

நீலப்பூ,
விஷ்ணுபுரம் சரவணன்,
வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991
சமூகத்தில் காலம் காலமாக நிலவிவரும் பிரச்சினைகளை நம் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் பிரச்சினைகளில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்கிற தெளிவையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் சாதியப் பிரச்சினை குறித்து கதை வழியே காத்திரமான பார்வையை முன்வைத்து உரையாடுகிறது இந்தச் சிறார் நாவல்.
ஓங்கில் கூட்டம் இளையோர் நூல்வரிசை,
தொடர்புக்கு: 044 2433 2424
பதின் வயதுக் குழந்தைகள் சமூகம் இயங்கும் விதம் குறித்து நிறைய கேள்விகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்றதுபோல் ‘கயிறு’, ’வாசிக்காத புத்தகத்தின் வாசனை’, ‘சோசோவின் விசித்திர வாழ்க்கை’ ஆகிய சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகள், ‘கடைசி பெஞ்ச்’ – இளையோருக்கான கவிதைகள், ‘ஹம்போல்ட்’, ‘ஜானகி அம்மாள்’ என ஆளுமைகளின் சுருக்கமான வரலாறு, ‘தண்ணீர் என்றோர் அமுதம்’, ‘பகத் சிங் ஏன் நாத்திகர் ஆனார்?’ உள்ளிட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சீமையில் இல்லாத புத்தகம்,
தேனி சுந்தர்,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924
குழந்தைகள் பேசுவதை, புரிந்துகொள்வதை, தொடர்புபடுத்திக்கொள்வதை, பெரும்பாலான பெற்றோர் சிறுபிள்ளைத்தனமானது எனத் தவறாக நினைத்துக் கடந்துவிடுகிறார்கள். உலகைப் புரிந்துகொள்ள முயலும் குழந்தைகளின் பார்வையில் நிறைய சுவாரசியங்கள், வார்த்தை விளையாட்டுகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றைப் புத்தகமாக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
தேநீர்க் குடில்,
யூமா வாசுகி,
தன்னறம் நூல்வெளி, தொடர்புக்கு: 9843870059
ஒரு சமூகம் என்பது பல்வேறுபட்ட மனிதர்கள் வாழக்கூடியது. நம்மிடையே உடல் சார்ந்த சில சிக்கல்களுடன் பலர் வாழ்ந்துவருகின்றனர். அவர்களைக் காரணமின்றி ஒதுக்கிவைக்கிறோம். அதே நேரம் அவர்களுடைய உடல் சிக்கல்களில் கவனம் செலுத்தாமல், அவர்களின் உள்ளத்தை சிலர் மதிக்கிறார்கள். மனிதர்களின் ஆகச் சிறந்த பண்பான அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. அன்பின் மகத்துவத்தைப் போற்றும் கதை இது.
1650,
விழியன்,
வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991
நம் குழந்தைகளுக்கு வரலாற்றைச் சொல்ல வேண்டும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விடுதலைக்குப் பங்களித்த சாதாரண மனிதர்கள் பலர் ஒட்டுமொத்தமாக பலியான நிகழ்வு ஜலியான்வாலா பாக் படுகொலை. அது குறித்து நம் குழந்தைகளுக்குக் கதை வழியாகச் சொல்கிறது இந்த நூல்.
வாசித்து வளர்வோம் நூல்வரிசை,
உதயசங்கர்,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924
தமிழில் 5-8 வயதுப் பிரிவில் உள்ள குழந்தைகளுக்குக் குறைந்த எழுத்து, அதிக வண்ணப் படங்கள் கொண்ட புத்தகங்கள் வருவது அரிதாக இருக்கிறது. இந்த நிலையில் சிறு குழந்தைகளுக்குச் சொல்வதற்கு ஏற்ற, அவர்களே வாசிப்பதற்கு ஏற்ற சிறிய கதைகளை வண்ணப் படங்களுடன் இந்த நூலின் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
பசுமைப் பள்ளி,
நக்கீரன்,
காடோடி பதிப்பகம்,
தொடர்புக்கு: 80727 30977 (வாட்ஸ்அப் மட்டும்)
இயற்கை, காடுகள், காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் குறித்த நெடிய பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஆனால், அந்த அருமை பெருமைகளை நாம் வேகமாக இழந்துவருகிறோம். இந்தப் பின்னணியில் தமிழ் மண்ணின் சூழலியல் அறிவை குழந்தைகளுக்கு இனிப்பு போல் எளிமையான, சுவாரசியமான மொழியில் பரிமாறுகிறது இந்த நூல்.
ஊர் சுற்றலாம்,
ரா. ராணி குணசீலி,
புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 044 2433 2924
ஆடிப்பாடி மகிழ வேண்டிய வயதில் குழந்தைகளுக்குத் தமிழில் புதிய பாடல்கள் இல்லாத குறை நீடித்துவருகிறது. இந்தப் பின்னணியில் எளிமையான, அழகான, குழந்தைகளே ரசித்துப் பாடக்கூடிய பாடல்களை இந்தத் தொகுப்பின் வழியாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
அலைகளின் அம்மா யாரு?,
கொ.மா.கோ. இளங்கோ,
வானம் பதிப்பகம்,
தொடர்புக்கு: 91765 49991
தொடர்ச்சியாகச் சிறாருக்கான கதைகள், மொழிபெயர்ப்பு என இயங்கிவரும் இந்த நூலின் ஆசிரியர், குட்டிக் குழந்தைகளுக்குச் சொல்வதற்கேற்ற பல புதிய கதைகளை இந்தத் தொகுப்பின் வழியே தந்திருக்கிறார்.
பறக்கும் யானைகள்,
பிரசாந்த்.வே,
புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 044 2433 2424
குழந்தைகளின் கதையுலகம் சிறகடித்துப் பறக்கும் கற்பனைகளால் ஆனது. அதே நேரம் குழந்தைகளுக்குக் கதை எழுத வரும் பெரியவர்கள், கற்பனை என்பதற்காக நினைத்ததை எல்லாம் சொல்லிவிடக் கூடாது. அந்த எல்லையை உணர்ந்து உயிரினக் கதாபாத்திரங்களைக் கொண்டு குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி யிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
| சென்னை புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை அரங்கு 505, 506 இந்து தமிழ் திசை பதிப்பகம், தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402 ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications |