குழந்தை மேதைகள் 6: உலகம் சந்தேகித்த எட்டு வயதுக் கவிஞர்!

குழந்தை மேதைகள் 6: உலகம் சந்தேகித்த எட்டு வயதுக் கவிஞர்!
Updated on
2 min read

ஒரு சிறுமி அற்புதமாகக் கவிதை எழுதினால் என்ன ஆகும்? இந்த உலகம் கொண்டாடும் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், உலகம் என்ன செய்தது தெரியுமா?

1950களின் மத்தியில் பிரெஞ்சு இலக்கிய உலகம் அதிகமாக உச்சரித்த பெயர் ‘மினு ட்ரூவே’. சிலர் இவரை, ‘குழந்தை மேதை’ எனக் கொண்டாடினர். சிலர் ஏமாற்றுக்காரர் எனக் குற்றம்சாட்டினர். ஆனால், இன்றைக்கும் பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் இந்த மினு ட்ரூவேவுக்கு முக்கியமான இடம் உண்டு. ஒருபக்கம் வாழ்த்துக் கடிதம், மறுபக்கம் கண்டனக் கடிதம். இரண்டுக்கும் மத்தியில் இந்த எட்டு வயதுச் சிறுமி என்னதான் செய்தார்?

1947ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த மினு, தன் பெற்றோரைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டார். ட்ரூவே என்பவர் மினுவைத் தத்தெடுத்து வளர்த்தார். மினுவுக்குச் சிறிது பார்வைக் குறைபாடும் ஆட்டிஸக் குறைபாடும் இருந்தன.

மெதுவாக ரேடியோ ஒலியைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் எதிர்வினை ஆற்றத் தொடங் கினார் மினு. உடனே பியானோ கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் ட்ரூவே. உடல் நலம் முன்னேறியது.

திடீரென்று ஒருநாள் தனக்கு ஆறுதலாக இருந்த மரத்தைப் பற்றிக் கவிதை எழுதினார் மினு. அடுத்து வானத்தைப் பற்றி ஒரு கவிதை. அதற்கு அடுத்து மழையைப் பற்றி ஒரு கவிதை. இப்படி நீண்டுகொண்டே இருந்த மினுவின் கவிதைகளைப் படித்து மிகவும் ஆச்சரியப்பட்டார் பியானோ ஆசிரியர்.

புகழ்பெற்ற விஞ்ஞானி லூயி பஸ்தேரின் பேரன், பேராசிரியர் பஸ்தேரின் வாலரியிடம் கவிதைகள் குறித்துச் சொன்னார் ஆசிரியர். அவருக்குத் தெரிந்த பதிப்பாளர் ஒருவருக்கு எட்டு வயது மினுவின் கவிதைகள் குறித்துக் கடிதம் எழுதினார், பஸ்தேர் வாலரி.‌

பதிப்பாளர் ரெனே ஜுலியட், மினுவையும் அவர் அம்மாவையும் பாரிஸ் வரச்சொன்னார். மினுவின் கவிதைகள் ரெனேவை ஈர்த்தன. 48 பக்கங்கள் கொண்ட மினுவின் கவிதைகளை 500 பிரதிகள் அச்சடித்தார். பிரெஞ்சு இலக்கிய உலகத்துக்குள் மினுவின் கவிதைகள் நுழைந்தன. எட்டு வயதில் கவிதைப் புத்தகம் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஆனால், அங்கிருந்துதான் இந்தக் குழந்தை மேதையின் துயரக் கதை ஆரம்பமானது.

பிரான்ஸ் நாட்டில் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். புத்தகம் வெளிவந்த சில வாரங்களில் மினுவைப் பற்றிய செய்திகள் பல நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வெளிவந்தன. சில பத்திரிகைகள், ‘இதோ ஒரு குழந்தை மேதை! பிரெஞ்சு மொழிக்குக் கிடைத்த பொக்கிஷம்!’ என்று மினுவைத் தூக்கிவைத்துக் கொண்டாடின! இன்னும் சில பத்திரிகைகள், ‘எட்டு வயதில் எப்படி இவ்வளவு அழகான, ஆழமான கவிதைகளை எழுத முடியும்? இது அவள் அம்மா ட்ரூவே எழுதியது’ என்று செய்தி வெளியிட்டன.

