

பூந்தென்றல் புத்தகப் பையோடு, பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த வழியே ஒரு தாத்தா, கிளிக்கூண்டைப் பிடித்துக்கொண்டு கடந்து சென்றார்.
கூண்டுக்குள் இருந்த கிளியைப் பார்த்ததும் பூந்தென்றலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ராஜு வீட்டில் கிளிகளைப் பார்த்ததில் இருந்து அவளுக்கும் கிளி வளர்க்க ஆசை. ஆனால், அம்மாவும் அப்பாவும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பையுடன் தாத்தாவை நோக்கி ஓடினாள் பூந்தென்றல்.
“தாத்தா, கொஞ்சம் நில்லுங்க. இந்தக் கிளியை எங்கே கொண்டுட்டுப் போறீங்க?”
“செண்பகத் தோட்டத்துக்குப் பக்கத்துல விட்டுடப் போறேன்மா.”
“இதை என்கிட்ட கொடுத்தீங்கனா, நான் ரொம்ப நல்லா வளர்ப்பேன் தாத்தா” என்றாள் பூந்தென்றல்.
கிளிக்குச் சுதந்திரம் கொடுக்க நினைத்த தாத்தா, பூந்தென்றலின் ஆர்வத்தைப் பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார். கிளிக் கூண்டை அவளிடம் கொடுத்துவிட்டு, வந்த வழியே திரும்பிச் சென்றார்.
தாத்தா கேட்டவுடன் கொடுத்துவிடுவார் என்பதை எதிர்பார்க்காத பூந்தென்றல், அவரையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்னம்மா, இப்படிப் பண்ணிட்டியேம்மா...” என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டாள் பூந்தென்றல்.
“என்ன, தேடறே? கூண்டுக்குள்ள பாரு” என்று கோபத்துடன் கூறியது கிளி.
“ஏய்... கிளியா? கிளி பேசும்னு கேள்விப் பட்டிருக் கேன். ஆனா, இப்படிப் பேசும்னு நான் நினைக்கல.”
“நேற்று தாத்தா கபாலிபடம் பார்த்தார். அதுலபறவைகளைக் கூண்டுக் குள்ள அடைச்சு வைக்கிறது தப்புன்னு கபாலி சொன்னார். அதைப் பார்த்துட்டுதான், தாத்தா என்னை வெளியில்விட நினைச்சார். நானும் கபாலிக்கு ஒரு நன்றி சொல்லிட்டு, சுதந்திரமாகத் திரியப் போகும் நேரத்துக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். நீ குறுக்கால வந்து, என்னைக் கேட்டதும் என்னைத் தூக்கி உங்கிட்ட கொடுத்துட்டார்” என்று வருத்தப்பட்டது கிளி.
பூந்தென்றலுக்கும் வருத்தமாகி விட்டது. “எனக்குக் கிளி வளர்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இந்த ராஜு வீட்டில் இருக்கும் கிளிகளைப் பார்க்கப் போவேன். ஆனா, அவன் சில நேரம்தான் பார்க்க விடுவான். நீ எங்க வீட்டுக்கு வந்தீனா, உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். நல்ல சாப்பாடு தருவேன்” என்றாள் பூந்தென்றல்.
“தங்கக் கூண்டில் வச்சு சாப்பாடு கொடுத்தாலும் என் சுதந்திரத்துக்கு அது ஈடாகுமா?”
“அப்படினா, நீ என்கூட வர மாட்டியா?”
“நிச்சயம் வருவேன். ஆனா, இப்ப இல்ல.”
“நாளைக்கா?”
“அதுக்குக் கொஞ்ச காலம் ஆகும். உங்க வீட்ல மரம் வளர்க்கிற அளவுக்கு இடம் இருக்கா?”
“ஓ... வீட்டுக்குப் பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கு.”
“அதுல ஒரு கொய்யா மரத்தை நட்டு, தண்ணி ஊத்தி வளர்த்துக்கிட்டு வா. ஒருநாள் உங்க வீட்டுக்கு நானும் என் உறவினர்களும் வர்றோம். சரியா?”
“ஒருநாள் மட்டுமா?”
“இல்ல, தினமும் வருவோம். உன்கூடப் பேசுவோம். விளையாடு வோம். சாப்பிடுவோம்.”
