க கேபோர் ஜெகோவைச் சிறப்பு ஆசிரியராகப் பணியமர்த்தினார் மேக்ஸ். திடீரென்று கணிதத்தில் என்ன சம்பாதிக்க முடியும் என்று யோசித்த மேக்ஸ், பணம் சம்பாதிக்கிற மாதிரி உருப்படியாக ஏதும் படிக்கிறாயா என்று கேட்டார். ஆனால், ஜான் அதைப் பொருள்படுத்தியதாகத் தெரியவில்லை.
19 வயதிலேயே ஜார்ஜ், கேன்டோரின் தேற்றத்தைப் பொய்யாக்கும்படி இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அடுத்த ஆண்டே குவாண்டம் இயங்கியல் துறையில் வலுசேர்க்கும்படியான ஆய்வுத் திட்டம் ஒன்றை வெளியிட்டார்.
30 வயதில் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன்ஸ்டிடியூட்டில் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது, இரண்டாம் உலகப் போர் வரும் என்று ஊகித்தார். வெடிகுண்டு, ஏவுகணைகள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து அமெரிக்க ஆயுதப் படைக்குப் பெரும் உதவி செய்தார்.
“தன்னால் இயன்றதை வெளிக்கொண்டுவந்த விஞ்ஞானிகளுக்கு மத்தியில், தேவையானதை ஆராய்ந்து வெளிக்கொண்டுவந்தவர் ஜான்” என்று அவருடன் பணியாற்றிய கணிதவியலாளர்களும் விஞ்ஞானிகளும் போற்றினார்கள்.
அதற்குப் பின் ராணுவ ஏவுகணைத் தாக்குதலுக்காக ‘எனியாக்’ என்கிற மின்னணு கணினியின் வடிவமைப்புப் பணிகளில் மும்முரமாக இறங்கினார் ஜான். பின்னர் வானியல் அறிக்கை சொல்லும் இயந்திரங்களைக் கண்டுபிடிக்க முயன்றார்.
மனித மூளை, கணினியின் செயல்பாட்டுத் திறனை ஒப்பிட்டு வெளியிட்ட இவரின் ஆய்வு முடிவுகளால், செயற்கை நுண்ணறிவியல், நரம்பணுவியல் போன்ற துறைகள் தோன்றுவதற்கு வழிபிறந்தது. அபார ஆற்றல் கொண்ட தனித்துவமான விஞ்ஞானியாக ஜான் வான் நியுமன் திகழ்ந்தார்.
கணிதத்தில் இருந்து இயற்பியல், இயற்பியலில் இருந்து பொருளாதாரம், பொருளாதாரத்திலிருந்து பொறியியல் என்று ஒவ்வொரு துறையிலும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் வசித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற ஜெர்மானிய மேதைகளோடு பணியாற்றினார்.
ஜான் உலகத்துக்குக் கொடுத்த கொடைகளை ஒரு பட்டியலுக்குள் அடக்க முயல்வது சுலபமான காரியமல்ல. 57 வயதிற்குள் பல்வேறு துறைகளில் பல்வேறு உயரங்களைத் தொட்டுவிட்டார். ‘மென்டல் ஜிம்னாஸ்டிக்ஸ்’ என்கிற உளவியல் நுட்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் ஒவ்வோர் அசைவிலும் ஜானின் பங்களிப்பு மறைந்திருக்கிறது.
குழந்தை கணித மேதையாக உருவாகி, இயற்பியலாளர், கணினியியலாளர், பொறியியலாளர் எனப் பல்கலை வித்தகராகப் புகழ்பெற்ற ஜான், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாகத் திகழ்கிறார்.
(மேதைகளை அறிவோம்)
- இஸ்க்ரா; iskrathewriter@gmail.com