Last Updated : 14 Dec, 2016 10:49 AM

 

Published : 14 Dec 2016 10:49 AM
Last Updated : 14 Dec 2016 10:49 AM

விண்வெளிக்குப் போன விலங்குகள்!

முதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்கள் செல்லவில்லை. விலங்குகள்தான் சென்றன. குரங்கு, நாய் மட்டுமல்ல இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே பின்னர் மனிதர்கள் விண்வெளிக்குப் போனார்கள்.

நாம் வாழும் பூமியைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்துக்கு அப்பால் விண்வெளி உள்ளது. விண்வெளி குறித்தும் தொலைவில் உள்ள கோள்கள் குறித்தும் பல நூற்றாண்டுகளாகவே ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில் முதலில் ஆளில்லா விண்கலத்தையும், பிறகு மனிதர்களையும் அனுப்பி வைக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். விண்வெளியில் ஏற்படும் கதிரியக்கம், ஈர்ப்பு நிலை, காந்த விசை, உடல்நலப் பாதிப்புகள் போன்றவை எப்படி இருக்கும் என அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதற்காக மனிதர்களுக்கு முன்பாகப் பல்வேறு விலங்குகள் அங்கு அனுப்பிப் பரிசோதிக்கப்பட்டன.

அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் இந்த முயற்சியில் முதன் முதலில் இறங்கின. 1783-ம் ஆண்டில் வெப்ப பலூன் மற்றும் விமானங்கள் வாயிலாக அமெரிக்கா தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கியது. பல ஆயிரம் அடி உயரத்துக்கு எலி, நாய், பூனை, பன்றி ஆகியவற்றை அனுப்பும் ஆராய்ச்சிகள் 1940 வரை நடைபெற்றன. 1947-ல் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்பி அமெரிக்கா சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் குரங்குகளும் எலிகளும் அனுப்பப்பட்டன. 1949-ல் ஆல்பர்ட்-2 என்ற செம்முகக் குரங்கினம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அது திரும்பும் வழியில் இறந்தது.

ரஷ்யா நடத்திய விண்வெளி பரிசோதனையில் அதிகளவில் நாய்களே ஈடுபடுத்தப்பட்டன. தலைநகர் மாஸ்கோவில் வீதி நாயாகத் திரிந்த லைக்கா எனும் நாய், பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்புட்னிக்-2 என்ற விண்கலத்தில் அனுப்பப்பட்டது. 1958-ல் வெற்றிகரமாகச் சுற்றுவட்டப் பாதைக்குச் சென்ற இந்த விண்கலம், பூமிக்குத் திரும்பும் வழியில் எரிந்துபோனது. லைக்காவைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நாய்களை விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா ஈடுபடுத்தியது. இதன் பின்னர் 1961 ஏப்ரல் 12 அன்று அந்நாட்டின் விண்வெளி வீரரான யூரின் ககாரின், விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரான்ஸ், சீனா, அர்ஜெண்டினா, ஜப்பான், ஈரான் நாடுகள் அடுத்தடுத்து விண்வெளி ஆராய்ச்சிக்காக விலங்குகளை அனுப்பிவைத்தன. எறும்பு, தவளை, குளவி, சிலந்தி, மீன்கள், பன்றி, நத்தைகள் உட்பட ஏராளமான உயிரினங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டன. 2007-ல் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கரப்பான் பூச்சிகளையும், 2010-ல் ஈரான் ஆமைகளையும் அனுப்பி வைத்தன. பெரும்பாலான ஆராய்ச்சிகளில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விலங்குகள் இறந்தேபோயின.

மனிதர்களுக்கான ஆராய்ச்சியில் விலங்குகள் பாதிக்கப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, விண்வெளி ஆராய்ச்சியில் விலங்குகள் உயிரிழப்பது குறைந்தன. மனிதர்கள் விண்வெளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகும், பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக உடன் பல உயிரினங்களும் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன.

பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியாக விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்கள், நுண்ணுயிரிகளைத் தொடர்ந்து எறும்புகள், பூச்சியினங்கள், சுண்டெலிகள் ஆகியவை ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் கட்டமாக, அங்கு குரங்குகளை அடுத்த ஆண்டு அனுப்ப உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x