“உனக்கு எங்க வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா?”
“ஓ... அது ஒண்ணும் கஷ்டமில்ல. இந்தப் பகுதியிலேயே கொய்யா மரங்கள் கிடையாது. அதனால சுலபமா வந்துடுவோம். நீ கவலைப்படாதே.”
“உன்னை நம்பி விடறேன். கண்டிப்பா வரணும்.”
பூந்தென்றல் கூண்டைத் திறந்தவுடன் நன்றி சொல்லிவிட்டு, உற்சாகமாகப் பறந்து சென்றது கிளி.
அப்பாவிடம் சொல்லி ஒரு கொய்யா கன்றை வாங்கி வரச் சொன்னாள் பூந்தென்றல். அந்தக் கொய்யா மரக்கன்று விரைவில் வளரக்கூடிய ரகமாக இருந்தது.
ஒரு நாள் காலை கிளிகளின் கீச்சுக் குரல்களைக் கேட்டு, கண்விழித்தாள் பூந்தென்றல். வேகமாகப் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஓடினாள். அங்கே ஏராளமான கிளிகள் கொய்யா மரத்தில் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன.
“நீ சொன்னது போலவே வந்துட்டே! ஆனா, இந்தக் கொய்யா மரம் இன்னும் காய்க்க ஆரம்பிக்கல. உங்களுக்குச் சாப்பிட மரத்தில் பழங்களே இல்ல.”
“இதுக்குப் போய் வருத்தப்படலாமா, பூந்தென்றல்? கொய்யாப்பழம் இருந் தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இனி தினமும் இந்த மரத்துக்கு வருவோம். நீ கவலைப்படாதே” என்றது கிளி.
சில வாரங்களில் கொய்யா மரம் பூக்க ஆரம்பித்தது. அவற்றில் ஒரே ஒரு காய் மட்டும் உருவாகி, பழமாக மாறியது. அன்று கிளிகள் வருவதற்கு முன்பே எழுந்து வந்த பூந்தென்றல், கொய்யாப்பழத்தைக் கண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
அப்போது கிளிகள் வந்து மரத்தில் அமர்ந்தன.
“வாங்க, வாங்க! உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தேன். இதோ, கொய்யா மரத்தில் காய்த்த முதல் கொய்யாப்பழம் உங்களுக்காக. ஆசை தீரப் பசியாறுங்கள்” என்று மகிழ்ச்சியோடு, பழம் இருக்கும் திசையைக் காட்டினாள் பூந்தென்றல்.
“அந்த முதல் பழம் உனக்குத்தான் பூந்தென்றல்!” என்றது கிளி.
“இல்லை... இல்லை... உங்களுக்குத் தான். சாப்பிடுங்கள்.”
“இந்தப் பழம் காயாக இருந்தபோதே பார்த்துட்டுதான் இருக்கோம். உனக்காகத்தான் பத்திரப்படுத்தி வச்சிருக்கோம். நீ இதைச் சாப்பிடு. அடுத்து காய்க்கும் பழங்களை நாங்கள் சாப்பிடுறோம்” என்றது கிளி.
“இதை நான் சாப்பிடுவது சரியல்ல.”
“நீதான் பறவைகளைக் கூண்டில் அடைச்சு வளர்க்கக் கூடாது. அதுக்குப் பதிலாக வீட்டில் மரம் வளருன்னு சொன்ன, என் கோரிக்கையை ஏத்துக்கிட்டு, அதைச் செஞ்சும் காட்டியிருக்கே. நீதான் இந்தப் பழத்தைச் சாப்பிடணும் பூந்தென்றல்.”
“நான் உன்னைக் கூண்டுக்குள் அடைச்சிருந்தா, ஒரு கிளியோட நட்புதான் கிடைச்சிருக்கும். சுதந்திர மாகப் பறக்கவிட்டதால, இருபது கிளிகளோட நட்பும் அன்பும் கிடைச்சிருக்கு! இதைவிட இந்தக் கொய்யாப்பழம் எனக்குப் பெரிய விஷயமில்ல. சாப்பிடுங்கள்” என்று பூந்தென்றல் சொல்ல, ஒரு பழத்தை அத்தனை கிளிகளும் கொத்திச் சாப்பிட ஆரம்பித்தன!