‘எல்லி’ என்கிற பத்திரிகை மினுவின் வீட்டுக்கே சென்று, அவரின் அன்றாட நடவடிக்கைகளைப் பார்த்து, ஒரு கட்டுரை வெளியிட்டது. இப்படி நூற்றுக்கணக்கான பத்திரிகை யாளர்களும் இலக்கிய விமர்சகர்களும் மினுவின் வீட்டுக்குப் படையெடுத்துச் சென்றார்கள்.

இயல்பாகத் தன் திறமையை வெளிப்படுத்திய மினுவுக்கு, பலவித சோதனைகளைத் தாண்ட வேண்டியிருந்தது. மினு எழுதிய கவிதைகளை, கையெழுத்து நிபுணர்களை வைத்துப் பரிசோதித்தார்கள்.‌ ஒருகட்டத்தில் பதிப்பாளர் ரெனேவுக்கும் சந்தேகம் வந்ததால், மினுவைத் தனி அறையில் வைத்து கவிதை எழுதச் சொன்னார். 15 நிமிடத்திற்குள் ஒரு கவிதை எழுதி அசத்திவிட்டார் மினு!

அடுத்து அம்மா ட்ரூவேவுக்குக் கடிதம் எழுதச் சொன்னார். ‘அன்பு அம்மா... என் பிஞ்சுக் கரங்களால் உங்கள் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறேன். விரைந்துவந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். என் சின்ன இதயம் துன்பத்தால் வாடியிருக்கிறது’ என்று எழுதினார். மினுவை வாழ்த்திய ரெனே, புத்தகத்தைத் தரமாகக் கொண்டுவருவதாகச் சொன்னார்.

1956ஆம் ஆண்டு மினுவின்‌ அடுத்த புத்தகம் ‘மரம் என் நண்பன்’ என்கிற பெயரில், அவரின் ஒன்பதாவது வயதில் வெளியானது. அச்சிட்ட சில மாதங்களிலேயே 45 ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பனையானது. மினுவின் புகழ் பிரான்ஸ் முழுவதும் பரவியது. புகழ்பெற்ற நடிகை மேட்லெய்ன் ரெனாட் மினுவின் கவிதைகளைத் தன் பாடலில் பயன்படுத்திக்கொண்டார். இசைக் கலைஞர் மைக்கேல் அட்டனாக்ஸ்‌, ‘மினு ட்ரூவே ஸ்டாம்ப்’ என்கிற ஜாஸ் பாடலை வெளியிட்டார். இத்தனைக்குப் பிறகும் மினுவைச் சுற்றிய சந்தேகம் விலகவில்லை.

எழுத்தாளர், இசைக்கலைஞர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, களங்கத்தைத் துடைக்க முயன்றார் மினு. தனி அறையில் உட்காரவைத்து இரண்டு தலைப்புகளுள் ஒன்றைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார்கள். ‘பாரிஸ் நகர வானம்’ என்று மினு எழுதிய கவிதையை வாசித்து வியந்து போனார்கள்.

அமைச்சர்களைச் சந்தித்தார். பெரிய கலைஞர்களோடு உரையாடினார். 1957ஆம் ஆண்டு வாடிகனுக்குச் சென்று பன்னிரண்டாம் போப் பயஸோடு பேசினார். மினுவின் புகழ் பரவியது. அடுத்தடுத்து புத்தகங்கள் வெளிவந்தன.‌

சில ஆண்டுகளில் மினுவின் அம்மா ட்ரூவே பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். மினு வெளியுலகத் தொடர்பைக் குறைத்துக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார். 1993 வரை மினுவைப் பற்றிய தகவலே இல்லை. அதே ஆண்டு ‘எனது உண்மை’ என்கிற சிறிய சுயசரிதையை வெளியிட்டார் மினு. ஆனால், மீண்டும் வெளியுலகத் தொடர்பில் இருந்து காணாமல் போனார்.

ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்த குழந்தை மேதையின் புத்தகங்கள் இன்று பாரிஸ் கடைகளில் இல்லை!

(மேதைகளை அறிவோம்)

- இஸ்க்ரா, iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in