குழந்தை மேதைகள் 07: 7 வயதுக்குள்25 ஆயிரம் ஓவியங்கள்!

குழந்தை மேதைகள் 07: 7 வயதுக்குள்25 ஆயிரம் ஓவியங்கள்!
Updated on
2 min read

ஓர் ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். ஆனால், வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பே ஆயிரம் ஓவியங்களை வரைந்த சிறுவனை உங்களுக்குத் தெரியுமா? இரண்டு வயதாக இருக்கும்போதே தாமஸ் கிளின்ட்டின் பிஞ்சு விரல்கள் ஓவியம் தீட்டத் தொடங்கிவிட்டன!

1976ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்தான் அந்தக் குழந்தை மேதை. தந்தை ஜோசப்புக்கு, கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த ஹாலிவுட் திரைப்படங்கள் பிடிக்கும். அவர் மீதுள்ள அன்பால், ‘எட்மண்ட் தாமஸ் கிளின்ட்’ என்று தன் மகனுக்குப் பெயர் சூட்டினார்.

கிளின்ட்டுக்கு வரைவதில் ஆர்வம் எப்படியோ வந்துவிட்டது. அவனுக்காக வண்ணச் சுண்ணக் கட்டிகளை வாங்கிக் கொடுத்தார் ஜோசப். தவழ்ந்துகொண்டே தரையெல்லாம் வரைந்துகொண்டிருப்பான் கிளின்ட். சுண்ணக் கட்டியின் தூசி கிளின்ட்டின் உடல்நலத்தைப் பாதித்தது. அதனால் மாதக் கணக்கில் மருந்து உட்கொள்ள வேண்டியிருந்தது.

அதற்குப் பிறகு கிரேயான்களை வாங்கிக் கொடுத்தார் ஜோசப். தாள்களை மெழுகு வண்ணங்களால் அழகாக்கினான் கிளின்ட். எந்த ஊருக்குச் சென்றாலும் ஓவியத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிவந்து கொடுப்பார் ஜோசப்.

கிளின்ட்டும் தூங்காமல், சாப்பிடாமல் வரைந்துகொண்டே இருப்பான். 5 ஆயிரம் வண்ண டப்பாக்களையும் மூன்றே மாதங்களில் வரைந்து தீர்த்திருக்கிறான்!

ஜோசப்பின் நண்பர் மோகனன், கிளின்ட்டின் படங்களைக் கண்டு வியந்தார். பத்திரிகையாளர்களை அழைத்து, கிளின்ட்டின் ஓவியங்களைக் காட்டினார். அடுத்த சில நாள்களில் பிரபல நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கிளின்ட்டின் படத்தோடு செய்தி வெளியானது. சிறு வயதிலேயே பெரும் புகழை அடைந்தான் கிளின்ட்.

சில நேரம் இரண்டு கைகளிலும் ஓவியம் தீட்டுவான். பிள்ளையார்போல் தனக்கும் ஒரு தும்பிக்கை இருந்தால் வண்ணங்களைக் கலக்க வசதியாக இருக்குமே என்று கிளின்ட் சொல்லும் அளவுக்கு அவனுடைய ஓவிய ஆர்வம் இருந்தது!

நான்கு வயதுச் சிறுவனுக்குள் எங்கிருந்து இவ்வளவு திறமைகள் வருகின்றன? தொலைக்காட்சி இல்லாத காலத்தில், நான்கு சுவர்களுக்குள் அவன் உலகத்தை எப்படிக் கட்டி எழுப்பினான்‌? நண்பர்கள் சொல்லும் இயற்கை வர்ணனைகளை ஓவியமாக மாற்றினான். தோழி அம்மு வர்ணித்த விலங்குகளை அப்படியே வரைந்தான். தந்தை ஜோசப் சொல்லும் இந்து புராணக் கதைகளைக் காட்சியாக மாற்றினான்.

‘ராவணனின் கடைசி நாள்’ ஓவியத்தில் தேர்ந்த கலைஞருக்கான நுட்பம் தெரிந்தது. பத்துத் தலை ராவணனை ஒற்றைத் தலையோடும், ஒற்றைத் தலை அனுமனை நான்கு தலைகளோடும் வரைந்தான். பிரபல கலை விமர்சகர் வி.கே. நம்பியாருக்கு கிளின்ட்டின் ஓவியத்தில் பறவைகளின் உடல்மொழி தனியாகத் தெரிந்தது. நீலத் திமிங்கிலம், வெறிக்கும் ஆந்தை, பசித்த கழுகு, சுமைதாங்கிய கழுதை என்று அவன் விரல்படாத விலங்குகளே இல்லை. சின்னம்மா (அம்மா) சொன்ன கதைகளில் இருந்து டேவிட் கோலியாத், சிங்கத்தோடு சண்டையிடும் சாம்சன் ஆகிய ஓவியங்களைத் தீட்டினான் நான்கு வயது கிளின்ட்!

ஆறாவது பிறந்தநாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, அடிக்கடி கிளின்ட்டின் கண்களும் வயிறும் வீங்கின. மருத்துவப் பரிசோதனையில் வந்த முடிவு கிளின்ட்டின் குடும்பத்தை உலுக்கிவிட்டது.

குழந்தையாக இருந்தபோது உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவால், கிளின்ட்டின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன. ஜோசப்பும் சின்னம்மாவும் கண்ணீர் சிந்தினர்.

திருச்சூரில் நடந்த உலகப் புகழ்பெற்ற பூரம் விழாவுக்கு கிளின்ட்டை அழைத்துச் சென்றார் ஜோசப். அங்கு வண்ணமயமான காட்சிகளைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தான் கிளின்ட்.

1983இல் கோழிக்கோட்டில் நடந்த பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான யுனிவர்சல் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டான் கிளின்ட். 10 ஆயிரம் போட்டியாளர்களில் 7 வயதேயான கிளின்ட் முதல் பரிசைப் பெற்றான்! வீட்டுக்குத் திரும்பும் வழியில் தெய்யம் நடனத்தைப் பார்த்தான். அதிக நேரம் செலவு செய்து கிளின்ட் வரைந்த மிகப் பிரமாதமான ஓவியம் அது!

இப்படியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தான் வாழ்ந்த 2,522 நாள்களில் வரைந்துவிட்டு, தன் ஏழாவது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்பு மறைந்தான் கிளின்ட்.

கிளின்ட் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய ஓவியங்கள் குறித்து மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! அருங்காட்சி யகங்களில் அவனுடைய ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவனைப் பற்றிய திரைப்படங்களும் வந்திருக்கின்றன. ஓவியங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்தக் குழந்தை மேதை!

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா; iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in