குழந்தை மேதைகள் 05: அமைதியின் இளவரசி போகாஹான்டஸ்

குழந்தை மேதைகள் 05: அமைதியின் இளவரசி போகாஹான்டஸ்
Updated on
2 min read

கடந்த காலத்தில் வரலாற்றை ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் இருந்தவர்களுமே பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் ஒரு வரலாறை நல்லதாகவோ மோசமாகவோ காட்டிவிடலாம். அப்படி அதிகாரத்தில் இருந்தவர்களால் கொண்டாடப்பட்ட பெயர்களில் ஒன்று போகாஹான்டஸ். நவீன அமெரிக்க வரலாற்றில் அமைதிக்கான அடையாளமாகக் காட்டப்பட்டிருக்கிறார் இவர்.

400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமெரிக் காவுக்குச் சென்றால், இன்றைக்கு இருக்கும் வர்ஜீனியா மாகாணத்தை நம்மால் பார்க்க முடியாது. அதற்குப் பதில் வெரோவொகொமொகொ என்கிற பழங்குடி கிராமம்தான் இருந்திருக்கும். அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் அங்கு வசித்துவந்தனர்.

கி.பி. 1595ஆம் ஆண்டு பழங்குடி மக்களின் தலைவர் பாவ்ஹட்டனுக்கு ‘மடோக்கா’ என்கிற பெண் குழந்தை பிறந்தது. எந்த நேரமும் விளையாடிக்கொண்டும் புத்திசாலியாகவும் தைரியமானவளாகவும் இருந்த அந்தக் குழந்தைக்கு, ‘சுட்டிப் பெண்’ என்று பொருள்படும் ’போகாஹான்டஸ்’ என்கிற பெயரை வைத்துவிட்டனர்.

கி.பி.1607ஆம் ஆண்டு போகாஹான்டஸின் கிராமத்துக்கு மூன்று ஆங்கிலேயக் கப்பல்கள் வந்தன. அவள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. பிரிட்டன், காலனிகளை விரிவாக்கும் எண்ணத்தில் உலகம் எங்கும் நாடுகளைப் பிடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. இயற்கை வளம்மிக்க பாவ்ஹட்டனின் கிராமத்துக்குள் வழக்கம்போல் வியாபாரம் என்கிற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்தனர்.

பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சினர். தங்கள் நிலங்களைப் பறிக்கப் போகிறார்கள் என்பதை பாவ்ஹட்டன் மிகச் சரியாக கணித்தார். ஆனால், 12 வயது போகாஹான்டஸுக்கு ஏனோ அவர்களைப் பிடித்துப் போனது. அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள், எதை உடுத்துகிறார்கள் என்று ஆர்வத்தோடு கவனித்தாள்.

பழங்குடி மக்களோடு ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். இங்கிலாந்து அரசர் ஜேம்ஸின் நினைவாக ‘ஜேம்ஸ் டவுன்’ என்கிற நகரை நிர்மாணித்து, அங்கு கோட்டை கட்டினர். அங்கிருந்த கேப்டன் ஜான் ஸ்மித் மீது அன்பு செலுத்தினாள் போகாஹான்டஸ். கேப்டனுக்கு ரொட்டியும் மாமிசத் துண்டும் கொடுப்பாள். அவரிடமிருந்து மணிகளைப் பரிசாகப் பெற்றுக்கொள்வாள்.

கி.பி. 1608ஆம் ஆண்டு பாவ்ஹட்டன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு வந்த ஜான் ஸ்மித்தை பழங்குடி மக்கள் சிறைபிடித்தனர். போகாஹான்டஸ் அதிர்ந்து போனாள். அவள் தந்தை ஜான் ஸ்மித்துக்குத் தண்டனையை அறிவித்தார்.

ஜான் ஸ்மித்தை விட்டுவிடும்படி தந்தையிடம் மன்றாடினாள், போகாஹான்டஸ். மகள் கேட்கும்போது ஒரு தந்தையால் எப்படி மறுக்க முடியும்? விடுதலையானார் ஜான் ஸ்மித். தன் உயிரைக் காப்பாற்றிய சிறுமி போகாஹான்டஸின் பெயரை, கேப்டன் ஸ்மித் நன்றியுடன் எழுதி வைத்தார். அதன் மூலமே வரலாறு அவளை அடையாளம் காண்கிறது.

போகாஹான்டஸ் அடிக்கடி ஜேம்ஸ் டவுன் செல்வாள். கேப்டனுக்குத் தங்கள் மொழியைக் கற்றுக் கொடுத்தாள். போகாஹான்டஸ் ஜேம்ஸ் டவுன் வந்துசெல்வதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் நினைத்தனர். அவளைச் சிறைபிடித்து, பாவ்ஹட்டனிடம் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் உணவையும் பெற்றுக்கொண்டனர். ஆனாலும் போகாஹான்டஸை அவர்கள் கிராமத்துக்குத் திருப்பி அனுப்பவில்லை.

வேறு ஒரு நகருக்கு அனுப்பி, போகா ஹான்டஸுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆங்கிலேயப் பெண்ணைப் போல உடை, அலங்காரம் செய்விக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டு, ‘ரெபேக்கா’ என்கிற பெயரும் சூட்டப்பட்டது. ஜான் ரால்ஃப் என்கிற ஆங்கிலேயருக்குத் திருமணமும் செய்து வைக்கப்பட்டது.

இந்தத் திருமணத்தின் மூலம் ஆங்கிலேயர்களும் பழங்குடி மக்களும் சுமூகமாக மாறினர். ’போகாஹான்டஸின் அமைதி’ என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். பாவ்ஹட்டன் கொடுத்த நிலத்தில் புகையிலையைப் பயிர் செய்து, லண்டனுக்கு அனுப்பினார் ஜான் ரால்ஃப்.

ஒரு மகன் பிறந்த பிறகு போகாஹான்டஸ் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டன் சூழல் போகாஹான்டஸுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. நோயால் தாக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்கவில்லை. அமெரிக்காவுக்கு அவரை அழைத்துச் செல்வதற்குள் போகாஹான்டஸ் இறந்து போனார்.

அவர் உயிர் இழந்த செய்தி அறிந்து பாவ்ஹட்டனின் கிராமம் கொந்தளித்தது. சில ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த சமாதான உடன்படிக்கை காற்றில் பறந்தது. அமெரிக்கப் பூர்வகுடி மக்களுக்கும் ஆங்கிலேயருக்கும் நீண்ட காலம் சண்டை நடந்தது. இறுதியில் அமெரிக்கா பிரிட்டனின் மிகப்பெரிய குடியேற்ற நாடானது.

போகாஹான்டஸ் விருப்பத்துடன் உதவினாரா, அச்சுறுத்தலால் உதவினாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான பதில் இல்லை. பின்னர் ஆங்கிலேயருக்கு உதவிய அமைதிக்கான இளவரசியாக போகாஹான்டஸ் சித்தரிக்கப்பட்டார்! இன்றும் போகாஹான்டஸ் கதைகளிலும் திரைப்படங்களிலும் அமைதியின் இளவரசியாகவே வருகிறார். உண்மை என்னவென்று போகாஹான்டஸுக்குத்தான் தெரியும்.

(மேதைகளை அறிவோம்!)

- இஸ்க்ரா, iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in