

ஒருமுறை பூமியில் வறட்சி நிலவியது. செடிகளிலும் கொடிகளிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன. விலங்குகள் உணவில்லாமல் தவித்தன.
வறண்ட குளத்தில் தவளை ஒன்று வாழ்ந்தது. சொர்க்கத்தின் அரசனைச் சந்தித்து, மழையை அனுப்பி வைக்கும்படி கேட்க முடிவு செய்தது. போகும் வழியில் அது நண்டு, கரடி, புலி, நரி, தேனீக்கள் ஆகியவற்றைச் சந்தித்தது.
அனைத்தும் தவளையைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தை நோக்கிச் சென்றன. சொர்க்கத்தின் கதவுகளை அடைந்தபோது, ஒரு பெரிய பறையைப் பார்த்தது தவளை.
நண்பர்களிடம், “நண்டே, நீ இந்தத் தண்ணீர் ஜாடியின் உள்ளே சென்றுவிடு. தேனீக்களே, இந்தக் கதவுகளுக்குப் பின்னால் இருங்கள். நரி, கரடி, புலி மூன்று பேரும் இரண்டு பக்கங்களிலும் ஒளிந்திருங்கள்” என்று சொன்னது தவளை.
குச்சியை எடுத்து பறை மீது மூன்று முறை அடித்தது தவளை. சொர்க்கத்தின் அரசர் தூக்கத்தில் இருந்து விழித்தார். கோபப்பட்டார்.
உடனே தவளையைக் கொல்லச் சொல்லி சேவலுக்கு ஆணையிட்டார். சேவல் தவளையை நெருங்கியபோது, தவளை நரியை அழைத்தது.
நரியைக் கண்டதும் சேவல் பயந்து ஓடிவிட்டது. அரசர் நரியைத் தண்டிக்க நாய்க்கு ஆணையிட்டார். ஆனால், நாய் நரியை நோக்கிச் சென்றபோது கரடி வந்தது.
கரடியைக் கண்டதும் நாய் ஓடிவிட்டது.
அரசருக்குக் கோபம் வந்தது.
இடி அரசரை அழைத்து, கரடியைக் கொல்லச் சொன்னார்.
இடி அரசரை ஒளிந்திருந்த தேனீக்கள் கொட்டின. வலியால் கதறியபடி இடி அரசர் தண்ணீர் ஜாடிக்குள் குதித்தார்.
தண்ணீர் ஜாடிக்குள் இருந்த நண்டு, இடி அரசரைத் தன் இரண்டு கொடுக்குகளால் பிடித்துவிட்டது. இடி அரசர் ஜாடியிலிருந்து துள்ளிக் குதித்தார்.
அப்போது புலி வரவும் இடி அரசர் அலறிக்கொண்டு ஓடினார்.
“போதும் போதும்... தயவுசெய்து இடி அரசரை விட்டுவிடு” என்று அரசர் கெஞ்சினார்.
புலி, இடி அரசரை எதுவும் செய்யவில்லை. தவளையையும் அதன் நண்பர்களையும் தோற்கடிக்க முடியாது என்று நினைத்த அரசர், தவளையிடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.
“வெகு நாள்களாகப் பூமியில் மழை பெய்யவில்லை. இப்படியே வறட்சி நீடித்தால் பூமியில் வாழும் உயிரினங்கள் மடிந்துவிடும். அவர்களைக் காப்பாற்றுவதற்கு மழை மிக அவசியம். அதனால் மழையை உடனே அனுப்பி வையுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தது தவளை.
மழையை அனுப்பாவிட்டால், பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு வந்து சண்டையிட்டால் என்ன ஆகும் என்று அரசர் பயந்தார். அதனால் தவளையிடம் மெதுவாக, “நீங்கள் பூமிக்குச் செல்லுங்கள். உடனே மழை பொழியும்” என்றார் அரசர்.
தவளையும் அதன் நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டன.
“தவளையே, அடுத்த முறை மழை வேண்டும் என்றால் சொர்க்கத்திற்கு வர வேண்டியதில்லை. ஒரு ‘கிர்ராக்’ போதும். உடனே பூமிக்கு மழையை அனுப்பி வைக்கிறேன்” என்றார் அரசர்.
தவளை பூமியை அடைந்தபோது எங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து தவளை கத்தும்போது உடனடியாக மழை வந்துவிடுகிறது!
- தமிழில்: உதயசங்கர்